செய்திகள்

மத்திய பட்ஜெட் புதிய ஊக்கத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும்: பிரதமர் மோடி

Makkal Kural Official

புதுடெல்லி, ஜன. 31–

மத்திய பட்ஜெட் புதிய ஊக்கத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடக்க உள்ளது. முதற்கட்டம் பிப்ரவரி 13ல் முடிகிறது. மார்ச் 10ல் துவங்கும் இரண்டாம் கட்ட கூட்டத்தொடர் ஏப்ரல் 4–ந்தேதி வரை நடக்க உள்ளது. 2025–26ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். தொடர்ந்து 8வது முறையாக அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் வளமும், வளர்ச்சியும் பெறவேண்டுமென நான் கடவுள் மகாலட்சுமியை பிரார்த்திக்கிறேன்.

நாட்டின் ஏழைகள், நடுத்தர மக்களுக்கு கடவுள் மகாலட்சுமி தேவியின் அருள் கிடைக்க வேண்டும். மகாலட்சுமி வெற்றியையும், விவேகத்தையும் தருபவர். பட்ஜெட் தாக்கலுக்கு முன் அன்னை லட்சுமியை வழிபட்டு விட்டு வருகிறேன்.

இந்தியா ஜனநாயக நாடாக உருவாகி 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது மிகவும் பெருமிதம் அளிக்கிறது. உலக அரங்கில் இந்தியா தன்னை நன்கு நிலை நிறுத்திக்கொண்டுள்ளது.

3வது முறையாக சேவையாற்ற நாட்டு மக்கள் வாய்ப்பு அளித்துள்ளனர். 3வது முறை ஆட்சியில் பா.ஜ.க. அரசு தாக்கல் செய்யும் முதல் முழு பட்ஜெட். அனைவருக்குமான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறும். 2047ம் ஆண்டு நாடு சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் நிறைவு செய்யும்போது இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக மாறும். அதற்காக தற்போதைய மத்திய பட்ஜெட் புதிய ஊக்கத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும்.

மக்களின் மேம்பாட்டிற்காக நாள்தோறும் பணியாற்றி வருகிறேன். 3வது முறை ஆட்சி காலத்தில் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகிறோம். பட்ஜெட் கூட்டத் தொடரில் ஏராளமான மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. பல வரலாற்று சிறப்பு மிக்க மசோதாக்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மக்களின் மேம்பாட்டுக்காக தொடர்ந்து பாடுபடுவோம். செயல்பாடு, மாற்றம் என்பது தான் எங்களின் தாரக மந்திரம். மகளிர் முன்னேற்றத்திற்காக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. 2047 ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற கனவை நிறைவேற்ற பட்ஜெட் கூட்டம் வழிகாட்டும். நாளை தாக்கலாகும் மத்திய பட்ஜெட் நாட்டின் வளர்ச்சியை மேலும் உறுதி செய்யும். இந்தியாவின் வளர்ச்சிக்கு அனைத்து எம்.பி.,களும் பங்களிப்பார்கள் என நம்புகிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *