சிறுகதை

மனதின் குரல் – ராஜா செல்லமுத்து

இப்போதிருக்கிற உலகத்தில் ஒவ்வொரு நாளும் என்ன நடக்குமோ? என்று ஒவ்வொரு மனிதர்களும் தன் உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

நிலையில்லாத இந்த உலகத்தில் நிறைய பேருக்கு நோய் கண்டு இருக்கிறது. இந்த நோய் கதிருக்கும் துர்காவிற்கும் வந்தது.

இருவரும் இரண்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டார்கள். மருத்துவமனைக்குள் சென்ற தம்பதிகள் திரும்ப வருவார்களா? மாட்டார்களா? என்பது வைத்தியம் பார்க்கும் மருத்துவர்களுக்குத்தான் வெளிச்சம். அந்த நிலையில் தன் மனதில் உள்ள அத்தனையும் ஒரு வெள்ளைத் தாளில் எழுத ஆரம்பித்தான் கதிர்.

திருமணமாகி பத்தாண்டுகளாகி இருந்தாலும் மனைவியின் மீது சந்தேகம் அல்லது மனைவியின் மீது ஒரு கோபம் கொள்ளாமல் இருந்தான்.

இருந்தாலும் அவன் மனதில் சில பல சிக்கல்கள் இருந்தாலும் வெளியே சொல்ல முடியாத ரகசியங்கள் ; அந்த ரகசியங்களை எல்லாம் தன் மனைவிக்கு எப்படி புரிய வைப்பது என்பதையும் தான் இல்லாத காலத்தில் இந்த விஷயங்கள் எல்லாம் அவள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும் ஒரு வெள்ளைத் தாளில் எழுத ஆரம்பித்தான் கதிர்.

தான் செய்த தவறுகள், தான் செய்த நல்லது, தான் பணம் கொடுத்தது; பணம் வாங்கியது என்ற விவரங்களை எழுதியவன் தான் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும்போதே ஒரு பெண்ணுடன் உண்டான தொடர்பையும் அதில் எழுதினான். இது மனைவிக்குச் செய்யும் துரோகம் தான் என்றாலும் அதை மறைக்கவோ? அல்லது தெரியாமல் மூடி விடலாம் என்றோ அவன் மனதில் எண்ணம் இல்லை. அதையும் சேர்த்து எழுதினான்.

அந்த பெண்ணும் தன் வாழ்வில் தான் இருக்கிறாள். இருந்தாலும் அதை எப்படியாவது சொல்லிவிட வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் சொல்லிப்பார்ப்பான். ஆனால் அது முடியாமல் போய்விடும் . இந்த காலகட்டத்தில் சொல்லவில்லை என்றால் வேறு எந்த காலகட்டத்திலும் நான் சொல்ல முடியாது . இது தான் சரியான சந்தர்ப்பம் என்பதை உணர்ந்துகொண்ட கதிர் வெள்ளைத்தாளில் விவரமாக அத்தனையும் எழுதினான்.

ஏனென்றால் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவது. கடவுள் கையில் தான் இருக்கிறது . ஒரு வேளை நாம் இறந்துவிட்டால் இந்த விஷயங்களை மனைவி தெரிந்து கொள்ளட்டும் என்று அவன் வெள்ளைத்தாளில் எழுதினான்.

அதைப்போலவே துர்காவும் தன் ரகசியங்களை ஒரு வெள்ளைத்தாளில் எழுதினாள்.

கணவனுடன் சண்டை போட்டது. மாமியாருடன் சண்டை போட்டது. குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள். அதனால் ஏற்படும் சிக்கல்கள் என்று அத்தனையும் விடாமல் எழுதினாள். சில தவறுகள் செய்திருந்தாலும் அந்த தவறுகளை மறைப்பதற்காக அவள் முயற்சி செய்தும் முடியாமல் போனது .அதையும் அந்த வெள்ளைத்தாளில் விபரமாக எழுதினாள்

ஏனென்றால் இருவருக்கும் வேறு வேறு மருத்துவமனைகள். ஒருவேளை தான் இறந்து விட்டால் தான் கணவனுக்கு துரோகம் செய்தது போல் ஆகி விடுமோ? என்ற அச்சத்தில் தான் அத்தனையையும் இருவரும் எழுதினார்கள்.

இதனால் இரண்டு பேரின் மனதின் குரலும் வெள்ளைத்தாளில் வந்து விழுந்தன.

ஏனென்றால் தற்போது இருக்கும் சூழலில் மருத்துவமனை சென்று வீட்டுக்கு வருவது என்பது கடவுளின் சித்தம் என்பது இருவருக்கும் தெரிந்தது.

இருவருடைய மனதிலிருக்கும் பிரச்சினைகளை இறக்கி வைத்தார்கள் . கடவுள் சித்தத்தால் இருவரும் பூரண குணமாகி வீட்டிற்கு வந்தார்கள். இருவரின் கடிதங்களும் இருவருக்கும் மாறிக் கொடுக்கப்பட்டது.

இதை எதிர்பார்க்காத தம்பதிகள் ஒருவருக்கொருவர் தங்களைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொண்டார்கள்.

ஆனால் அதைப்பற்றி அவர்கள் விவாதித்துக் கொள்ளவில்லை. இப்போதாவது தங்களைப் பற்றி தாங்களே தெரிந்து கொண்டார்கள் என்ற சந்தோஷம் அவர்களுக்கு இருந்தது

இந்த நோய்க்காலம் சில நல்ல விஷயங்களை செய்திருக்கிறது. அதில் ஒன்று கதிர், துர்கா ரகசியம்

அந்த மனைவியின் குரலில் தம்பதிகள் அதிலிருந்து குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களை அவர்களாகவே களைந்து கொண்டார்கள். சில விஷயங்கள் நடந்தால் நல்லது சில விஷயங்கள் நடக்காமல் இருந்தால் ரொம்ப நல்லது.

இந்த நோய்க் காலத்தில நல்ல விசயம் நடந்திருக்கிறது . சில நல்ல விஷயங்கள் வெளியே வந்திருக்கிறது.

இன்னும் எத்தனை குடும்பங்களின் விஷயங்கள் வெளியே வரும் என்பது யாருக்கு தெரியும் ?

ஏனென்றால் ஒரு மனிதனின் பெருமை பற்றி சொல்லவும் ஒரு மனிதனின் வாழ்க்கை பற்றி சொல்லவும் வேண்டுமென்றால் அவன் இறக்க வேண்டும் என்பதுதான் நியதியாக இருக்கிறது.

ரகசியங்கள் மரணத்தின் தருவாயில் தான் உடைக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *