உள்ளத்தில் உறைகிறார் சசிகுமார்; தேசிய விருதுக்கு(ள்) நுழைகிறார் ஆர். மந்திரமூர்த்தி!
எரிமலையாய் வெடிக்கும் உணர்ச்சிப் பிழம்பு: ப்ரீதி அஸ்ரானி
சகோதரத்துவம்- சகோதரத்துவம் என்று இஸ்லாமிய பண்டிகை நாட்களில் வாழ்த்துச் செய்தியில் உச்சரித்துக் கொண்டிருக்கும் வார்த்தைக்கு, அதன் உள் அர்த்தத்துக்கு,- ஆழத்துக்கு,- ஆத்மார்த்தமான நட்புக்கு இதைவிட வேறு எப்படி சொல்ல முடியும்? என்பதை விழி திறந்து வழிகாட்டும் விதத்தில் சொல்லி இருக்கும் உன்னதச் சித்திரம்: சசிகுமாரின் நடிப்பில், அறிமுக இயக்குனர் ஆர். மந்திர மூர்த்தியின் இயக்கத்தில்: “அயோத்தி” (ட்ரைடெண்ட் அதிபர் ரவீந்திரன் தயாரிப்பாளர்).
சபாஷ், ஆர். மந்திர மூர்த்தி, முதல் படத்திலேயே சாமானியன், சரித்திர நாயகனாகி இருக்கிறார்.
அன்பு-–பரிவு- சகோதரத்துவம்-–மனித நேயம்: ஜாதி–மத–இன–மொழி கடந்தவை அல்லவா? 120.29 நிமிடத்தில் என்னமாய் மனதில் பதியன் போட்டிருக்கிறார் சகோதரத்துவத்தை, மார் தட்டிச் சொல்லலாம் இந்தியத் திரை உலகத்திற்கு இன்னொரு நேர்மறை இனிய உதயம் ஆர். மந்திரமூர்த்தி!
2023ஆம் ஆண்டு பிறந்து இன்றோடு 63 நாட்கள் ஆகி இருக்கும் நிலையில், எழுதி வைத்துக் கொள்ளுங்கள்:
தேசிய விருதைப் பறிக்கும் உணர்ச்சிச் சித்திரம்!
தேசிய விருதைப் பெறும் ஜனரஞ்சக இயக்குனர் ஆர். மந்திரமூர்த்தி! (இனி அழுத்தமாக உச்சரிக்கப்பட்டு பட உலகம் ஆராதிக்கப் போகும் பெயர்.)
ஒரு கண்ணில் சுண்ணாம்பு, மறு கண்ணில் வெண்ணெய் என்று பாரபட்சம் இல்லாத அணுகு முறையில் மத்திய தேர்வு குழுவினர் நடந்து கொள்ளும் பட்சத்தில்…
சின்னச் சின்ன கதாபாத்திரங்கள். ஒவ்வொன்றும் தலைகாட்டும் நேரம் என்னவோ அதிகபட்சம் 10 முதல் 12 நிமிடங்கள் தான்.
இருந்தாலும், ஒவ்வொருவரையும் பசுமரத்தாணி போல மனதில் ஆழமாய் இறங்க வைத்திருக்கிறார் இயக்குனர், அது என்ன மாயமோ… மந்திரமோ? (மூர்த்தி சிறுதானாலும் இனி கீர்த்தி பெரிதாகப் போகிறது. மக்கள் குரல் இதை ஊருக்கே சொல்லும்).
1. கிளைமாக்சில், தங்களின் பயணத்தை ரத்து செய்துவிட்டு இரண்டு டிக்கெட்டுக்காக பரிதவிக்கும் வட இந்திய குடும்பத்திற்கு தங்களின் டிக்கெட்டை தந்து உதவிடும் தாத்தா – பாட்டியா?
2. பயண டிக்கெட்டுக்காக ரூபாய் ஒரு லட்சம் பணத்தைப் புரட்ட, ஆசை ஆசையாய் வாங்கி வைத்திருக்கும் பைக்கை விற்றுவிட்டு உதவிடும் டிக்கெட் புக்கிங் ஏஜென்ட் நண்பனா?
3. தீபாவளி நாளில் – அதுவும் விடுமுறையில் “நோ எம்பார்மிங்” என்று கறாராகச் சொல்லிவிட்டு, தனியார் மருத்துவமனையில் இருந்து எம்பார்மிங் மருத்துவ உதவியாளரை அழைத்து வந்ததைப் பார்த்த ஆனந்த அதிர்ச்சியில், முகத்தில் லேசான புன்னகையை உதிர்க்கும் மருத்துவ டீனா?
4. “போஸ்ட் – மார்ட்டம் பண்ணினதே தெரியாதபடி சிரிச்ச முகத்தோடே பாடியை திரும்பத் தந்துடறேன்…” என்று உத்தரவாதம் அளித்து விட்டு, காசுக்கு கை நீட்டும் பிரேதம் அறுக்கும் மருத்துவ மனை அட்டெண்டரா?
5. “யோவ் என்னய்யா புரியாமப் பேசுறீங்க, உயிர் போச்சுன்னா அதை ஒரு டாக்டர் தான்யா சொல்லணும். அதை விட்டுட்டு ஏன் என் உயிரை வாங்குறீங்க…?” என்று கேட்டு நடு வழியில் ஆம்புலன்சிலிருந்து இறங்கி, சசிகுமார் விடும் ‘பளார்’ அறையில் புகார் தரும் எமர்ஜென்சி ஆம்புலன்ஸ் ஊழியரா? (டைரக்டர் சாய் ரமணி)
6. ‘‘ஒரு எழுத்து தானே தப்பாச்சு. ஒரு டெக்லரேஷன் கொடுத்துட்டு பாடியை கார்கோவில்ஏத்திடு…” என்று கனிவோடு சொல்லி நடக்கும் விமானப் பயண அதிகாரியா?
7. “ரெண்டு சீட்டு யாராச்சும் விட்டுக் குடுக்கிறீங்களா…” கேள்வி எழுப்பி, பரிதவிக்கும் வட இந்தியக் குடும்பத்துக்காக வக்காலத்துக்கு முன் நிற்கும் ஏர்ப்போர்ட் டெர்மினல் அதிகாரியா? (சேட்டன்).
8. மகளின் தலை தீபாவளி கொண்டாட்ட நேரத்திலும், அவசர உதவி கேட்டு கை பிசைந்து நிற்கும் சசிகுமாரின் நிலைமையை கண்டு, மனமிறங்கி சவப்பெட்டியை கொடுத்து, காசை அப்புறமாக் குடுப்பா… என்று ஆறுதல் வார்த்தை சொல்லிவிட்டு நகரும் போஸ் வெங்கட்டா?
9. போஸ்ட்மார்ட்டம் பண்ணக் காத்திருக்கும் நேரத்தில், தன் பாக்கெட்டிலேயே கையை விட்டு பணம் எடுக்கும் மருத்துவ அடெண்டரின் அடாவடி செயலுக்கு விளக்கம் தரும் போலீஸ் ஏட்டா?
10. ‘‘திருட்டுப் பயலே…’’ என்று பாடும் ஒரு பாடலுக்கு, காவல் நிலையத்திற்கு உள்ளேயே ஆட்டம் போட்டு, காவல் நிலையத்தையே கலக்கும் ஜேப்படி திருட்டு வாலிபனா? (கருப்பழகன்).
11. முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க ஒவ்வொரு கேசையும் டீல் செய்யும் கடுகடு போலீஸ் இன்ஸ்பெக்டரா?
12. டீன் வீட்டுக்குள் சசிகுமாரை அனுப்பாமல், உள்ளதைச் சொல்லி வெளியே நிறுத்தி வைக்கும் நேரம் – ஆம்புலன்ஸை அலற விட, அதைக் கண்டு பயந்து நடுங்கி சகிகுமாரின் காலில் விழும் செக்யூரிட்டியா?
இப்படி பத்தே நிமிடத்திற்கு தலை காட்டி இருக்கும் யாரை மறக்க முடியும்? வீட்டுக்கு வந்தும், அவர்களை எல்லாம் மறக்க முடியாமல் மனத்திரையில் ஓட விட்டு இருக்கிறாரே மந்திரமூர்த்தி, அது என்ன மாயம்- மந்திரம்?
தீபாவளி திருநாள். அயோத்தியில் இருந்து ராமேஸ்வரம் தீர்த்த யாத்திரைக்கு வரும் ஒரு வட இந்திய குடும்பம். மதுரையில் இருந்து ராமேஸ்வரம் புறப்பட்டு போகும் வழியில் திடீர் சாலை விபத்து. வழியில் குடும்பத் தலைவி அகால மரணம். அவளின் பிரேதத்தை சொந்த ஊருக்கே கொண்டு செல்வது எப்படி?
‘‘பிரேத பரிசோதனை கூடாது, கூடவே கூடாது…’’ என்று அடம் பிடித்து ஆத்திரத்தில் ஆவேச புயலாக மாறும் குடும்பத் தலைவன். எப்படியாவது சொந்த ஊருக்கு பிரேதத்தை அனுப்ப பகிரத பிரயத்தனம் (சோதனை மேல் சோதனை, போதுமடா சாமி…) செய்யும் சசிகுமார், அவரது நண்பர்கள் .
12 ரீல்களும் கண்ணீரும் கம்பலையுமாய் கண்களில் நிற்கும் நாயகி, இதில் நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி தாயின் பிரேதத்தோடு விமானப் பயணம்.
நெஞ்சுக்கு நிம்மதி, நிம்மதி பெருமூச்சு: அவளுக்கு மட்டுமல்ல, அதுவரை படம் பார்த்துக் கொண்டிருந்த அத்தனை ரசிகர்களுக்கும் தான்!
கணவன் யஷ்பால் வர்மா,- மனைவி, மகள்- ப்ரீதி அஸ்ரானி- மகன்: நால்வரும் வாழ்ந்திருக்கிறார்கள், கதா பாத்திரத்தில். வாழ வைத்திருக்கிறார் மந்திரமூர்த்தி. யஷ்பால் வர்மா, க்ளைமாக்ஸ் கதறல் நாயகன் கமலை நினைவில் இழுக்கும், அற்புதம்!
* பிரேத பரிசோதனை ஊழியருக்கு உண்டியலை உடைத்து சிறுவனம் பணம் தருவது…
* ராமேசுவரத்துக்கு வரும்போது சுவாமி தரிசன நேரத்தில் கட்ட வைத்திருந்த சிகப்புப் புடவையை தாயின் சடலம் மீது மகள் போர்த்தி மவுனமாய் விசும்புவது…
ஒவ்வொரு காட்சியும் பேச வைக்கும்; நெஞ்சைக் கனக்க வைக்கும்.
இப்படி ஒரு சிம்ம சொப்பன புருஷனா… ஐயோ பாவம் என்று அனுதாபம் பெறும் குடும்பத்தில் மனைவி- மகள்- மகன்: நெஞ்சம் மறப்பதில்லை. அதுவும் அந்த தாய்ப் பாச முகமும், பூவுக்குள் பூகம்பமாய் வெடித்து சிதறும் மகளும்: சினிமாவுக்கு கிடைத்து இருக்கும் மிகப்பெரிய கவுரவம் பெறும் நடிகைகள்.
சசிகுமாரின் நிழலாகவே நடிக்கும் சுருட்டை முடி இளைஞன்… புகழ்…, கார் ஓட்டி விபத்தில் சிக்கி கால் முறிக்கும் தோழன் இருவரையும் மறக்க முடியாது.
நெஞ்சை கனக்க வைக்கும் ஒரு பாடல், பின்னணி இசையில் ரகுநந்தன். பிரமாதம்.
ஒளிப்பதிவு: மாதேஷ் மாணிக்கம், படத்தொகுப்பு : சாம் லோக்கேஷ் : திரை மறைவு கலைஞர்கள் அயோத்திக்கு வலுவான அஸ்திவாரம்!
வசனம் 4 இடங்களில் சுளீர். ரேஷன் கார்டில் பெயர் மாற்றுவதற்கே ஒரு மாதத்திற்கு மேலாகும். ஒரே நாளில் நாளில் எஃப் ஐ ஆர் ரிப்போர்ட், போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்… இப்படி ஏழு சர்டிபிகேட்டை வாங்குவது சாத்தியமா?
பாஷை தெரியாத ஒரு குடும்பம், பாஷை தெரியாத ஒரு ஊருக்குப் போன இடத்தில் சம்பவிக்கும் திடீர் மரணம். அப்போது அந்தக் குடும்பம் என்ன பாடுபடும், எப்படி எல்லாம் சோதனை, சங்கடம், மனம் வருத்தம், படபடப்பு, பதைபதைப்புக்கு ஆளாகும்? ஒவ்வொரு நிமிடமும் அல்லல்படும் என்பதை நிதர்சனமாக காட்டி இருக்கிறார்கள்.
உண்மைக் கதையில் கொஞ்சம் கற்பனை முலாம் பூசி வெள்ளித்திரையில் காட்டி இருக்கிறார்கள். இடைவெளிக்குப்பின் ஒவ்வொரு காட்சியும்… உணர்ச்சிப் பிழம்பு; எரிமலை வெடித்துச் சிதறும் உணர்ச்சி குமுறல், கல் மனசையும் (கொஞ்சம்) கரைக்கும்!
வைத்திருக்கும் தலைப்பு” அயோத்தி”. புரிந்தால் சரி (சாமானியனுக்கு).
பேனருக்குப் பெருமையில்
ட்ரைடண்ட் ரவீந்திரன்;
நடிப்பின் அருமையில் சசிகுமார்;
அறிமுகத் திறமையில் ஆர். மந்திரமூர்த்தி:
மூவர் வெற்றி உலா;
உள்ளத்தை அள்ளும்;
படவுலகம் பேர் சொல்லும்!
வீ. ராம்ஜீ
* ஒரே நாள் – 7 சர்டிபிகேட்களையும் வாங்குவது சாத்தியமா? கேள்வி எழுப்பலாம்!
* இந்தியில் பேசுவதை தமிழில் துணைத் தலைப்பு போடுவது உறுத்தலாக இல்லையா? மீண்டும் கேள்வி எழுப்பலாம்.
* யஷ்பால் வர்மா ஓவர் ஆக்டிங் – செயற்கையாக இல்லையே… என்றும் இன்னொரு கேள்வியையும் முன் வைக்கலாம்.
பார்வைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்.