செய்திகள்

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Makkal Kural Official

சென்னை, பிப்.2-

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய ‘பட்ஜெட்’ குறித்து முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-–

2-வது முறையாக ஆட்சிக்கு வந்து 10 ஆண்டு காலம் ஆட்சி செய்து, சொல்லிக்கொள்ள எந்தச் சாதனையும் செய்யாத பா.ஜனதா அரசு, ஆட்சிக்காலத்தையும் முடித்து விடைபெறும் நேரத்தில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. எடை போட்டுப் பார்க்க ஏதுமில்லாத வெற்று அறிக்கையை தாக்கல் செய்துள்ளார், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

கடந்த காலச் சாதனைகளையும் இந்த நிதிநிலை அறிக்கை சொல்லவில்லை. நிகழ்காலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகவும் இது அமையவில்லை. எதிர்காலப் பயன்களுக்கு உத்தரவாதம் தருவதாகவும் இல்லை. மொத்தத்தில், ஏதுமற்ற அறிக்கையை வாசித்து அளித்திருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். ஆட்சிக்காலம் முடியப்போகிறது என்ற அலட்சியம்தான் இந்த அறிக்கையில் தெரிகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் பல்வேறு சலுகைகளைப் பொதுமக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். பெட்ரோல், டீசல், சிலிண்டர் ஆகியவற்றின் விலைக்குறைப்பு இருக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் பொதுமக்களுக்கு ஏமாற்றத்தையே பரிசளித்துள்ளது இந்த நிதிநிலை அறிக்கை.

வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இருக்கும் என்று நடுத்தர மக்கள் எதிர்பார்த்தார்கள். அதனையும் வழங்கவில்லை. எந்தப் பொருளுக்கும் வரிக்குறைப்பு வழங்கப்படவில்லை. சலுகைகளும் ஏதுமில்லை. சாதாரண, சாமானிய, ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கான எந்த அறிவிப்பும் இல்லை. உழவர்களின் மிக முக்கியமான கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலை குறித்த அறிவிப்பு உண்டா? அதுவும் இல்லை. இப்படி ‘இல்லை… இல்லை…’ என்று சொல்வதற்காக எதற்கு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்? நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளது ‘இல்லா நிலை’ பட்ஜெட்டாக மட்டுமே அமைந்துள்ளது.

தமிழ்நாட்டுக்கு ஜி.எஸ்.டி.

ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு

நாட்டில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை நடைமுறைக்கு வந்த பிறகு வரி வசூல் அதிகரித்திருப்பதாக நிதி அமைச்சர் பெருமைப்பட்டு கொள்கிறார். ஆனால் மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையை இந்த ஆண்டு வழங்குவது குறித்து எந்தவொரு அறிவிப்பு இல்லாமல் இருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இதனால் இந்த ஆண்டு மட்டும் தமிழ்நாட்டுக்கு ஏறத்தாழ ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ‘ஏழைகள், மகளிர், இளைஞர்கள் மற்றும் உழவர்கள்’ ஆகிய 4 பிரிவினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று கூறி, இந்த 4 பிரிவினர்களையும் 4 சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. ஒருநாட்டின் நிதிநிலை அறிக்கையில் மிகவும் கண்டிக்கத்தக்க பிற்போக்குத்தனமான வருணாசிரம கருத்தைப் புகுத்துவது சமூகநீதிக்குப் புறம்பானது.

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் பாரதீய ஜனதாவுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்றும்; ஜூலை மாதம் நாங்கள்தான் பட்ஜெட் தாக்கல் செய்வோம் என்றும் மந்திரி சொல்லி இருப்பது உச்சகட்ட நகைச்சுவை. நிதிநிலை அறிக்கையை அரசியல் பேராசை அறிக்கையாக ஆக்கி இருக்கிறார். நிதிநிலை அறிக்கையில் மக்களை ஏமாற்றியது போல, மக்களும் ஏமாற்றத்தை பாரதீய ஜனதாவுக்கு தேர்தலில் வழங்குவார்கள்.

2014-ம் ஆண்டு முதன் முதலாக மோடி பிரதமர் ஆன போது புதிய இந்தியா பிறந்ததாகச் சொன்னார்கள். தற்போது 2047-ம் ஆண்டுதான் புதிய இந்தியா பிறக்கப் போவதாக நிதி அமைச்சர் சொல்லி இருக்கிறார். இவர்களால் புதிய இந்தியாவை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உருவாக்க முடியாது என்பதே உண்மை. புதிய இந்தியாவை ‘இந்தியா’ கூட்டணி நிச்சயம் உருவாக்கும். தமிழ்நாட்டு மக்கள் நலனை முழுமையாக புறக்கணித்து, தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு கிஞ்சித்தும் அக்கறை இல்லாமல் ஒரு நிதிநிலை அறிக்கையை தயாரித்து அளித்துள்ளார் நிதி அமைச்சர். இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தி.மு.க எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு முன்னால் கருப்புச் சின்னம் அணிந்து போராட்டமும் நடத்துவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *