சிறுகதை

மனிதாபிமானம்! – இரா. இரவிக்குமார்

வள்ளியின் பத்தாவது வயதில் அவள் அம்மா இறந்தபோது அநாதையானாள். அம்மாவிடம் கற்றுக் கொண்ட தோசை சுடும் தொழில்தான் வள்ளிக்கு கைகொடுத்தது. சுட்ட தோசைகளைச் சாப்பிட வருபவர்களுக்குப் பக்கத்து வீட்டுப் பாட்டி பரிமாறவும் கறாராகப் பேசி காசு வாங்கவும் உதவினாள்.

அடுத்த எட்டு வருடம் கழித்து அந்தப் பாட்டி மரணமடைந்தபோதுதான் கோயில் குருக்கள் வள்ளிக்கு கோயில் செல்லும் பாதையின் வெளிப் பிரகாரத்தின் வெளியே சின்னதோர் இடத்தை இவளுக்காகப் பேசி கடை போடச் சொன்னார்.

முதலில் தயங்கியவளிடம் அவர் சொன்னார், ‘‘வள்ளி, கோயிலுக்குக் காலையிலும் மாலையிலும் தான் கூட்டம் வரும். அங்கே வர்றவங்க கண்டிப்பா உங்கிட்ட டிஃபன் வாங்கிச் சாப்பிடுவாங்க. தனியா வீட்ல துணையில்லாத உனக்கு இனிமே பாட்டி இல்லாம வியாபாரம் செய்யறது கஷ்டம். நாலு பேரு வந்து போனா என்ன நடக்கும்னு சொல்ல முடியாது. அங்க எங்க பாதுகாப்பும் மத்தக் கடைக்காரங்களும் உனக்கு ஆதரவா இருப்பாங்க.”

கடை போட்டபின் அவளுக்கு உதவ வந்தவன்தான் எட்டு வயது சீனு. அவனும் அநாதைதான். தன்னைப் போல் பெற்றோரை இழந்து பிழைப்புத் தேடி கோயிலை நாடியவன். அவளுக்குப் பாத்திரங்கள் தட்டுகள் கழுவிக் கொடுப்பது முதல் வருபவர்களுக்குத் தோசை கொடுப்பது, காசு வசூலிப்பது என்று எல்லாவற்றிலும் உதவினான். வள்ளி தோசை சுடும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் அங்குள்ள கடைக்காரர்களுக்கு டீ, காபி, ஏன் வள்ளியின் தோசை எல்லாம் வாங்கிக் கொடுப்பான்.

அந்தக் கோயில் கடை வீதியில் அவன் எல்லோராலும் விரும்பப்படுபவன்.

அன்று அங்குள்ள கடை ஒன்றில் சீனு பரண்மீது ஏற முயன்றவன் கால் இடறிக் கணுக்கால் பிசகி நடக்க முடியாமல் கஷ்டப்பட்டான். அவன் காலில் ஏற்பட்ட ஊமைக் காயத்தால் தன் கை ஊனமுற்றதுபோல் உணர்ந்தாள் வள்ளி.

“வள்ளி, இங்கிருந்து அறுபது மைல் தொலைவிலிருக்கும் பண்டாரவிளை கிராமத்திற்கு அவனைக் கொண்டுபோய் வைத்தியரிடம் கட்டுப் போட்டா குணமாகும்!” என்றார் காலையில் தோசை சாப்பிட வந்த தேங்காய்க் கடைக்காரர். அங்கு போய்வரச் செலவுக்கு அவர் ஐம்பது ரூபாய் வள்ளியிடம் கொடுத்தார்.

தன் மனதில் அவர்கள் மேல் ஏற்பட்ட மதிப்பையும் நன்றியையும் அவள் வார்த்தைகளால் கூறியபோது அவர்கள் ஒரே மாதிரியாகச் சொன்னார்கள்,

“வள்ளி, சீனு உனக்கு என்ன உறவா ஆனா, அவனை நீ சொந்தத் தம்பியை விட அதிகமா அவனக் கவனிக்கிறே. அவனும் உன் மீது பாசமும் உன் தேவைகளை அறிந்து எல்லா வேலைகளையும் செஞ்சு தரான். உன்னாலேயும் அவனாலேயும் நாங்க பசியில்லாமல் எங்க வேலையைத் தெம்பாவும் நல்லாவும் பண்ண முடியுது. எங்க வியாபாரம் நல்லா நடக்கிறதுக்கு நீங்களும் உதவி பண்றீங்க. அப்படி இருக்கும்போது இங்கே தாயா பிள்ளையா பழகும் நமக்கு உடம்புக்கு ஏதாச்சும் ஒன்னு வந்தா நமக்குள்ளேதானே உதவி செஞ்சு பார்த்துக்கணும்!”

எத்தனை சத்தியமான வார்த்தைகள்!

இப்படிக் கடைக்காரர்கள் ஆளாளுக்கு உதவ இன்னும் மனிதாபிமானம் வாழ்கிறது என்பதை உணர்ந்தாள் வள்ளி.

ஆண்டவன் யாரையும் அநாதைகளாகப் படைப்பதில்லை; அவன் மனிதாபிமானத்தை எல்லோருக்கும் கொடுத்திருக்கிறான் என்று நினைத்தபடியே சீனுவை வைத்தியரிடம் கட்டுப் போட அழைத்துச் சென்றாள் வள்ளி !

புதிய நம்பிக்கை ஒளி வெளிச்சத்தில் வேகமாக நடைபோட்டாள் வள்ளி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *