செய்திகள்

மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராக மாநில அரசுகள் தீர்மானம் இயற்றலாம் – உச்ச நீதிமன்றம் கருத்து

டெல்லி, மார்ச் 20–

மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராக மாநிலங்கள் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவதில் தவறு இல்லை, அது அந்தந்த மாநிங்களின் கருத்துகள் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தானைச் சேர்ந்த ‘சமதா அந்தோலன் சமிதி’ எனும் அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தது. அதில், ‘ராஜஸ்தான், கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநில அரசுகள், மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராகச் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்ற எந்த அதிகாரமும் இல்லை. மத்திய அரசின் சட்டங்கள் அனைத்தும் அரசியலமைப்பின் 7-வது அட்டவணைக்குள் வந்துவிடும். ஆதலால், இந்தத் தீர்மானங்களைச் செல்லாது என அறிவிக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சவுமியா சக்ரவர்த்தி ஆஜரானார்.

‘மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராக, சில மாநில அரசுகள் சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானங்களை ரத்து செய்து, அவை செல்லாது என அறிவிக்க வேண்டும். குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரள அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. ஒரு சட்டம் நல்லதா அல்லது மோசமானதா என கேரள அரசு கருத்து கூறக்கூடாது எனத் தெரிவித்தார்.

சட்டப்பேரவையின் கருத்து

அதற்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, ‘தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது, கேரள சட்டப்பேரவையின் கருத்து. சட்டத்துக்கு விரோதமாக மக்கள் நடக்க வேண்டும் என்று சட்டப்பேரவை கூறவில்லையே. சிஏஏ சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தைத் தானே வலியுறுத்தினார்கள். இது கருத்துதான். கருத்தைத்தான் சட்டப்பேரவை கூறியுள்ளது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக 60க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, இந்த விவகாரம் குறித்து விரிவான அறிக்கையை அடுத்த 4 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்று, மனுதாரரரின் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *