மின் உற்பத்தி பகிர்மான கழகம் விளக்கம்
சென்னை, ஜூன் 25–-
மின்சாரம் அதிகமாக பயன்படும் நேரங்களில், மின் கட்டணத்தை 20 சதவீதம் வரை உயர்த்தலாம் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதனால் தமிழ்நாட்டில் மின்நுகர்வோருக்கு பாதிப்பு இல்லை என்று மின் உற்பத்தி பகிர்மான கழகம் விளக்கம் அளித்து இருக்கிறது.
நாடு முழுவதும் நேரத்துக்கு ஏற்ப மின்கட்டணம் வசூலிக்கும் முறையை மத்திய அரசு அமல்படுத்த இருக்கிறது. பொதுவாக தற்போது மின்சாரத்தை ஒரு நாளின் எந்த நேரத்தில் பயன்படுத்தினாலும் ஒரே விதமான கட்டணம்தான் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில் மாற்றம் வருகிறது.
அதன்படி மின்சாரத்தை மிக அதிக அளவில் பயன்படுத்துகிற நேரத்துக்கு அதிக கட்டணமும், குறைவான அளவில் பயன்படுத்துகிற நேரத்துக்கு இயல்பை விட குறைந்த கட்டணமும் வசூலிக்கப்படும். அதற்கு ஏற்ற வகையில், தற்போது நடைமுறையில் இருந்து வரும் மின்கட்டண பட்டியலில் 2 மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
1. நேரத்துக்கு ஏற்றபடி மின் கட்டணம் வசூலிப்பதற்கான ‘டைம் ஆப் டே’ கட்டணமுறை.
2. ஸ்மார்ட் மீட்டர் விதிமுறைகளை எளிதாக்குதல்.
மாற்றங்கள் என்ன?
இந்த மாற்றங்கள் தொடர்பாக மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் விடுத்துள்ள அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* அதிகமாக மின்சாரம் பயன்படுத்தப்படுகிற ‘பீக் அவர்’ என்று அழைக்கப்படுகிற உச்ச நேரத்தில் (அதாவது காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை) மின்கட்டணம் 10 முதல் 20 சதவீதம் அதிகமாக இருக்கும்.
* ‘சோலார் அவர்’ என்று அழைக்கப்படுகிற நேரத்துக்கு, (இது மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களின் கணக்குப்படி ஒரு நாளில் 8 மணி நேரம்) இயல்பான கட்டணத்தைவிட 10 முதல் 20 சதவீதம் வரை கட்டணம் குறைவாக வசூலிக்கப்படும்.
* நேரத்துக்கு ஏற்ற மின்கட்டணம் வசூலிக்கும் இந்த புதிய முறை, 10 கிலோவாட் மின்சாரத்துக்கு அதிகமாக தேவைப்படுகிற வணிக, தொழில் நிறுவனங்களிலும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்படும்.
* அதுபோல் விவசாயத்துக்கு பயன்படுத்தும் மின் நுகர்வோர் தவிர்த்து இந்த புதிய முறை வீடுகளுக்கும் மற்றும் அனைத்து தரப்புகளுக்கும் 2025–-ம் ஆண்டு ஏப்ரல் 1–-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.
* அதுபோல் விவசாயத்துக்கு பயன்படுத்தும் மின்நுகர்வோர் தவிர்த்து இந்த புதிய முறை வீடுகளுக்கும் மற்றும் அனைத்து தரப்புகளுக்கும் 2025–-ம் ஆண்டு ஏப்ரல் 1–-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.
* ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட உடன், நுகர்வோருக்கு, நேரத்துக்கு ஏற்ப மின் கட்டணம் வசூலிப்பது அமலுக்கு வரும். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி விட்டால், மின்நுகர்வோர் தாங்கள் வெவ்வேறு நேரத்தில் பயன்படுத்துகிற மின்சாரம் எவ்வளவு, அதற்கான கட்டணம் எவ்வளவு என்பது போன்ற தகவல்களை மீட்டரில் பார்த்துக்கொள்ள முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாதிப்பு இல்லை
இந்த சூழலில் மத்திய அரசு அறிவித்துள்ள திருத்தத்தால், தமிழகத்தில் வீட்டு பயன்பாட்டு நுகர்வோர்களுக்கு பாதிப்பு இல்லை என்று மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-–
மாலை நேர உச்ச காலங்களில் 20 சதவீதம் மின் கட்டணம் கூடுதலாக உயர்த்தி நிர்ணயம் செய்ய வேண்டும். இந்த விதியின்படி தமிழகத்தில் மின் கட்டணம் நிர்ணயம் செய்யும் அதிகாரம் தமிழக ஒழுங்குமுறை ஆணையத்துக்கு உள்ளது. தற்போதுள்ள மின் கட்டண ஆணைப்படி, உச்சநேர கால அளவு கட்டணம் வீட்டு நுகர்வோர்களுக்கு நிர்ணயம் செய்யப்படவில்லை. எனவே இந்த திருத்தத்தால் தமிழகத்தில் வீட்டு நுகர்வோர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.
ஸ்மார்ட் மீட்டர் பொருத்திய பிறகு அபராதம் வசூல் செய்வது தொடர்பான விவகாரத்தில், தற்போது அபராதம் ஏதும் நிர்ணயம் செய்யப்படாததால் நுகர்வோர்கள் பாதிக்கப்படமாட்டார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.