செய்திகள்

மத்திய கல்வி நிறுவனங்களில் 2 லட்சம் கூடுதல் இடங்கள்: மந்திரிசபை ஒப்புதல்

புதுடெல்லி, ஏப்.16-

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுபிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்காக மத்திய கல்வி நிறுவனங்களில் கூடுதலாக 2 லட்சம் இடங்களை உருவாக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்து உள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. தலித் பிரிவினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்காக தற்போது அமலில் இருக்கும் 50 சதவீத இடஒதுக்கீட்டுடன், இந்த 10 சதவீதமும் கூடுதலாக இணைக்கப்பட்டு உள்ளது.

இதற்காக அரசியல் சாசன திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதில் கல்வியில் 10 சதவீத ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் மத்திய கல்வி நிறுவனங்களில் 2 லட்சம் இடங்கள் கூடுதலாக உருவாக்க மத்திய அரசு முடிவு செய்தது.

இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை நேற்று கூடியது. இதில் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் முக்கியமாக இந்த 10 சதவீத இடஒதுக்கீட்டுக்காக மத்திய கல்வி நிறுவனங்களில் 2 லட்சம் கூடுதல் இடங்களை உருவாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. முடிவில் இந்த பரிந்துரைக்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

இந்த ஒப்புதலை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள 158 மத்திய கல்வி நிறுவனங்களில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 766 இடங்கள் கூடுதலாக உருவாக்கப்படும். இதில் 1,19,983 இடங்கள் வருகிற 2019–20-ம் கல்வி ஆண்டிலும், மீதமுள்ள 95,783 இடங்கள் 2020–21-ம் கல்வி ஆண்டிலும் ஏற்படுத்தப்படும்.

இதைப்போல இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக மேற்படி கல்வி நிறுவனங்களுக்கு ரூ.4315.15 கோடி ஒதுக்கீடு செய்வதற்கும் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், இந்த இடஒதுக்கீடு ஒப்புதலுக்காக மந்திரிசபையில் ஆலோசனையில் வைப்பதற்கு தேர்தல் கமிஷனின் அனுமதியை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதைத்தவிர இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. திட்டத்தின் 4-ம் கட்ட பணிகளை தொடரவும் மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தின் கீழ் 2021 முதல் 2024-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 5 ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. இதற்காக ரூ.2,729.13 கோடி தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *