செய்திகள்

மத்திய பிரதேசம், மிசோரமில் பலத்த பாதுகாப்புடன் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

புதுடெல்லி,நவ.28–

மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில், சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை துவங்கி நடைபெற்றது. இதற்காக இரு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வமுடன் ஓட்டளித்து வருவதால், ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.மத்தியபிரதேசத்தில் 230 தொகுதிகளுக்கும், வடகிழக்கு மாநிலமான மிசோரமில் 40 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள, 230 தொகுதிகளில், 2,907 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலில், 5.04 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். மொத்தம், 65 ஆயிரம் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மிசோரமில் 209 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலில், 7.70 லட்சம் வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர்.வட கிழக்கு மாநிலங்களிலேயே, மிசோரமில் மட்டுமே ஆட்சியில் உள்ளதால், ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில், காங்கிரஸ் களமிறங்கி உள்ளது. வட கிழக்கு மாநிலங்களில், பா.ஜ.க, மற்றும் அதன் கூட்டணி ஆட்சி இல்லாத ஒரே மாநிலம், மிசோரம் தான்.எனவே, இந்த மாநிலத்தில் வெற்றி பெற்று, வட கிழக்கு மாநிலங்கள் முழுவதும், பா.ஜ.க, ஆட்சியை மலரச் செய்ய, அக்கட்சி மேலிடம் திட்டமிட்டு உள்ளது.

மிசோரமில் காலை 7 மணி துவங்கி மாலை 4 மணிவரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. மத்திய பிரதேசத்தில் 3 தொகுதிகளில் மட்டும் காலை 7 மணிக்கும், மற்ற தொகுதிகளில் காலை 8 மணிக்கும் ஓட்டுப்பதிவு துவங்கி உள்ளது. இதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. இரண்டு மாநில சட்டசபை தேர்தல்களில் பதிவாகும் ஓட்டுகள், டிசம்பர்., 11ல் எண்ணப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *