செய்திகள் நாடும் நடப்பும்

மத்திய தரைக்கடல் பகுதியில் அதிகரிக்கும் இயற்கை சீற்றம்

மாசு தூசு கட்டுப்பாட்டை இனியும் தாமதிக்காமல் செயல்படுத்துவோம்


ஆர். முத்துக்குமார்


2015 ல் பாரீஸ் ஒப்பந்தம், 2023–ல் ஜி 20 மாநாடு புதுடெல்லியில் தலைவர்கள் பிரகடனம் இரண்டுமே அதிமுக்கிய நிகழ்வுகளாக வரும் தலைமுறைகள் வரலாற்று புத்தகங்களில் படிக்க இருக்கிறார்கள்!

இந்த ஒப்பந்தங்களின் முக்கிய சாராம்சம் தற்போதைய வர்த்தக மேம்பாடுகளும் இயற்கையைச் சீரழித்து வருவதால் வெப்பமயம் அதிகரித்துக் கொண்டிருப்பதை புரிந்துகொண்டு இனி வரும் எல்லா உற்பத்திகளும் தொழில்நுட்பங்களும் புவி வெப்பத்தை குறைப்பதற்கு உரிய உத்தியுடன் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தது.

குறிப்பாக கரும்புகை வெளியேற்றம் ஏற்படுத்தும் பாதகங்களை உடனடியாக குறைக்க பழைய தயாரிப்பு முறைகளை அதாவது தொழில்புரட்சி கால தொழில்நுட்பங்களையும் தயாரிப்பு முறைகளையும் கைவிட வேண்டுமென முடிவு செய்தனர்.

அதில் சிக்கல் என்ன ? முதலில் எண்ணெய் உபயோகத்தை குறைத்தாக வேண்டும். அதற்காக மின்சார வாகனங்களுக்கு மாறியாக வேண்டும்.

இப்படி எல்லாவற்றையும் மாற்ற முற்பட்டால் பழையவற்றை அழித்து புதியவை வர ஏற்படும் செலவுகளுக்கு பல நூறு மடங்கு அதிகமான முதலீடுகள் தேவைப்படுகிறது.

இதை இன்றைய பொருளாதாரச் சூழ்நிலையில் யோசிக்கவே முடியாது என்று உலகின் மிகப்பெரிய வல்லரசு பொருளாதாரமாக இருக்கும் அமெரிக்கா பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது.

அதன்பின் 2023 ல் நமது பிரதமர் மோடி எடுத்த முயற்சிகளின் பலனாக உலகின் முதல் 20 பொருளாதாரங்களாக இருக்கும் ஜி 20 அமைப்பின் உச்சி மாநாட்டின் இறுதியில் பசுமை புரட்சிக்கு வித்திடும் முயற்சியாய் கொண்டு வந்த பருவநிலை மாற்று ஒப்பந்தத்தை மீண்டும் பரிசீலனை செய்து ஒரு வழியாக எந்த எதிர்ப்புமின்றி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி விட்டது.

இந்த புது ஒப்பந்தம் பாரீஸ் ஒப்பந்தத்தின் சரத்துக்களை அடிப்படையாக கொண்டே அமைந்திருக்கிறது.

இதில் முக்கியமான அடிகோடிட்டு காட்டப்படும் அம்சம் 2030 ஆம் ஆண்டுக்குள் 43% கரும்புகை வெளியேற்றத்தை குறைப்பது என்றும் அதன்படி 2019 ல் இருந்த நிலையையே சராசரி குறியீடாக எடுத்துக் கொண்டு அதைவிட 43% குறைத்தாக வேண்டும் என்றும் ஜி 20 தலைவர்கள் உறுதி ஏற்றனர்.

இதுவும் பாரீஸ் ஒப்பந்தம் போல் காற்றில் பறக்க விடப்படுமா? வல்லரசுகளை யாராலும் கட்டுப்படுத்தவோ, தவறுகளை சுட்டிக்காட்டி எச்சரிக்கவோ முடியாத நிலையில் சர்வதேச அமைப்புகள் கையை பிசைந்தபடி செய்வது அறியாது தவிக்கின்றனர்.

2015 ல் நவம்பர் 8, 9 க்கு பிறகு நவம்பர் 30 முதல் டிசம்பர் 2 ந் தேதி வரை ஏற்பட்ட திடீர் ராட்சத மழையை கண்டவர்கள் இன்றும் அச்சத்துடன் தான் அது பற்றி யோசித்து பார்ப்பார்கள்.

அது போன்றே 2013 ல் உத்தரகாண்ட் பகுதியில் அதீத மழைப்பொழிவு சர்வநாசத்தை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

இதேபோன்று பல இயற்கை சீற்றங்களை உலகின் மிக சுவாரசியமான பருவநிலை கொண்ட எழில்மிகு பிரதேசமாக வர்ணிக்கப்படும் மத்திய தரைக்கடல் பகுதி அதாவது Mediteranean பிராந்தியத்தில் உள்ள ஸ்பெயின், போர்ச்சுக்கல், துருக்கி, மொராக்கோ, லிபியா, இஸ்ரேல், டூனிசியா, சிரியா பகுதிகளில் வறட்சியும் பிறகு அதீத மழைப்பொழிவும் அல்லது காட்டுத்தீ மேலும் நிலநடுக்கமும் போன்ற இயற்கை சீற்றங்கள் கடந்த 4 மாதங்களில் பல ஆயிரம் உயிர்ச்சேதங்களையும் நகரப் பகுதிகளில் படுநாசத்தையும் விளைவித்து வருகிறது.

மத்திய தரைக்கடல் பகுதி மிகச்சிறந்த சுற்றுச்சூழலுக்கு பெயர் பெற்றதாகும். இப்பகுதியில் என்றும் கோடையும் தேவையான மழைப்பொழிவும் மட்டுமே இருக்கும். என்றுமே குளிர் நிலை ஏற்பட்டதே கிடையாது.

ஆனால் கடந்த ஒரு வாரமாக லிபியாவில் வெள்ளக் காட்சிகளும் மரண செய்திகளும் உடைமைகளை இழந்தோரின் அழு குரலுமே ஊடகங்களில் இடம்பெறுகிறது.

இந்த மழைப்பொழிவுக்கு பின்னணியில் புவியின் வெப்பமய அதிகரிப்பு தான் அதிமுக்கிய காரணம் என்று வானிலை ஆய்வு மையங்கள் திட்டவட்டமாக உறுதிபட கூறி வருகிறது.

மேற்கே அட்லாண்டிக் பெருங்கடல், கிழக்கே ஆசிய கண்டம் என்று வரைபடத்தில் இடம் பெற்றிருக்கும் மத்திய தரைக்கடலை ஒட்டிய பகுதிகளில் வெப்பம் கடந்த 10 ஆண்டுகளாகவே அதிகரித்து வருவதாக வானிலை நிபுணர்கள் ஆராய்ந்து அறிந்து கூறி எச்சரித்து வந்தனர்.

அங்கு விசித்திரமான அபூர்வ உயிரினங்கள் அழியத் துவங்கி விட்டது, மழைப் பொழிவால் சமுதாய கட்டமைப்பும் கூட ஆட்டம் காணத் துவங்கிவிட்டதை இப்பிரதேசத்தில் கண்கூடாக பார்த்த நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள ஆயத்தமாக வேண்டும்.

சிறு பிளாஸ்டிக் துண்டுகள் முதல் கரும்புகை சமாச்சாரங்கள் எல்லாமே நமக்கு பகை என்பதை உணர்ந்து புதிய விழிப்புணர்வுடன் செயல்பட்டாக வேண்டிய தருணம் வந்து விட்டது.

மரம் செடிகொடிகள் வளர்ப்போம்;

மாசு தூசு கட்டுப்பாட்டை இனியும்

தாமதிக்காமல் செயல்படுத்துவோம்.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *