மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு பதில்
சென்னை, ஜூலை 13-
தமிழ்நாட்டிற்கு அதிக நிதி ஒதுக்குகிறோம். மத்திய அரசின் நிதியை, தமிழக அரசு பயன்படுத்த முன்வர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
‘மக்களுடன் முதலமைச்சர்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தர்மபுரியில் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் அவர் பேசும்போது, ‘தமிழகத்தில் மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு கூட மத்திய அரசு நிதி ஒதுக்க மனமில்லை. கடந்த 10 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு எந்தவொரு பெரிய திட்டத்தையும் செய்யவில்லை.
மத்திய அரசு என்பது விருப்பு, வெறுப்புகளை கடந்து மக்களுக்காக செயல்பட வேண்டும். தமிழகத்தில் படுதோல்வி அடைந்த பிறகு கூட, பா.ஜ.க. பாடம் கற்கவில்லை’ என்று பேசினார்.
முதலமைச்சரின் இந்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்து மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசு திட்டங்களில் தமிழ்நாட்டை புறக்கணிப்பதாக கூறியுள்ளார். இது உண்மையில்லை. கடந்த 10 ஆண்டுகளில் சாதனை அடையும் அளவுக்கு தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் ரெயில்வே மேம்பாட்டுக்காக அதிகளவு நிதியை ஒதுக்கி உள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட ரெயில்வே மேம்பாட்டுத்தொகை ஆண்டுக்கு சராசரியாக ரூ.879 கோடி ஆக இருந்தது. ஆனால் தற்போது மத்திய அரசு 2024–25ம் ஆண்டில் மட்டும் தமிழகத்திற்கு ரூ.6 ஆயிரத்து 331 கோடி ஒதுக்கியுள்ளது.
2014ம் ஆண்டில் 4,985 கி.மீ மட்டுமே இருந்த தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம், இப்போது 6,806 கி.மீ ஆக அதிகரித்துள்ளது. 2014-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் இதுவரை ரூ.2 லட்சம் கோடி மதிப்பில் தேசிய நெடுஞ்சாலைகளில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தை ரூ.2,467 கோடி செலவில் நவீனமயமாக்கும் பணிகள் 2 கட்டங்களாக நடைபெறுகின்றன.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 15 லட்சம் வீடுகளுக்காக மத்திய அரசு ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி ஸ்வநிதி திட்டத்தின் கீழ் 5 லட்சம் பேருக்கு ரூ.670 கோடி வரை கடன் வழங்கப்பட்டுள்ளது. பிரதமரின் கிசான் சம்மன் திட்டத்தின் கீழ் 46 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.11 ஆயிரம் கோடி கொடுக்கப்பட்டுள்ளன. ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 1 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 41 லட்சம் வீடுகளுக்கு இலவச சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு ரூ.700 கோடியில் பலன் கிடைத்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் இந்தாண்டு ரூ.13,392.89 கோடி வழங்கப்பட்டுள்ளது. மதுரையில் ரூ.2,022 கோடி செலவில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இந்தியாவிலேயே முதன்முதலாக மெகா ஜவுளி பூங்காவுக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
உலக முக்கியத்துவம் வாய்ந்த ‘‘இந்தியாவின் நியூட்ரினோ ஆய்வகம்’’ என்ற ஒரு திட்டம் தமிழ்நாட்டில் முன்மொழியப்பட்டது. தமிழக அரசின் போதிய ஆதரவு இல்லாததால், கடந்த பல ஆண்டுகளாக இந்த திட்டம் தொடங்கப்படவில்லை. இதுதவிர உள்கட்டமைப்புத் திட்டங்களில் பல்வேறு பிரச்சினைகள் தமிழக அரசிடம் நிலுவையில் உள்ளன.
ரூ.20,077 கோடி மதிப்பிலான 10 மெகா உள்கட்டமைப்புத் திட்டங்களில் 25 பிரச்சினைகள் அரசிடம் நிலுவையில் உள்ளன. கொச்சி–கூட்டநாடு–பெங்களூரு–மங்களூர் குழாய், திண்டிவனம்–நகரி புதிய பாதை, சட்டநாதபுரம் முதல் நாகப்பட்டினம் வரை தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல திட்டங்கள் சிக்கல்களை எதிர்கொள்கின்றன. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் தாமதம், தேவையான அனுமதிகள், பயன்பாட்டு இடமாற்றம் போன்ற பிரச்சினைகள் உள்ளன.
ஜல்ஜீவன் திட்டம்
மேலும் அதேபோன்று 2019ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை, ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ், ரூ.12,491 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, இருப்பினும் தமிழகம் ரூ.5,167 கோடி மட்டுமே பயன்படுத்தி உள்ளது. பிரதமர் விஸ்வகர்மாவின் கீழ், 8.35 லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ள மாநிலங்களில் தமிழ்நாடு 10வது இடத்தில் உள்ளது. ஆனால் மாநில அரசின் இந்த ஒத்துழைப்பின்மையால் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மத்திய அரசு எந்த மாநிலத்துக்கும் பாகுபாடு காட்டுவதில்லை. மத்திய அரசு நிதியை பயன்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.