விரிந்து பரந்த அந்தத் தனி பங்களாவில் வசித்து வந்தார்கள் நீலமேகம் குடும்பத்தார்கள். நீலமேகம் பெரிய வசதியானவர்; கடல் போல் படர்ந்து இருக்கும் அந்தக் கட்டிடத்தில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து கொண்டிருந்தார் நீலமேகம். ஜாதி , மதம் , இனம் , நிறம் , பேதம், பணக்காரன், ஏழை என்ற எந்தப் பாகுபாடும் பார்க்காத நல்ல மனிதர். அடிமட்டத்திலிருந்து இந்த நிலைக்கு வந்ததால் தன் நிலையை எப்போதும் மறக்காதவர்.
யார் எது கேட்டாலும் அதற்கு மறுப்பு சொல்லாமல் தரும் நல்ல மனசுக்காரர். ஆனால் அவர் மனைவி கோமதியோ அதற்கு நேர் எதிர். யார் எது கேட்டாலும் எதுவும் தர மாட்டாள். ஆயிரம் முறை கேள்வி கேட்ட பிறகுதான் ஏதாவது ஒன்றைத் தருவாள். அவளிடம் அறுத்துக் கொண்ட கைக்கு சுண்ணாம்பு கேட்டால் கூடத் தராத கஞ்சப்பேர்வழி. அதனால் கோமதியிடம் கேட்பதைவிட நீலமேகத்திடம் தான் ஏதாவது கேட்டு வாங்கிக் கொள்வார்கள் மனிதர்கள் .
அந்தப் பெரிய வீட்டில் சமையல் செய்யும் வேலைக்காரியாக பணியில் சேர்ந்தாள் முனியம்மாள். நீண்ட காலமாகப் பணி செய்து வந்தாள். மாதச் சம்பளம், மீதமானால் சாப்பாடு ஏதாவது தேவை என்றால் வாங்கிக் கொள்வாள். தவறியும் கோமதியிடம் கேட்க மாட்டாள். கோமதியின் குணம் அவளுக்கு நன்றாகவே தெரியும். வருடங்கள் பலவாக வேலை செய்து கொண்டிருக்கும் முனியம்மாவின் மகளுக்கு ஒரு நாள் திருமண நிச்சயம் செய்திருந்தார்கள்.
இதை நீலமேகத்திடம் சொன்னபோது சந்தோஷப்பட்டார். கோமதியிடம் சொன்னாள். சிரிப்பைத் தவிர வேறு எதுவும் அவள் தரவில்லை. ஏதாவது நம்மிடம் கேட்டுவிடுவார்களோ? என்ற அச்சம் அவள் மனதில் தொக்கி நின்றது. அன்று சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்த முனியம்மாள் .
“அம்மா என் பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்கேன்” என்று தயங்கித் தயங்கி கோமதியிடம் சொன்னவளின் வார்த்தையைக் கோமதி பெரிதாக எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை.
” ஓ அப்படியா நல்லபடியா நடக்கட்டும் “
என்று உதட்டுக்கும் உள்ளத்திற்கும் ஒட்டாமல் பதில் சொன்னாள் கோமதி .
“சரி இதற்கு மேல் இவளிடம் பேசுவது சரியில்லை”
என்று விட்டுவிட்டாள் முனியம்மாள்.
நாட்கள் கடந்தன. அவர்களுடைய வசதிக்கு தகுந்தது போல திருமணமும் நடந்தது . இதில் நீலமேகமும் மனைவி கோமதியும் கலந்து கொண்டார்கள்.
சின்னதாக ஒரு கிப்ட் கொடுத்துவிட்டு ஒதுங்கி கொண்டார்கள் .வீட்டு வேலைக்காரி தானே அவளுக்கு எதுக்கு நாம நிறைய செய்யணும் அதான் கிப்ட் கொடுத்தாச்சுல்ல”
என்று சொன்னாள். கோமதி மனைவியின் சொல்லைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத நீலமேகமும் அதை அப்படியே எடுத்துக் கொண்டு விட்டுவிட்டார்
நாட்கள் நகர்ந்தன.
திடீரென்று நீலமேகம் வீட்டிலிருந்த பத்து சவரன் நகை காணாமல் போயிருந்தது. எப்படிக் காணாமல் போனது? என்று திண்டாடினாள் கோமதி. இருக்கும் இடமெல்லாம் தேடிப் பார்த்தார்கள். எங்கும் நகை தென்படவில்லை. ஒருவேளை முனியம்மாளின் மகள் கல்யாணத்திற்கு திருடி இருப்பாளோ? என்ற எண்ணம் கோமதிக்கு ஏற்பட்டது . ஆனால் அவள் அப்படிப்பட்டவள் இல்லை. அவளிடம் எப்படி இதைக் கேட்பது? ரொம்பவே கோமதிக்குள் மனப்போராட்டம் அதிகமானது. .சரி கேட்டு தான் பார்க்கலாம் என்று ஒரு நாள் முனியம்மாளிடம் கேட்டு விட்டாள் கோமதி
“முனியம்மா உன்னுடைய பொண்ணு கல்யாணம் நல்லபடியா நடந்ததுல்ல ” என்று கேட்க
“ஆமா” என்ற தலையாட்டினாள் முனியம்மாள்
“எவ்வளவு சவரன் நகை போட்ட? என்று கேட்க
“பத்து சவரன் நகை”
” நகை எடுக்க உனக்கு பணம் இருந்ததா?
என்று கோமதி எதிர் கேள்வி கேட்க
அதற்கு பதில் சொல்லாமல் இருந்தாள் முனியம்மாள்.
” உண்மையை சொல்லு. எங்க வீட்டில் இருந்த நகைய தான நீ திருடிட்டு போன ? “
என்று கேட்க முதலில் “இல்லை” என்று சொன்னவள் பிறகு ” ஆமா” என்று சொன்னாள்.
” நான் தான் எடுத்தேன் ” என்று தலை குனிந்தபடியே பதில் சொன்னாள் முனியம்மாள்.
” எவ்வளவு திமிர் .வீட்ல இருந்த நகைய திருடிட்டு அதை எடுத்தேன்னு வேற சொல்றியா? உன்னை என்ன பண்றேன் பாரு” என்று கணவரிடம் நடந்ததை ஒப்பித்தாள் கோமதி.
அதைப் பொறுமையாக கேட்ட கணவன் கோமதி ” முனியம்மா நம்ம வீட்ல முப்பது வருஷத்துக்கு மேல வேலை பாத்துகிட்டு இருக்கா. நம்ம வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் தான் முனியம்மாளுக்கு கல்யாணமே நடந்தது. .அவ பிள்ளைகளையும் நம்ம பிள்ளை மாதிரி தான் வளர்த்து இருக்கணும். அத விட்டுட்டு அவளை வீட்டு வேலைக்காரி மாதிரியே நீ பெருசா நடத்திக்கிட்டு இருந்த. அது தப்பு. உன்கிட்டயும் தன்னுடைய மகளுக்கு கல்யாணம் நடக்கப் போகுதுன்னு சொன்னா. ஆனா இத நீ எடுத்துக்கல. அவளுக்கு கேக்குறதுக்கு தயக்கம். இவங்க தருவாங்களா ? இல்லன்னு சொல்லிட்டா, நம்மள பத்தின மதிப்பீடு குறைஞ்சிடுமோ ?அப்படிங்கிற வருத்தம் . அதனாலதான் அவ பத்துச் சவரன் நகையே திருடல .எடுத்துக்கிட்டா. அவ நம்ம வீட்ட அவ வீடு மாதிரி தான் நினைச்சிருக்கா .போலீசுக்கும் யாருக்கும் நீ இதச் சொல்லக்கூடாது. அதுதான் நமக்கு மரியாதை “
என்று நீலமேகம் சொன்னதும் கோமதிக்கு தூக்கி வாரிப் போட்டது.
” என்ன சொல்றீங்க .பத்து சவரன் நகைய திருடிட்டு போயிருக்கா. திருடுனவள போய் போலீஸ்ல புடிச்சு கொடுக்க கூடாதுன்னு சொல்றீங்களே ? இது தப்பு “
என்று கோமதி எகிற
“முனியம்மா தன் மகளுக்கு கல்யாணமுன்னு சொல்லும்போதே நீ அவளுக்கு கொஞ்ச நகைய கொடுத்திருந்தா, இந்தப் பிரச்சனை அவளுக்கு வந்திருக்காது. .நீ அவள திருடினு சொல்லி இருக்க மாட்டாய்.இப்ப அவளுக்கு தேவையான பொருளை நம்ம வீட்டுல இருந்து எடுத்துக்கிட்டா முனியம்மாளுக்கும் இது அவ வீடு மாதிரித் தான் “
என்று நீலமேகம் சொல்ல கோபம் தலைக்கு ஏறிய கோமதி ,என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் வாரி இறைத்து கீழே போட்டுக் கொண்டிருந்தாள்.இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த முனியம்மாளுக்கு என்னவோ போலானது .
“ஐயா நான் தப்பு பண்ணிட்டேன் மன்னிச்சிடுங்க”
என்று நீல மேகத்தின் காலில் விழுந்தாள்.
“இல்ல உனக்கு என்ன தேவை அப்படிங்கறத நாங்க தான் முன்கூட்டியே யோசிச்சு பண்ணி இருக்கணும். அதைச் செய்ய நாங்க தவறிட்டோம் .நீ பண்ணது தப்பு இல்ல முனியம்மா. எப்பவும் போல வேலைக்கு வரலாம். நீ எங்க வீட்டுல ஒரு ஆள் மாதிரிதான். இதெல்லாம் நினைச்சுக்காத?அவ அப்படித்தான் கத்திக்கிட்டு இருப்பா. இன்னும் கொஞ்ச நாள்ல சரி ஆயிடுவா .நான் பாத்துக்குறேன் .நீ போ “
என்று நீலமேகம் முனியம்மாளுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பினார்,
சிறிது நாட்கள் கழித்து அந்த பத்துச் சவரன் நகையை கொண்டு வந்து கோமதியின் கையில் கொடுத்தாள் முனியம்மாள். அதுவரையில் எதுவும் பேசாமல் இருந்த கோமதி நகையை வாங்கியதும் முனியம்மாளைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள்.
” தப்பு எங்களோடு தான் முனியம்மா .நீ எங்க குடும்பத்துல ஒரு ஆளா தான் வாழ்ந்துட்டு இருக்க. உன் தேவை என்னென்னு தெரிஞ்சு நாங்க உதவி பண்ணி இருக்கணும் .நாங்க தப்பு பண்ணிட்டோம். என்னை மன்னிச்சிரு. உனக்கு என்ன தேவையோ ? எங்கள கேட்காம நீ எடுத்துக்கிரலாம். இந்த நகையை நீ எடுத்துக்கிட்ட ; திருடல. எதிர் திசையில் நின்றிருந்த நீலமேகம் முனியம்மாவைப் பார்த்து
” சரி “
என்பது போல் தலையாட்டினார்.
முனியம்மாவுக்கு இப்போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அந்த விரிந்து பரந்த பங்களா முனியம்மாவின் வீடு போலவே தெரிந்தது .அதிலிருந்து அவள் எதையும் கேட்காமல் எடுப்பதே இல்லை .
“என்ன முனியம்மா. நாங்க தான் சொல்லி இருக்கமே ? எதுவும் எங்க கிட்ட கேக்காம உனக்கு தேவையானத எடுத்துக்கன்னு ” என்று நீலமேகம், கோமதி சொல்ல
” இல்லங்க . இதுக்கு முன்னாடி நான் அப்படித்தான் நினைச்சிட்டு இருந்தேன். என் மேல இவ்வளவு மரியாதையும் நம்பிக்கையும் நீங்க வச்சிருக்க. உங்ககிட்ட கேக்காம எதையும் நான் எடுக்க மாட்டேன். இனிமே எதையும் சொல்லிட்டு தான் எடுத்துட்டு போவேன்”
என்று சொல்லி மீதமிருந்த சாம்பாரை வீட்டுக்கு எடுத்துச் சென்றாள் முனியம்மாள். அவளை தன் குடும்பத்தில் ஒருவராகவே நினைத்தார்கள் நீலமேகமும் கோமதியும்.