புதுடெல்லி, பிப். 8–
மத்திய அரசை கண்டித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் டெல்லியில் இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.
மத்திய பா.ஜ.க. அரசின் இடைக்கால பட்ஜெட் கடந்த 1-ந் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு போதிய நிதி ஒதுக்காமல் புறக்கணிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டன. நிதி ஒதுக்கீடு செய்வதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தென் மாநிலங்கள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றன.
இந்த நிலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் இன்று கேரளா அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் எம்.பி.க்கள் மற்றும் இடதுசாரி கட்சி தலைவர்கள் கறுப்பு சட்டை அணிந்து மத்திய அரசை கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள்.
மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு டெல்லியில் உள்ள கேரள பவனில் இருந்து ஜந்தர் மந்தர் நோக்கி பேரணியாக சென்றனர்.
இந்த போராட்டத்தின்போது பினராயி விஜயன் பேசியதாவது:–
“மத்திய அரசுக்கு எங்களது வலுவான எதிர்ப்பை பதிவு செய்யவும், நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை பாதுகாக்கவும் நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம். அனைத்து மாநிலங்களையும் சமமாக நடத்துவதற்கான போராட்டத்தை தொடங்கியுள்ளோம். இன்றைய நாள், இந்திய வரலாற்றில் சிவப்பு எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட நாளாக இருக்கப் போகிறது எனத் தெரிவித்தார்.
இப்போராட்டத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோரும் பங்கேற்றனர்.
தி.மு.க. சார்பில் தமிழக அமைச்சர் பழனிவேல் ராஜன், திருச்சி சிவா எம்.பி. ஆகியோரும் கறுப்பு உடை அணிந்து பங்கேற்றனர்.
முன்னதாக கர்நாடகத்திற்கு அநீதி இழைத்துள்ளதாக மத்திய அரசை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் அரசு, டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று போராட்டம் நடத்தியது. முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், தினேஷ் குண்டுராவ், கே.எச்.முனியப்பா, எச்.கே.பட்டீல், ராமலிங்கரெட்டி, எச்.சி.மகாதேவப்பா உள்பட அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.அவர்கள் மத்திய அரசை கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தங்களின் கைகளில் ஏந்தியிருந்தனர்.