சென்னை, டிச.7-
தமிழ்நாட்டில் ‘பெஞ்ஜல்’ புயலால் பாதித்த பகுதிகளை பார்வையிட மத்தியக்குழு நேற்று சென்னை வந்தது. அந்தக்குழுவிடம் ரூ.6,675 கோடி சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
தமிழகத்தில் ‘பெஞ்ஜல்’ புயல் காரணமாக அதிக கனமழை பெய்ததால் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு பெரும் சேதத்தையும் உண்டாக்கியது.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2-ந் தேதி ஒரு கடிதம் எழுதினார்.
அதில் மத்திய அரசின் பல்துறை குழுவை அனுப்பி சேத விவரங்களை கணக்கிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் தமிழக வெள்ள சேதங்களை நேரில் பார்வையிட மத்தியக்குழு நேற்று மாலை சென்னை வந்தது.
இந்த குழுவில் மத்திய உள்துறை அமைச்சக பேரிடர் மேலாண்மை இணை செயலாளர் ராஜேஷ் குப்தா, மத்திய விவசாய மற்றும் உழவர் நலத்துறை இயக்குனர் பொன்னுசாமி, மத்திய நிதித்துறை இயக்குனர் சோனாமணி அவுபம், மத்திய ஜல்சக்தி துறை இயக்குனர் சரவணன், மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை முன்னாள் பொறியாளர் தனபாலன் குமரன், எரிசக்தித் துறை உதவி இயக்குனர் ராகுல் பாட்ச்கேட்டி, ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனர் பாலாஜி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர் நேற்று மாலை சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர்.
அப்போது அவர், ‘தமிழகத்தில் வெள்ளப்பாதிப்பால் ஏற்பட்ட பேரழிவிற்கு தற்காலிக மற்றும் நிரந்தர மறுசீரமைப்பு பணிகளுக்கு ரூ.6,675 கோடி நிதி வழங்க வேண்டும் என்று கூறி அதற்கான முழு விவரங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை அளித்தார்.
மேலும், அவர் மத்தியக்குழுவிடம் தமிழ்நாட்டிற்கு தேவையான நிவாரணப் பணிகள், நிரந்தர மற்றும் தற்காலிக மறு சீரமைப்பு பணிகளுக்காக நிதியினை பெற்றுத்தர விரைந்து பரிந்துரை செய்திட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட மத்தியக் குழுவினரிடம், தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம், வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் பெஞ்ஜல் புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து படக்காட்சிகள் மூலம் விளக்கினர். இந்த மத்தியக் குழுவினர் 2 நாள்கள் தமிழகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு செய்கின்றனர்.