புதுடெல்லி, டிச. 21–-
மத்திய அரசு அறிவித்த 111 தேசிய நீர்வழி பாதைகளில் தமிழகத்தில் 12 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
நாட்டில் உள்ள நீர்வழி பாதைகள் குறித்து மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விகளுக்கு துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனவால் நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
அந்த பதிலில், “இந்தியாவில் உள்நாட்டு நீர்வழி போக்குவரத்தை ஊக்குவிக்க தேசிய நீர்வழி சட்டம்- 2016–-ன் படி 24 மாநிலங்களில் தற்போதுள்ள 5 நீர்வழி பாதைகளை சேர்த்து மொத்தம் 111 தேசிய நீர்வழி பாதைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டு அதற்கான பட்டியலும் வழங்கப்பட்டு இருந்தது. இதில் தமிழகத்தில் 12 திட்டங்கள் உள்ளன.
தேசிய நெடுஞ்சாலைகள் ‘என்.எச்.’ என குறிப்பிடப்படுவதைப்போல தேசிய நீர்வழிகள் ‘என்.டபுள்யு.’ (நேஷனல் வாட்டர்வே) என குறிப்பிடப்படுகின்றன.
இதில் என்.டபுள்யு. 4-ல் சென்னை வடக்கு பக்கிங்காம் கால்வாய் (316 கி.மீ. தூரம்), தெற்கு பக்கிங்காம் கால்வாய் (110 கி.மீ) மற்றும் மரக்காணம் முதல் புதுச்சேரி (22 கி.மீ.) வரையிலான நீர்வழி போக்குவரத்து திட்டங்கள் அடங்கியுள்ளன.
இதைப்போல 95 கி.மீ. தூர பவானி ஆறு நீர்வழி திட்டம் என்.டபுள்யு-20-லும், 311 கி.மீ. தூர காவிரி-கொள்ளிடம் நீர்வழி திட்டம் என்.டபுள்யு-55-லும், 5 கி.மீ. தூர மணிமுத்தாறு நீர்வழி திட்டம் என்.டபுள்யு-69-லும், 142 கி.மீ. தூர பாலாறு நீர்வழி திட்டம் என்.டபுள்யு.-75-லும், 20 கி.மீ. தூர பழையாறு நீர்வழி திட்டம் என்.டபுள்யு.-77-லும்,
126 கி.மீ. தூர பொன்னியாறு நீர்வழி திட்டம் என்.டபுள்யு.-80-லும், 62 கி.மீ. தூர தாமிரபரணியாறு நீர்வழி திட்டம் என்.டபுள்யு.-99-லும், 46 கி.மீ. தூர வைகை நீர்வழி திட்டம் என்.டபுள்யு.107-லும், கேரளா- கன்னியாகுமரி இடையிலான 11 கி.மீ. தூர ஏ.வி.எம். கால்வாய் நீர்வழி திட்டம் என்.டபுள்.யு.-13-லும் அடங்கியுள்ளன.