சிறுகதை

மனம் மாறிய மருமகள் – ஆர்.வசந்தா

Makkal Kural Official

அன்றும் வழக்கமான காட்சி நடைபெற்றது சிவராமனின் தாய்க்கும் தாரத்திற்கும் தான்.

மனைவி பிரியா சொன்னாள்: இன்று பச்சைப் பட்டாணி பொரியல் என்று.

அம்மா பார்வதி சொன்னாள்: இன்று வெண்டைக்காய் என்று.

இருவருக்கும் முடிவில்லா மோதல் தான்.

சிவராமன் சொன்னான்: இதுவும் வேண்டாம் அதுவும் வேண்டாம். ஏதாவது ஒன்றை என் சாப்பாட்டுத் தட்டில் போடுங்கள் என்று கூறி சண்டையை முடித்து வைத்தான். இது முடிந்ததும் வேலைக்காரிக்கு கழுவச் சாமான்களை சிங்க்கில் போடுவது யார் என ஒரு யுத்தம் நடந்தது.

இப்படிக் காலையிலிருந்து இரவு வரை தினமும் மாமியார், மருமகள் போராட்டம் ஓயாது. சிவராமனும் தன் அம்மாவிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். நீ ஏனம்மா கஷ்டப்படுகிறாய் என்று.

ஆனாலும் பார்வதி அம்மாள் கேட்டால்தானே! ஒரு நாள் சிவராமனும் கோபத்தில் ஏதாவது முதியோர் இல்லத்தில் உங்களைச் சேர்த்து விட்டுத்தான் மறு வேலை என்றும் சொல்லி விட்டான்.

அதற்கெல்லாம் மசியவில்லை பார்வதி அம்மாள். ஏனெனில் அவளுக்கு பென்ஷன் பணம் சுளையாக வருகிறது.

திடீரென ஒரு மாற்றம் வந்தது.

எப்படியென்றால்…

போரெல்லாம் முடிந்து திருதிராஷ்டிரனை தருமன் தன் அரண்மனையில் தங்கும்படி வேண்டிக் கொண்டான்.

திருதராஷ்டிரன் மீது சாப்பாட்டு பொட்டலத்தை வீசினான் பீமன். அச்செயல் கண்டு திருதராஷ்டிரன் நொந்து கொண்டார். அந்த வழியாக வந்த சித்தப்பா விதுரன் திருதிராஷ்ட்ரன் நொந்து தவிப்பதை கண்டு மனம் வேதனைப் பட்டார்.

சாப்பாட்டு பொட்டலத்தை வீசிய பீமனை கண்டித்தார்.

சித்தப்பா, ஏன் இப்படி சாப்பாட்டிற்குப் போய் தவிக்கிறீர்கள். உங்கள் தகுதிக்கு தேவையா என்று சொன்னான். ‘நீங்களும் காட்டிற்குச் சென்று அமைதியாக தவ வாழ்க்கையை நடத்துங்கள். அங்கு கிடைக்கும் காய்கனிகளே உங்களுக்கு போதுமானதாகும் என்றான். சரி என்று திருதிராஷ்டிரனும் சில நாட்களிலேயே கிளம்பி விட்டான் கானகத்திற்கு. உடன் காந்தாரியும் வந்தாள்.

இந்த தொலைக்காட்சி தொடரை கவனித்த பார்வதி அம்மாளும் தன்னையும் முதியோர் இல்லத்திற்கு கொண்டு விடும்படி சிவராமனிடம் சொல்லி விட்டாள். இதற்கு காத்திருந்தது போல அதற்குண்டான வேலைகளையும் சிவராமன் ஆரம்பித்து விட்டான் .

முடிவாக வரும் வெள்ளிக்கிழமையிலிருந்து முதியோர் இல்லத்தில் சேரும்படி சொல்லி விட்டார்கள். பணமும் கட்டி விட்டார்கள்.

சேரும் நாளன்று தானும் போக முடிவு செய்தாள் மருமகள் பிரியா. ஆபிஸில் லீவு கேட்க போன் செய்தாள். அப்போது ஆபிஸில் எதற்கு லீவு என்று கேட்டார்கள். அப்போது பிரியா சொன்னாள். ‘இங்கு இருக்கும் ஒரு தொணதொணப்பு லக்கேஜை இடம் மாற்றப் போகிறோம் என்றாள். இதைக் கேட்ட மாமியார் கொதித்து விட்டாள்.

சரி நாம் இனிமேல் அங்கே என் வயது ஒத்தவர்களுடன் ஜாலியாக இருப்போம் என்று மனதை தேற்றிக்கொண்டாள். காரில் 3 பேரும் கிளம்பினார்கள். வழியில் அடையாறில் உள்ள ஜெபகோபுர முகப்பில் உள்ள ஓவியத்தை பார்த்தான். தன் அம்மா செய்து தந்த கைமுறுக்கு, அல்வா, மைசூர்பாக் இவற்றை நினைத்து அந்த சுவையில் மயக்கம் வந்தது. நம் தாயையா முதியோர் இல்லத்திற்கு அனுப்புவது என்று வருந்தினான். ஆனாலும் வேறு வழி தெரியவில்லை.

அந்த இடத்திற்கும் வந்து விட்டார்கள். ‘இளைப்பாறும் இல்லம்’ என்று பெயரிடப்பட்டிருந்தது.

அப்போது தான் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. சிவராமன், பிரியா, பார்வதி அம்மாள் உள்ளே நுழைகிறார்கள். பிரியாவின் அண்ணன் சுகுமார் அங்கே அவன் அம்மாவைச் சேர்க்க தன் மனைவியுடன் வந்து இறங்கினான்.

பிரியா அதிர்ச்சி அடைந்தாள். தன் அம்மாவை அங்கே சேர்க்க இருப்பது அம்மாவை அண்ணன் சுகுமார் கொடுமைப்படுத்துவதாக நினைத்து வெகுண்டெழுந்தாள் பிரியா. அண்ணன் சுகுமாரைத் திட்ட வாயயெடுத்தாள். சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள். இதே தவறைத் தான் தாமும் செய்ய வந்திருக்கிறோம் என்று பிரியா மனம் பதைத்தது.

பிரியா மனம் மாறியது.

மனம் மாறிய மருமகள் மாமியாரை திரும்ப தன் வீட்டிற்கே கூட்டி வந்து விட்டாள்.

மறுநாள் ஆபிஸிலிருந்து வீட்டிற்கு திரும்பும் போது காய்கறிகளுடன் அத்தைக்கும் ஒரு மூட்டு வலி தைலமும் வாங்கி வந்தாள். அதை அத்தை இந்தாங்க என்று பார்வதி அம்மாளிடம் அன்புடன் கொடுத்தாள். படுக்கும்போது காலில் தேய்த்து விடுவதாகவும் சொன்னாள் பிரியா.

பார்வதி அம்மாள் இதைக் கேட்டதும் மயங்கி விழப் போனாள்.

மனம் மாறிய மருமகளின் செயல் கண்டு மெய்சிலிர்த்தாள்

மாமியார்..

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *