செய்திகள்

மனு அளித்த ஒரு மணி நேரத்தில் ஆதரவற்ற பெண்ணுக்கு அரசு பணி

தூத்துக்குடி, அக். 12–

தூத்துக்குடி மாவட்ட குறைதீர் கூட்டத்தில், மனு அளித்த ஒரு மணி நேரத்தில் பெண் ஒருவருக்கு அரசு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் குறைதீர் கூட்டம், பல மாதங்களாக நடைபெறவில்லை. இதையடுத்து, அக்டோபர் மாதத்திலிருந்து குறைதீர் கூட்டங்களை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. அதன்படி, இரண்டாவது வாரமாக நேற்று அனைத்து மாவட்டங்களிலும் குறைதீர் கூட்டங்கள் நடைபெற்றன.

ஒரு மணிநேரத்தில் பணி

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், தபால் தந்தி காலனியைச் சேர்ந்த தெய்வானை என்பவர், கலெக்டர் செந்தில்ராஜை சந்தித்து மனு அளித்தார். அதில், “கடந்த மே மாதம் என் கணவர் இறந்து விட்டார். எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதில் ஒருவர் மனவளர்ச்சி குன்றியவர். மற்றொருவர் இதய குறைபாட்டுடன் பிறந்தவர். இப்படியான சூழ்நிலையில், கணவர் இறந்த பிறகு வருமானம் இன்றி தவித்து வருகிறேன். அதனால், வருமானத்துக்கு வழிசெய்ய ஏதேனும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

தெய்வானை என்பவரின் மனுவை பரிசீலனை செய்த தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ், மனு அளித்த ஒரு மணி நேரத்தில், தூத்துக்குடி சிப்காட் நில எடுப்புப் பிரிவில் உதவியாளராகப் பணியாற்ற தற்காலிகப் பணி ஆணையை அவரிடம் வழங்கியுள்ளார்.

இதுகுறித்து தெய்வானை கூறுகையில், “எனது நிலைமையை புரிந்துகொண்டு, உடனடியாக தற்காலிக பணி ஆணையை வழங்கிய கலெக்டருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நன்றி என்று கூறினார்.

ஒரு மணி நேரத்தில் வீடு

அதுபோன்று கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், காந்தி கிராமத்தைச் சேர்ந்த சந்திரா என்பவர் கலெக்டரிடம் கோரிக்கை மனுவை அளித்தார். அதில், தான் கணவரால் கைவிடப்பட்டு, மாற்றுத்திறனாளி மகனுடன் ஆதரவற்ற நிலையில் இருப்பதால், குடியிருக்க வீடு வழங்க கோரி மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை பரிசீலித்த கலெக்டர் பிரபு சங்கர், அப்பெண்ணுக்கு காந்தி கிராமத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், மாற்றுத்திறனாளி மகனை எளிதில் அழைத்து செல்ல ஏதுவாக தரைதளத்தில் வீடு ஒதுக்குமாறும், சக்கர நாற்காலி சென்றுவர ஏதுவாக சாய்தள வசதிகள் செய்துதருமாறும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர். அதன்படி, ஒரு மணி நேரத்திலே அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டதற்கான ஆணையை அப்பெண்ணிடம் கலெக்டர் வழங்கினார்.

இரு சம்பவங்களிலும், மனு அளித்த ஒரு மணி நேரத்திலேயே, கோரிக்கையை நிறைவேற்றிய கலெக்டர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *