சிறுகதை

மனம் குளிர்ந்தது | தருமபுரி சி.சுரேஷ்

நாற்பது நாட்கள் நிம்மதியாய் இருந்த மரகதத்தின் உள்ளத்திற்குள் பயம் பற்றிக்கொண்டது.

அவளின் கணவன் கணேசன் நாற்பது நாட்கள் டாஸ்மாக் மூடப்பட்டதால் குடிக்காமல் இருந்தான்.

வீடு நிம்மதியாய் இருந்தது வீட்டில் அடிதடி சண்டைகள் இல்லை பிள்ளைகளும் சமாதானமாய் இருந்தார்கள்.

நாளையிலிருந்து என்னவாகப் போகிறதோ அவள் மனதிற்குள் பீதி விழுந்தது.

தன் கணவன் மீண்டும் பழைய குருடி கதவை திறடி என்னும் பழமொழிக்கு ஏற்ப டாஸ்மாக் கடையை நோக்கி போவான்.

குடித்துவிட்டு தள்ளாடிய நிலையில் வீட்டிற்குள் வருவான் தன் அகங்காரத்தை வெளிப்படுத்துவான்.

மனிதத் தன்மையிலிருந்து மிருகத்தனம் கொண்டு பேச்சில் என்னை குதருவான் எப்படி அவனோடு நான் மல்லுக்கட்ட போகிறேனோ? இரவெல்லாம் தூக்கம் வராமல் தனக்குள்ளே யோசித்துக் கொண்டிருந்தாள்.

அமைதியாய் இருந்த கணேசனுக்குள் குதூகலம் பிறந்தது ;

காரணம் – நாளையிலிருந்து டாஸ்மாக் கடை திறக்க போகிறார்கள் எனும் நற்செய்தி அவன் உள்ளத்துக்குள் பேரானந்தத்தை கொடுத்தது.

கணேசன் தன் மனைவியைப் பார்த்து கேட்டான் “ஏன் இன்னும் நீ தூங்கல

“எனக்கு பயமாயிருக்குய்யா”

“என்ன பயம்”

“நீ சத்தியம் பண்ணி கொடுத்த. இனிமே நான் குடிக்க மாட்டேன்னு. திரும்பவும் நாளைக்கு கடை பக்கம் போவியா”

“ஏன் நீ என்னைய நம்ப மாட்டேன்ற”

“இல்லையா எத்தனையோ தடவை நீ சத்தியம் பண்ணி இருக்கிற. ஆனா இந்த நாற்பது நாட்கள் ஒழுங்கா இருந்த. ஆனா இந்த அரசாங்கம் கடையை ஏன் திறக்குதுன்னு தெரியல”

“இல்ல இனிமே டானிக் மாதிரி தினமும் நான் குடிக்கிறேன்”

யோவ் நீ வேலைக்கு போகாட்டி கூட பரவால்ல . சும்மா இருந்தா கூட போதும். நான் கஷ்டப்பட்டு உனக்கு சோறு போடுறேன் . அந்தப் பாழாப்போன குடியமட்டும் விட்டிருய்யா . அதை இனி தொடாதே”

“இந்த நாற்பது நாட்கள் பயந்திருந்த பிள்ளைங்க கூட உங்ககிட்ட அன்பா ஒட்டிக்கிச்சு”

“நீ சொல்றது வாஸ்தவம்தான். இருந்தாலும் என் கையை பாரு நடுங்குது.

அந்த டானிக் இல்லாம மண்ட நறநற ன்னு குடையது. அதை மருந்து மாதிரி யூஸ் பண்ணிக்கிறேன்”

“நீ இப்படிதான் சொல்லுவே. ஆனா பழையபடியே மாறிவிடுவ. கொஞ்சம் பொறுத்துரியா குடியில் இருந்து விடுதலை ஆகறதுக்கு மறுவாழ்வு மையம் இருக்குது. அங்க நாம போய் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொள்ளலாம் ”

அவளின் மனதின் வலிகள் கண்களில் கண்ணீராய் ஓடியது.

அவன் அதற்கு எந்த மறு பதிலும் கொடுக்கவில்லை.

“கடவுளே இந்த டாஸ்மாக் கடை ஏன் திறக்கணும். அப்படியே மூடி இருந்தா எவ்வளவு சந்தோஷமா இருக்கும் . அரசாங்கத்துக்கு வருமானம் இதுலதான் வரணுமா ? வேற எதுவுமே நல்ல வழியில் கிடைக்காதா” மரகதம் புலம்பினாள்.

இவள் புலம்பி என்ன ஆகப்போகிறது? அவன் மனதிற்குள்ளே குதூகளித்துக் கொண்டிருந்தான்.

அவளின் கணவன் ஏற்கனவே மரகதம் தனது இரும்பு பெட்டியில் வைத்திருந்த 500 ரூபாய் நோட்டை அவளுக்கு தெரியாமல் எடுத்து வைத்திருந்தான்.

பாக்கெட்டில் டாஸ்மாக் கடையில் முதல் ஆளாக நின்று பாட்டில் வாங்கி விட வேண்டும் என திட்டமிட்டு இருந்தான்.

சரியான நேரத்திற்கு டாஸ்மாக் கடைக்கு சென்றான்.

அங்கே சமூக இடைவெளி என்பது ஒன்று இல்லாமல் இருந்தது. எல்லோரும் உந்தித்தள்ளி அடித்துக் கொண்டிருந்தார்கள்

அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீஸ்காரர்கள் என்ன செய்வதென்றே தெரியவில்லை. யாரை தடியால் அடிப்பது யாரை சரி செய்வது என குழம்பிப் போயிருந்தார்கள்.

இனி இந்தக் குடிமகன்களால் தெருக்களின் அமைதி குலையப் போகிறது.

மரகதம் யாரைக் குறை சொல்வது? அல்லது தன் கணவன் மீது கோபப்படுவதா? என மனதிற்குள் குழம்பி இருந்தாள்.

சொல்லப்போனால் மரகதம் இன்னொரு தாயாய் தன் கணவனின் எல்லா நிலைகளையும் பொறுத்துக் கொண்டிருந்தாள்.

தனக்குள்ளே பேசிக் கொண்டாள் பாரதியின் புதுமைப் பெண்

எனக்குள் எங்கே?

மாதராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும் எனும் வார்த்தைகள் உண்மையா?

எனக்கு மட்டும் ஏன் இந்த குடும்ப சுமை? பெண்ணென்றால் எதையும் தாங்கும் இதயமா?

அவளுக்கும் ஆச பாசங்கள் இருக்கத்தானே செய்கிறது. அவளும் ஒரு உணர்வுள்ள பாத்திரம்தானே. இதை ஏன் சில ஆண் ஜென்மங்கள் அறிவதில்லை.

தன் கணவனின் செயல் ஆண் சமூகத்தின் மீது அவளுக்கு வெறுப்பை உண்டாகியது

நல்ல மனைவி மட்டுமல்ல நல்ல கணவன் அமைவதும் பாக்கியம்தான் என்று தனக்குள்ளே பேசிக்கொண்டாள்.

இந்த வாழ்க்கைக்கு பிறகு நரகம், சொர்க்கம் என்று இருக்கிறதாம் .வேணாம்டா சாமி எனக்கு இந்த வாழ்வே போதும் என வாழ்வின் மீது அவள் விரக்தி கொண்டிருந்தாள்.

இன்று வீடு நரகலோகம் ஆகப்போகிறது. மது எனும் அரக்கனை அழிக்க சரியான இந்த தருணத்தை ஏன் கைவிட்டுவிட்டார்கள்.

மதுக்கடை திறக்காமல் இருந்தால் இந்த நாட்கள் சரித்திரத்தில் இடம்பெற்று இருக்கும் அல்லவா?

பல வீடுகளில் தீபம் எரிந்து இருக்கும்? இதை நான் யாரிடமும் சொல்ல. ஒரு கை ஓசை யார் காதில் விழும்?

ஒரு பக்கம் எங்கும் வேலைக்கு செல்ல இயலாத நிலை.

இன்னொரு பக்கம் தன் குடிகார கணவன் திருந்தாத நிலை.

பிள்ளைகளின் எதிர்காலம் என்ன ஆகப்போகிறதோ? அவர்களுக்கு நல்ல கல்வியும் ஒழுக்கத்தையும் கொடுக்கவேண்டிய நிலை இப்படியாய் இருக்கிறதே என மனதிற்குள்ளே புழுக்கம் கொண்டாள்.

அவள் கணவன் மதுபானக் கடையில் அடித்துப்பிடித்து ஒரு பாட்டிலை வாங்கிக் கொண்டு வெற்றி வீரனாய் தன் வீட்டை நோக்கி வந்தான்.

மனைவியிடம் “எவ்வளவு கூட்டம் ஒருவழியா வாங்கிட்டு வந்துட்டேன்” என தன்னை பெருமைபட்டு பீத்திக் கொண்டான்

அவளோ அவனை குறித்து மனதிற்குள் தீயாய் எரிந்து கொண்டிருந்தாள். அவனை நேரடியாக திட்ட முடியாது. மனதிற்குள் “ஆமான்டா பெருசா கிழிச்சிட்ட உன்ன நம்பி வாக்கப்பட்டேன் பாரு . அன்னைக்கு அம்மா படிச்சு படிச்சு சொன்னா ஒழுங்கா படி வாழ்க்கைல தனியா நிக்க உனக்கு படிப்புதான் கைகொடுக்கும். அத நான் கேட்டனா? என்னைய செருப்பால அடிக்கணும்.

அம்மா இறந்து நான்கு வருடங்கள் ஆயிற்று கண்ணீர் சிந்தினாள். எப்படி எல்லாம் பூவாய் அம்மா என்னை வளர்த்தாள் .இந்த குரங்கிடம் வந்து மாட்டிக் கொண்டேனே.

அவன் எதையும் லட்சியப்படுத்தாமல் அலட்சியமாய் பாட்டிலை திறந்து மதுவை தொண்டைக்குள் இறக்கிக் கொண்டு இருந்தான்.

“மரகதம் தொட்டுக்க ஊறுகாய் இருக்கா”

“ஆமாய்யா குடிக்கிறது கேடு .அதுல வக்கனையா உனக்கு ஊருகாய் வேற தொட்டுக்க வேணுமா” கடுங்கோபம் கொண்டு பேசினாள்.

அவன் குடித்து கொஞ்ச நேரத்தில் அருகில் இருந்த பாயில் சரிந்து வேறு குடிகாரபாஷையில் உளற ஆரம்பித்தான்.

அவளோ அந்த பாஷைகளை கேட்க முடியாமல் காதைப் பொத்திக் கொண்டாள்.

அவளின் இரு சிறு பிள்ளைகளும் அம்மாவைப் பரிதாபமாகப்

பார்த்தார்கள் .”அம்மா ஏம்மா அப்பா இப்படி இருக்கிறார்” என்பதாய் அந்தப் பார்வைகள் காணப்பட்டது.

பிள்ளைகளுக்கு என்ன பதில் சொல்வது என மரகதத்திற்கு தெரியவில்லை. மரகதம் “ஓ,,,,,”வென அழ ஆரம்பித்தாள்.

பிள்ளைகள் அவளை சமாதானப் படுத்தினார்கள். “அம்மா,,,, அம்மா,,,,, நாங்க இருக்கோம். நீ அழுதா எங்களால தாங்க முடியாது”

“என் செல்லங்களா” என சொல்லி அந்த இரு பிள்ளைகளையும் தன்னுடைய மார்போடு இறுக சேர்த்து அணைத்துக் கொண்டாள். அவர்களின் கண்ணீர் அங்கு குளம் ஆயிற்று.

மரகதத்தின் கணவனோ வேறு உலகத்திற்கு பிரவேசித்து விட்டான். அவன் பாஷைகளும் வேறாய் கிடந்தது.

ஒரு நிமிடம் அவள் யோசித்தாள்.

இந்த மனிதன் இப்படியே போய் சேர்ந்து விட்டால் கூட வீடு நிம்மதியாக இருக்கும் யார் நினைத்து என்ன ஆக போகிறது. கடவுள் விட்ட வழி.

அந்த இரு பிள்ளைகளும் “நாங்க இருக்கோம் அம்மா கவலைபடாதீங்க” என கண்ணீரைத் துடைக்கும் பொழுது அவளுக்கு ஆறுதலாக இருந்தது.

அவர்களுக்காக வாழ்ந்தாக வேண்டும் எனும் புது நம்பிக்கை அவளுக்குள் துளிர்விட ஆரம்பித்தது.

இறுதியாக தன் கணவனை குறித்து மனதிற்குள்ளே சொல்லிக்கொண்டாள். “சாக்கடை இவன் எப்படி போனா என்ன என் புள்ளைங்க எனக்கு முக்கியம் அவர்களை வளர்த்து பெரிய ஆளாக்கணும். இனி யாரையும் எதையும் நம்பி பிரயோஜனம் இல்லை.

நம்மள நாம நம்பனும்

நம்ம பிள்ளைகள் ஒழுக்கமா வளர்க்கணும். இனி யாரையும் நான் குறை சொல்வதில்லை எனும் முடிவுக்கு வந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *