செய்திகள் வாழ்வியல்

மனிதம் மறந்த மனிதர்களை விட்டு வெகுதூரம் சென்ற சிட்டுக்குருவிகள்

உலக சிட்டுக்குருவி தினம் மார்ச் 20

உலக சிட்டுக்குருவிகள் தினம் இன்று. வீட்டு முற்றத்திலும், கொள்ளைப்புறத்திலும் அழையா விருந்தாளியாக வந்தமரும் இந்த மென்மையான குருவி இனம் இன்று காணாமல் போனது.

மனிதம் மறந்த மனிதர்களை விட்டு வெகுதூரம் சென்ற குருவி இனங்களை மீட்டு கொண்டு வரும் பணியில் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் ஈடுபட்டு வரும் நிலையில், கோவையை சேர்ந்த பாண்டியும் தனது பங்கிற்கு களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார்.

தனது பணிகள் குறித்து அவர் கூறுகையில், சிட்டுக்குருவி உணவு, வாழ்விடம் என இரண்டிலுமே மனிதனை சார்ந்து வாழும் பறவை இனம். அதற்கு மரத்தில் கூடுகட்ட தெரியாது. மரப்பொந்துகள், வீடுகளில் மட்டுமே கூடு கட்டும்.

ஓட்டுவீடுகளின் சந்துகளில் நார்களை வைத்து கூடுகளை கட்டி முட்டையிட்டு குஞ்சு பொரித்து வந்தது. அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகியதால் இந்த குருவிகள் தனக்கான வாழ்விடத்தை தேடி இடம்பெயர்ந்து விட்டது.

விவசாயிகளின் நண்பன்

சிட்டுக்குருவிகள் தனது குஞ்சுகளுக்கு முதலில் எளிதில் ஜீரணமாகும் வகையில் செடி கொடி தாவரங்களில் காணப்படும் புழுக்களை உணவாக தரும். இதனால் புழுக்களின் தாக்கத்திலிருந்து செடி கொடிகள் பாதுகாக்கப்படுகிறது. இதனால் விவசாயிகளின் நண்பன் என சிட்டுக்குருவிகள் அழைக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் வீட்டின் முன்புறத்தில் வேலிகள் இருந்தது. வேலிகளில் படர்ந்து கிடக்கும் செடிகளில் இவைகள் ஓய்வெடுக்கும். தற்போது மதில் சுவர் இருப்பதால் இந்த குருவிகள் ஓய்வெடுக்க இடம் இல்லை. குருவிகளுக்காக வீட்டின் முன்பு மருதாணி, மாதுளை மரங்களை வளர்க்கலாம்.

நீலகிரியில் சிட்டுக்குருவிகள் அதிகரித்து வருகிறது. கொடைக்கானலில் கூட்டம் கூட்டமாக உள்ளது. காரணம் அங்கெல்லாம் வீடுகள் பழமை மாறாமல் உள்ளது.

செல்போன் டவர்கள்

சிட்டுக்குருவிகள் அழிவதற்கு காரணம் செல்போன் டவர்கள் என பொதுமக்களிடையே தவறான கருத்து உள்ளது.

செல்போன் டவர்கள் காரணம் என்றால் தேன்சிட்டுகள் வாழ்கிறதே. இது இரண்டு கொய்யா இலைகளை வைத்தே முட்டை இட்டு குஞ்சு பொரித்து விடும்.

செல்போன் டவர்கள் காரணம் என்றால் பறவைகள் முட்டையிடாது. அப்படியே முட்டையிட்டாலும் குஞ்சுகள் ஊனமாக இருக்கும்.

செல்போன் டவர்கள் அருகில் உள்ள கடைகளின் ஷட்டர்களில் இந்த குருவிகள் கூடு கட்டுகிறது. அதுபோன்ற கடைகளில் கூடுகளை தொடர்ந்து வைத்து வருகிறோம். இதில் குருவிகள் முட்டையிட்டு குஞ்சுகளை பொரித்து ஆரோக்கியமாகத்தான் இருந்து வருகிறது.

இதன் மூலம் சிட்டுக்குருவிகள் அருகி வருவதற்கு காரணம் செல்போன் டவர்கள் இல்லை என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம். சிட்டுக்குருவிகள் அழியவில்லை. இடம் பெயர்ந்து விட்டது.

இலவசமாக கூடுகள்

மீண்டும் இந்த குருவிகளை நம் வாழ்விடத்துக்கு அழைத்து வரும் பணியைத்தான் எங்கள் சிட்டுக்குருவிகள் பாதுகாப்பு மையம் செய்து வருகிறது.

லேத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து மாதம்தோறும் எங்களது சம்பளத்தின் ஒரு பகுதியை இதற்காக ஒதுக்கி வைத்துவிடுவோம். அதன் மூலம் குருவிகளுக்கான கூடுகளை செய்து கொடுத்து வருகிறோம்.

கடந்த 6 வருடமாக தமிழகம் மட்டுமல்லாமல் ஒரிசா, பெங்களூர் வரை சுமார் 1500க்கும் மேற்பட்ட கூடுகளை அனுப்பி வைத்து உள்ளோம்.

சிட்டுக்குருவிகள் இருப்பிடம் அறிந்து கூடுகளை வைத்து கண்காணித்து வருகிறோம். உக்கடம், சுந்தராபுரம், சிங்காநல்லூர் பேருந்து நிலையங்களில் கூடுகள் வைக்கப்பட்டு உள்ளது. உக்கடத்தில் மட்டும் 30 கூடுகளை வைத்து உள்ளோம். கோவையில் மட்டும் 500 கூடுகளை வைத்து இருக்கிறோம்.

மூட நம்பிக்கைகள்

ஐடி இளைஞர்கள் உள்பட 15 பேர் இணைந்து இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறோம். பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

பொது மக்கள் தங்கள் பகுதிகளில் சிட்டுக்குருவிகள் இருப்பதை எங்களுக்கு தெரியப்படுத்தினால் கூடுகளை இலவசமாக கொடுக்க தயார். போக்குவரத்து செலவுகளை சம்மந்தப்பட்டவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு சிலர் மூடநம்பிக்கை காரணமாக கூடுகளை தவிர்த்து விடுகின்றனர்.

கோவை மாநகராட்சி சிட்டுக்குருவி பாதுகாப்பு திட்டத்தை துவக்கியது. இந்த திட்டத்தில், மகேந்திர பம்ப் அமைப்பு, க்யூப், கோவை மாநகராட்சி, சிட்டுக்குருவி பாதுகாப்பு இயக்கம் ஆகியவை இணைந்து பணியாற்றி வருகின்றோம்.

ஒவ்வெவாரு வன உயிரின் அழிவும் மனித பேரழிவுக்கே வழிவகுக்கும். மனித குல நன்மைக்காகவது சிட்டுக்குருவிகளை நாம் பாதுகாக்க வேண்டும் என்றார்.

* * *

  • ஷீலா பாலச்சந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *