சென்னை, டிச.13-
மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:–
கொடுங்கோன்மைக்கு வழிவகுக்கும், ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவை நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. நடைமுறைக்கு ஒவ்வாத, மக்களாட்சிக்கு எதிரான இந்த நடவடிக்கை, மாநிலங்களின் குரலை அழித்து விடும்; கூட்டாட்சியியலைச் சிதைத்துவிடும்; அரசின் ஆட்சி நிர்வாகத்துக்குத் தடையை ஏற்படுத்தும்.
எழுக இந்தியா, இந்திய ஜனநாயகத்தின் மீதான இந்தத் தாக்குதலை நம் ஆற்றல் அனைத்தையும் ஒன்று திரட்டி எதிர்ப்போம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
மக்களவை காங்கிரஸ் துணைத்தலைவர் கவுரவ் கோகாய் கூறும்போது, ‘தேர்தல்கள், தேர்தல் அமைப்பு, தேர்தல் கண்ணியம் குறித்து எங்கள் கட்சி ஏராளமான கேள்விகளை எழுப்பி வருகிறது. மக்கள் மனதிலும் எழுந்துள்ள இந்த கேள்விகளிலிருந்து திசைதிருப்பவே இந்த மசோதாக்களை கொண்டு வருகிறார்கள்’ என தெரிவித்தார்.
இந்த திட்டத்தை எதிர்த்து கடந்த ஜனவரி மாதம் காங்கிரஸ் தலைவர் கார்கே, ராம்நாத் கோவிந்த் கமிட்டிக்கு எழுதிய கடிதத்தை கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேசும் பகிர்ந்து உள்ளார்.
மேற்கு வங்காள முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தனது எக்ஸ் தளத்தில், ‘எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல் நிபுணர்களின் நியாயமான கவலையையும் புறக்கணித்து, அரசி யலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான மற்றும் கூட்டாட்சிக்கு எதிரான ஒரு நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து இருக்கிறது. இது இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி அமைப்பை சீரழிக்கும் ஒரு சர்வாதிகார திணிப்பு’ என சாடியுள்ளார்.