ஆசிரியர் பி.எஸ். செல்வராஜ்
பக்கம்: 180 விலை ரூ.200
பதிப்பகம்:
சீதை பதிப்பகம்,
6ஏ/4, பார்த்தசாரதி சாமி தெரு,
திருவல்லிக்கேணி,
சென்னை–5, பேசி: 97907 06549.
இலக்கியங்கள் அனைத்தும், மனிதனை நெறிப்படுத்தி, நல்ல இலக்கு நோக்கி செலுத்தும் தன்மை கொண்டதுதான். கவிதை, சிறுகதை, நாவல் ஆகிய அனைத்து வடிவங்களுமே வெவ்வேறு தன்மையில் அதனை செய்து வருகிறது. மனிதம் என்ற தலைப்பில் 18 அத்தியாயங்களாக பி.எஸ்.செல்வராஜ் எழுதியுள்ள நாவல், விறுவிறுப்பாகவும் சிறப்பாகவும் கொடுத்துள்ளார் என்றே சொல்ல வேண்டும். அதற்கான மொழிநடை, நாவலாசிரியர் பி.எஸ். செல்வராஜூக்கு வாய்த்திருக்கிறது என்பதே அதற்கு காரணம். அத்துடன் நாவலில் உள்ள கதை மாந்தர்களுக்கு, அழகிய தமிழ் பெயர்களை சூட்டியுள்ளதும் பாராட்டத்தக்கது.
சிறப்பான உரையாடல்கள்
மேலும் உரையாடல் கலை, நாவலாசிரியருக்கு மிகவும் எளிதாக வருகிறது என்பதை நாவல் முழுக்க காண முடிகிறது. “மனிதர்களுக்கு எல்லாமே தெரிந்திருக்கிறது, ஆனால் மனிதாக இருப்பதற்கு மட்டும் தெரியவில்லை…”, “காதலுக்குள் காமமும், காமத்துக்குள் காதலும் மறைந்திருப்பது போல…”, “சொற்களை, நம் வீட்டு செல்லப்பிராணிகளும் கூட புரிந்து கொள்ளும், மவுனத்தை புரிந்து காெள்வதுதானே மனிதத்தின் சிறப்பு…”, “நான் யாருக்கும் அடிமையில்லை என்று சொல்லும் உரிமை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது, ஆனால் நீ எனக்கு அடிமை என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை…” என்பது உள்ளிட்ட ஏராளமான சொல்லாடல்கள் நாவல் முழுக்க நிறைந்துள்ளது.
அதிலும் சமூக சிந்தனை, இலக்கியம், வரலாற்று தகவல்கள் உள்ளிட்ட அனைத்தையும், வாய்க்கும் இடத்திலெல்லாம் பயன்படுத்தி நாவலை செழுமைப்படுத்தி உள்ளார் என்பது பாராட்டுக்குரியது. எடுத்துக்காட்டாக, இலக்கியனும் ரகுமானும் எப்படி அண்ணன் தம்பிகளாக இருக்க முடியும் என்ற மதுவின் கேள்விக்கு, திலீப்குமாராக பிறந்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானாக மாறவில்லையா? நாகூர் பாபுவாக பிறந்தவர் பாடகர் மனோ ஆகவில்லையா?… என்று சமகால வரலாற்றையும் பதிவிடுகிறார். அத்துடன், காதலனும் காதலியும் வீட்டுக்கு தெரியாமல் வெளியே செல்வதற்காக, கோயிலுக்கு போவதாக பொய் சொல்ல முடிவெடுக்கிறார்கள். அப்போது, காதலன் சொல்கிறான்…”கடவுள் பெயரை ஏமாற்றுக்காரர்கள்தான் பயன்படுத்துகிறார்கள் என்று தந்தை பெரியார் சொன்னது சரியாகத்தானே இருக்கிறது டயானா?…” என்பதெல்லாம் ‘நச்’ உரையாடல்கள் என்றே சொல்லா வேண்டும்.
மெய்யறிவுச் சிந்தனை
அதேபோல, ஒவ்வொரு அத்தியாயம் தொடங்கும்போதும், ஒரு குட்டி மெய்யறிவை–தத்துவத்தை தந்து தொடங்குவதும் சிறப்பு. அதில் சிலவற்றை குறிப்பிட வேண்டுமென்றால், “மதத்தை நேசிப்பவர்கள் மனிதத்தை இழப்பதும், தாய்மொழியை புறக்கணிப்பவர்கள் அறிவை இழப்பதும் சத்தியம்”, என்பதாகட்டும் “உண்மைகளை பொய்கள் வெல்லலாம், ஆனால் உண்மை ஒருநாள் பொய்களை அழித்துவிடும்”, என்பதையும் “புரியாதபோது தொடங்கி, புரிகிறபோது முடிவதுதான் வாழ்க்கை” போன்றவற்றை குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.
இத்தனை சிறப்பான நாவலில் இரண்டு குறைகளை காண முடிகிறது. ஒன்று பிழை, மற்றொன்று சிறு குறை என்று கூறலாம். முதல் அத்தியாயத்தின் முதல் பக்கத்தில், தொடக்க தடுமாற்றம் (Starting trouble) என்று சொல்லும் வகையில், சிறு குறை இருந்தாலும் அதன் பின்னர், வெகு சிறப்பாக ஒவ்வொரு அத்தியாயத்தையும் கொண்டு சென்று நிறைவு செய்திருப்பது பாராட்டத் தக்கது.
புரிதலில் பிழை
அதேவேளை, 5 வது அத்தியாயத்தில் உள்ள சிந்தனை பிழையை சுட்டிக்காட்டியே ஆக வேண்டும். ரகுமானை பள்ளியில் சேர்க்கும் போது, சான்றிதழில் சாதியை தவிர்க்க வேண்டும் என்றும் அதனால்தான் சமூகத்தில் சாதி நிலைபெற்றுள்ளது என்னும் பொருள்பட குறிப்பிட்டுள்ளார். இது அவருடைய புரிதல் பிழை அல்லது சிந்தனை பிழை என்றே சொல்ல வேண்டும்.
ஆங்கிலேயர் ஆட்சியில் கி.பி. 1800 களில்தான் அனைவருக்கும் கல்வி என்ற நிலை வாய்த்தது. அதற்கு முன்னர் மனு(அ)நீதிபடி பலருக்கும் கல்வி மறுக்கப்பட்டே இருந்தது. அப்போதும் இந்த சமூகத்தில் சாதி இருந்து கொண்டே தான் இருந்தது. சான்றிதழில் குறிப்பிடாமல் விட்டால், சாதிய சிந்தனை ஒழிந்து விடும் என்றால், ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்னர் சாதியே இருந்திருக்க கூடாது அல்லவா?
ஆரியர் பண்பாட்டு படையெடுப்புக்கு பிறகு, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்த சமூகத்தில் நுழைக்கப்பட்ட சாதி, மக்களின் மனங்களிலும் ஊர்ப்புர தெருக்களிலும் கூட வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. முக்கியமாக திருமணங்களில் அது அசைக்க முடியாமல் நிலைபெற்றுள்ளது. அங்கே சான்றிதழ்களையெல்லாம் யாரும் பார்ப்பதில்லை. படிப்பறிவே இல்லாத காலத்திலும், இன்றும் படிக்காத மக்களிடமும் கூட சாதிய சிந்தனை வேறோடி இருப்பதை நாவலாசிரியர் அறிய தவறியுள்ளார்.
வரலாறு சொல்வதென்ன?
சாதியால் ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுத்து முன்னேற்ற வேண்டும் எனும் இட ஒதுக்கீடு முறைக்காகவே, இந்தியாவில் யாருக்கெல்லாம் முன்னுரிமை தர வேண்டும் என்ற பட்டியல் ஆங்கிலேயர் ஆட்சியில் 1935 களில் தயாரித்து “Depressed class” என அட்டவணை படுத்தினர். அதனால்தான் அந்த சமூக மக்கள் “அட்டவணை சமூகத்தினர்” என்னும் பொருளில் “Scheduled class” என்று குறிப்பிட்டு, கல்வி வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க சான்றிதழில் சாதியை பதிந்தனர் என்பதே வரலாறு. அது பின்னர், 1950 களில் தொடங்கி, மேலும் யாருக்கெல்லாம் இட ஒதுக்கீடு தேவையோ அவர்களை கைதூக்கிவிட வளர்த்தெடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இடஒதுக்கீடு எதிர்ப்பை பேசியோரின் கருத்தே, சான்றிதழில் சாதி கூடாது என்பது. ஒருவேளை நாவல் எழுதிய காலத்தில், நாவலாசிரியருக்கு இருந்த புரிதல் குறைபாடு, இப்போது மாறியும் இருக்கலாம். ஆனாலும், அடுத்தடுத்த பதிப்புகளில் இதனை சரி செய்ய வேண்டியது அவசர அவசியம். மற்றபடி, நாவல் ஆசிரியரின் சிந்தனை வீச்சும், மொழி நடையும் ஒரு விறுவிறுப்பான சிறந்த நாவலை படித்த மனநிறைவை தருகிறது என்பதால் நெஞ்சார பாராட்டலாம், வாழ்த்தலாம். வாசிக்கும் யாரையும் கவரும் என உறுதியாக சொல்லலாம்.
–மா.இளஞ்செழியன்.