கண்ணபிரானுக்கு நகரத்தில் உள்ள வங்கி கிளைகளில் நிறைய கணக்கு இருந்தது.
அவர் எந்த வங்கியில் பணம் எடுக்க வேண்டும். பணம் செலுத்த வேண்டும் என்று காலையிலேயே திட்டமிட்டு எங்கு செல்ல வேண்டும் என்று தெரிந்துகொண்டு அந்த வங்கிக்குச் செல்வார்.
அன்று காலை தன் உறவினர் ஒருவருக்கு பணம் செலுத்த வேண்டும் என்று தன் குறிப்பில் எழுதி வைத்துக் கொண்டார்.
அதிகாலை முதலில் அந்த உறவினர் எப்படியாவது பணம் செலுத்தி விடுங்கள் என்று நூறு தடவைக்கு மேல் ஃபோன் செய்திருப்பார்.
நான் கண்டிப்பா பணத்தை போட்டு விடுறேன் .நீ ஏன் வருத்தப்படுற என்று கண்ணபிரான் சொல்லியும் எதிர் திசையில் இருக்கும் உறவினர் அதை நம்பவே இல்லை.
கண்டிப்பா போட்டுருங்க. நீங்க போடுற பணத்தை வைத்து தான் ஒரு முக்கியமான வேலை நடத்த வேண்டியது இருக்கு என்று உறவினர் சொன்னதற்கு உத்தரவாதம் கொடுத்தார் கண்ணபிரான் .
வங்கி திறப்பதற்கு முன்பாகவே அதன் வாசலில் போய் நின்றார். அதற்குள் நிறைய வாடிக்கையாளர்கள் வந்து குவிந்து இருந்தார்கள்.
வங்கியில் உள்ள சலானை எடுத்து செலுத்த வேண்டிய தொகையையும் பூர்த்தி செய்து பணம் செலுத்தும் கவுண்டரில் கொடுத்தார் .
அங்கே ஒரு நடுத்தர வயது பெண்மணி எரிந்து எரிந்து விழுந்து கொண்டிருந்தார்.
என்ன இது அரசாங்க வேலைதான பாக்குறாங்க ? அதுவும் மக்களுக்கு சேவை செய்வதற்குத்தான் இவங்க வந்து இருக்காங்க . ஏன் இப்படி பேசணும் என்று ஒருவருக்கொருவர் அங்கே நின்று கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் புலம்பிக் கொண்டு இருந்தார்கள்.
அந்தப் பெண்மணி எரிந்து விழுந்து கொண்டு சரியாக வேலை செய்யாமல் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார் .
கண்ணபிரான் தன் முறை வந்த போது டோக்கன் நம்பரை சொன்னதும் கண்ணபிரான் அக்கவுண்ட் அந்தப் பெண்ணிடம் பணத்தையும் சலானையும் கொடுத்தார் .
பணத்தையும் சலானையும் வாங்கிய அந்தப் பெண் கண்ணபிரானை முறைத்து பார்த்து
‘‘ஏங்க அதான் பணம் கட்டுவதற்கு மிஷின் இருக்கு இல்ல . அங்க போய் செலுத்த வேண்டியதுதானே? அங்க போய் கட்ட வேண்டியது தானே. இங்கே வந்து கழுத்தறுக்கிறீங்க என்று சொன்னதுதான் தாமதம் கண்ணபிரானுக்கு கண்மண் தெரியாமல் கோபம் வந்தது .
நான் எங்க வேணாலும் கட்டுவேன். உங்க வேலை என்ன பணத்தை வாங்குவது. பணத்தை கொடுக்கிறது. நான் மிஷின்ல போயி பணம் கட்டணும்னா உங்களுக்கு எதுக்கு இங்க வேலை ? எல்லாத்தையும் தூக்கிட்டு மெஷினா வைக்கலாமே ? என்று கண்ணபிரான் காட்டுக் கத்தல் கத்தினார்.
அந்த வங்கியில் இருந்தவர்கள் அத்தனை பேரும் ஸ்தம்பித்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அந்தப் பெண் மறு வார்த்தை பேசவில்லை. கண்ணபிரான் பேசியதற்கு தான் அங்கு குவிந்திருந்த வாடிக்கையாளர்கள் ஆதரவு கொடுத்தார்கள்.
அருகில் இருந்த மற்றொரு வங்கிப் பணியாளர் அந்தப் பெண்மணி பேசுவதற்கு ஆதரவு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார் .
அந்தப் பெண் கோபப்பட்டு குனிந்து எழுதிக் கொண்டே இருந்தாள்.
சலானில் சீல் வைத்து கையெழுத்து போட்டு நீட்டுவதற்குள் கண்ணபிரான் அந்த பெண்ணின் மனநிலையையும் அவர் எதற்காக இப்படி கத்திக் கொண்டிருக்கிறார் என்பதையும் அறிந்து கொண்டார்
சலானை வாங்கும் போது நீங்க ஒரு கல்யாணம் பண்ணுங்க என்று சொன்னார் .
அந்தப் பெண்ணுக்கு தலையில் இடியே விழுந்தது போல இருந்தது.
கண்ணபிரானை முறைத்துப் பார்த்து அடுத்து வந்த வாடிக்கையாளர்கள் கூட மறந்து இருந்தார்.
கண்ணபிரானை அருகில் இருந்த ஒரு வங்கி ஊழியர் அழைத்து நீங்க இதுக்கு முன்னாடி வங்கி சேவையை கேட்டது சரி . ஆனா கல்யாணம் பண்ணுங்கன்னு சொன்னது தப்பு . அவங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு. அவங்க ஒரு விதவை . அவங்களப் போய் எப்படி கல்யாணம் பண்ணச் சொல்றீங்க ? என்ற போது
ஏன் விதவையாக இருந்தா கல்யாணம் பண்ணக் கூடாதா? அவங்களுக்கு வாழ வேண்டிய வயசு தான் சார் . கல்யாணம் பண்ணச் சொல்லுங்க என்று மறுபடியும் கேள்வி கேட்டவனிடமே பதிலைச் சொல்லிச் சென்றார் கண்ணபிரான்.
அந்தப் பெண்ணுக்கு என்னவோ பாேல் ஆனது.
சிறிது நாட்கள் அந்த வங்கிக்கு செல்லாமல் இருந்தார் கண்ணபிரான்.
ஆறு ஏழு மாதங்கள் கழித்து அந்த வங்கிக்கு மறுபடியும் போக வேண்டிய நிலை ஏற்பட்டது .
வங்கியைச் சுற்றிப் பார்த்தார். அவர் திட்டிய அந்த பெண்மணி அக்கவுண்ட் செக்சனில் இல்லை.
ஒரு வேளை டிரான்ஸ்பர் ஆகி போய்ட்டாங்க போல என்று நினைத்துக் கொண்டிருந்தார்.
தான் செலுத்த வேண்டிய பணத்திற்கு சலானை எடுத்து பூர்த்தி செய்து கையொப்பமிட்டு அந்த பெண்மணி அமர்ந்திருந்த அதே கவுண்டரில் நீட்டினார். அங்கே வேறொரு ஆள் இருந்தார்.
கண்ணபிரானைப் பார்த்ததும் அந்த வங்கி ஊழியர் சிரித்தார்.
சார் வணக்கம். எப்படி இருக்கீங்க? என்ற போது கண்ணபிரானுக்கு அவரைத் தெரியவில்லை .
சார் உங்கள எனக்கு நல்லா தெரியும். ஆனா என்ன உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை .நான் இந்த வங்கி ஊழியர் தான் .பின்னாடி உட்கார்ந்து இருப்பேன். ஒரு ஆறு ஏழு மாசத்துக்கு முன்னாடி இங்கே உட்கார்ந்து இருந்த ஒரு பெண்ணை நீங்கள் திட்டினீங்க? ஞாபகமிருக்கா? என்ற பாேது கண்ணபிரான் ஆமா என்று தலையாட்டினார்.
அவங்கள கல்யாணம் பண்ணிக்க சொன்னீங்க. அதெல்லாம் நான் கேட்டுட்டு தான் இருந்தேன்.
ஓ அப்படியா? என்று வாய் பிளந்தார் கண்ணபிரான்.
ஆமா சார் நீங்க சொன்னது தான் சரி . இப்ப அந்த பெண்மணி நீங்க சொன்னது மாதிரியே திருமணம் முடிச்சுட்டாங்க . அது மட்டும் இல்ல அதுக்கு முன்னாடி எரிஞ்சு எரிஞ்சு விழுந்து கிடந்தவங்க கல்யாணத்துக்கு பின்னாடி தன்னாேட மனநிலைய மாத்திட்டாங்க. இன்னைக்கு ஒரு நல்ல இடத்துல இருக்காங்க சார் . அதுக்கு நீங்க தான் காரணம் என்றார். அந்த வங்கி ஊழியர்
‘‘நான் என்ன பண்ணேன் நான் ஒன்னும் சொல்லலையே’’ என்றார் கண்ணபிரான்.
இல்ல சார் அவங்க விதவை அப்படிங்கறதனால கொஞ்சம் கோபமா மற்றவர்களிடம் அனுசரிப்பு இல்லாம தான் பேசிட்டு இருந்தாங்க. நீங்க சொன்ன அந்த வார்த்தை அவங்கள என்னவோ பண்ணிடுச்சு. இதே வங்கியில வேலை செய்யுற அந்தப் பெண் மாதிரி இருக்கிற ஒருத்தர திருமணம் பண்ணிக்கிட்டாங்க. அவரும் இந்த வங்கியில் தான் வேலை பார்க்கிறார் .
அந்த அம்மா இப்ப எங்க இருக்காங்கன்னு தெரியுமா? என்று மேலாளர் அறையைக் காட்டினார் அந்த வங்கி ஊழியர்.
கண்ணபிரான் திட்டிய அந்த பெண்மணி மேலாளர் என்று எழுதப்பட்ட கண்ணாடி அறையினுள்ளே அமர்ந்து உயர் அதிகாரிகளிடம் ஏதோ விவாதித்துக் கொண்டிருந்தாள்.
கண்ணபிரானுக்கு கண்கலங்கியது நம்ம ஏதோ ஒன்னு சொன்னா. அது ஒரு மனிதனுடைய வாழ்க்கையை மாற்றி இருக்கே என்ற சந்தோசத்துடன் அந்த வங்கியை விட்டு வெளியேறினார் .
உயர் அதிகாரிகளுடன் பேசிக் கொண்டிருந்தாலும் அந்த பெண்மணி கடைக்கண்ணால் கண்ணபிரானை பார்த்து ஒரு புன்முறுவல் பூத்துக் கொண்டிருந்தாள்.