செய்திகள்

மனித உரிமை மீறல்கள்: இஸ்ரேலுடன் உறவை துண்டித்த ஸ்பெயின் நகரம்

மாட்ரிட், பிப்.11–

பாலஸ்தீனத்தில் தொடர்ந்து திட்டமிட்டு மனித உரிமைகளில் இஸ்ரேல் ஈடுபடுவதால், பார்சிலோனா நகருக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான உறவை தற்காலிகமாக துண்டிப்பதாக பார்சிலோனா நகர மேயர் அடா கொலாவ் அறிவித்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்று பார்சிலோனா. சர்வதேச நகரான பார்சிலோனாவின் மேயராக இருப்பவர் இடதுசாரி தலைவரான அடா கொலாவ். பார்சிலோனாவுக்கும், இஸ்ரேலின் டெல்அவிவ் மற்றும் காஸா நகரங்களுடன் கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளது. ஆனால் தற்போது இந்த உறவுகள் அனைத்தையும் பார்சிலோனா மாநகரம் தற்காலிகமாக துண்டிப்பதாக தெரிவித்துள்ளது.

துண்டித்தது ஏன்?

இதுதொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவுக்கு அடா கொலாவ் கடிதம் எழுதியுள்ளார். அதில், திட்டமிட்ட வகையில் பாலஸ்தீனத்தில் மனித உரிமை மீறல்களை இஸ்ரேல் அரசு அரங்கேற்றி வருகிறது. இதை உடனடியாக நிறுத்துவதோடு, சர்வதேச சட்டங்களையும், ஐ.நா. தீர்மானங்களைக் கடைப்பிடிப்பதையும் இஸ்ரேல் உறுதி செய்ய வேண்டும். அதுவரை, இஸ்ரேல் நாட்டு நகரங்களுடனான எங்களது உறவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம் என்று கூறி உள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இஸ்ரேலியத் தரப்பும், பாலஸ்தீனியர்களும் இணைந்து செயல்பட முன்வர வேண்டும். அதுதான் மத்திய கிழக்கில் அமைதி நிலவ உதவும். நாங்கள் பொதுவாக சர்வதேச பிரச்சினைகளில் தலையிடுவதில்லை. இருப்பினும், 100க்கும் மேற்பட்ட அமைப்புகள், 4000க்கும் மேற்பட்ட குடிமக்கள், இஸ்ரேல் உறவைத் துண்டிக்க வேண்டும் என்று கோரி வந்தனர். அதை ஏற்றே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அடாவின் முடிவை இஸ்ரேல் கண்டித்துள்ளது. இஸ்ரேல் ராணுவ அமைச்சக செய்தித் தொடர்பாளர் லியார் ஹயாட் கூறுகையில், இது பார்சிலோனா மக்களின் விருப்பத்திற்குப் புறம்பான முடிவு. இதைக் கண்டிக்கிறோம் என்றார். இதேபோல ஸ்பெயின் நாட்டில் உள்ள யூதர் சமுதாய சம்மேளனமும் மாநகர மேயரின் இந்த முடிவைக் கண்டித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *