தலையங்கம்
மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பதற்றத்தின் பின்னணியில், லெபனானை விட்டு உடனே வெளியேறுமாறு அமெரிக்கா தனது குடிமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. மத்திய கிழக்கில் நிலைமை “விரைவாக மோசமடையக் கூடும்” என்று கூறியுள்ள பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் டேவிட் லாம்மியும் இதேபோன்ற எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஜோர்டான் வெளியுறவு அமைச்சகமும் தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது, லெபனானில் உள்ளவர்களை உடனடியாக வெளியேறுமாறும், மற்றவர்கள் அங்கு பயணிக்க வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது. லெபனானுக்குச் செல்வதற்கு எதிரான தற்போதைய எச்சரிக்கையின் அடிப்படையில், இஸ்ரேலுக்கும் பயணத்தைத் தவிர்க்குமாறு கனடா தனது குடிமக்களை எச்சரித்துள்ளது.
நிலைமை இப்படி இருக்க ஐ.நா. சபை பிரச்சனைக்கு தீர்வுகாண களப்பணிகளை முடிக்கி விடாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பது எரிச்சலைத் தருகிறது.
சென்ற வாரம் ஐக்கிய நாடுகள் (ஐ.நா) பொதுச் செயலாளர், ‘மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை உடனடியாகக் குறைத்து, நீண்ட கால சமாதானத்திற்காக அனைவரும் தீவிரமாக உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், மொத்த மத்திய கிழக்கையும் பாதிக்கும் அழிவுகரமான விளைவுகளைத் தவிர்க்க, சர்வதேச சமூகம் ஒன்று திரண்டு செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நிலைமை எப்போது வேண்டுமானாலும் மேலும் மோசமடையக் கூடும்” என்பதே தற்போதைய நிலைமை.
டெஹ்ரானில் கடந்த புதன்கிழமை ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்காக இஸ்ரேலுக்கு “கடுமையான” பதிலடி கொடுக்கப் போவதாக ஈரான் சபதம் செய்துள்ளது. பெய்ரூட்டில் ஹெஸ்பொலா தளபதி ஃபுவாட் ஷுக்ரை இஸ்ரேல் கொன்ற சில மணிநேரத்திற்குப் பிறகு ஹனியே படுகொலை நடந்தது.
லெபனானை தளமாகக் கொண்ட ஹெஸ்பொலா, ஈரானின் அத்தகைய பதிலடியில் பெரும் பங்கு வகிக்கக்கூடும் என்றும், இது இஸ்ரேலின் கடுமையான பதிலடியை தூண்டக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் வடக்கு இஸ்ரேலில் உள்ள பெய்ட் ஹில்லெல் (Beit Hillel) நகரில் டஜன் கணக்கான ராக்கெட்டுகளை ஏவி ஹெஸ்பொலா, தாக்குதல் நடத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காட்சிகளில் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஏவுகணைகளை இடைமறிக்கும் காட்சிகளைக் காட்டுகின்றன.
கடந்த சில மாதங்களில், இஸ்ரேல் அரசு ஹெர்மெஸ் 900 ட்ரோன்களை காசா மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தியது, இதனால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்தனர். அதற்கு மேல், அடானி நிறுவனத்தின் எதிரி ட்ரோன் அமைப்புகளை இஸ்ரேல் பயன்படுத்தி வருகிறது. இந்த தயாரிப்பை அடானி ‘வேட்டைக்கார ட்ரோன்’ என குறிப்பிடுகிறது. இந்தியாவின் முன்னாள் நீதிபதிகள், பொருளாதார நிபுணர்கள், மற்றும் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து, இஸ்ரேலுக்கு ஆயுத அனுப்புவதை நிறுத்த கோரியுள்ளனர்.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் உலகளவில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சினையாகும். இதனால் ஏற்படும் பாதுகாப்பு சிக்கல்களும், சர்வதேச அரசியல் நிலவரங்களும், உலகின் பல நாடுகளையும் பாதிக்கிறது.