செய்திகள்

மத மாற்றத்தில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறை: மத்திய பிரதேசத்தில் சட்டம் நிறைவேற்றம்

போபால், மார்ச் 9–

மத மாற்றத்தில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் சட்ட மசோதா மத்திய பிரதேச சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

‘லவ் ஜிகாத்’தை தடுக்க மத்திய பிரதேச அரசு கடந்த ஜனவரி 9-ம் தேதி அவசர சட்டத்தை அமல்படுத்தியது. இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக மத சுதந்திர சட்ட மசோதா மாநில சட்டசபையில் கடந்த மார்ச் 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்தான விவாதம் மத்திய பிரதேச சட்டசபையில் நடைபெற்றது. அப்போது, சட்டத்தின் பல்வேறு அம்சங்களுக்கு காங்., எம்.எல்.ஏ.,க்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். இதற்கு மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா பதிலளித்தார். பின்னர், குரல் ஓட்டெடுப்பு மூலம் மத சுதந்திர சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்தின்படி, ஒருவர் மதம் மாற விரும்பினால் 60 நாட்களுக்கு முன்பாக கலெக்டரிடம் விண்ணப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மத போதகரும் 60 நாட்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோரை கட்டாயப்படுத்தியோ, ஏமாற்றியோ மத மாற்றம் செய்தால் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.50,000 வரை அபராதமும் விதிக்கப்படும்.

ஒன்றுக்கும் மேற்பட்டோரை கட்டாயப்படுத்தியோ, ஏமாற்றியோ மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் வரை அபராதமும், மதமாற்ற திருமணங்கள் ரத்து செய்யப்படும் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *