செய்திகள்

மத்திய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு

அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலாவின் துறைகளில் மாற்றம் இல்லை

புதுடெல்லி, ஜூன்.11-

புதிதாக பதவியேற்றுள்ள மத்திய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டன. பாதுகாப்பு துறை அமைச்சராக ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சராக அமித்ஷா, நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சராக ஜெய்சங்கர் உள்பட 13 துறைகளில் மாற்றம் இல்லாமல் முந்தைய அமைச்சர்களே நியமிக்கப்பட்டு உள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று உள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 3-வது முறையாக மோடி நேற்று முன்தினம் பிரதமராக பதவியேற்றார்.

அவருடன் 30 கேபினட் மந்திரிகள், 5 தனிப்பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரிகள், 36 ராஜாங்க மந்திரிகள் என மேலும் 71 பேரும் மத்திய மந்திரிகளாக பதவியேற்றுக்கொண்டனர்.

பிரதமர் மோடியின் மந்திரி சபையில் அவருடன் சேர்த்து 61 பேர் பா.ஜ.க.வில் இருந்து மந்திரிகளாகி இருக்கிறார்கள். மீதமுள்ள 11 இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

இதில் தெலுங்குதேசம் மற்றும் ஐக்கிய ஜனதாதளத்துக்கு தலா 2 பதவிகளும், மீதமுள்ள 7 கட்சிகளுக்கு தலா ஒரு பதவியும் வழங்கப்பட்டு உள்ளன.

புதிதாக பதவியேற்றுக்கொண்ட மந்திரிகளுக்கு நேற்று இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. பிரதமர் மோடி பரிந்துரையின்பேரில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இலாகாக்களை ஒதுக்கீடு செய்துள்ளார்.

பணியாளர் நலன் மோடி

இந்த பட்டியலை நேற்று மாலையில் ஜனாதிபதி மாளிகை வெளியிட்டது.

இதில் பிரதமர் மோடி பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளி, அனைத்து முக்கிய கொள்கை விஷயங்கள் மற்றும் பிறருக்கு ஒதுக்கப்படாத அனைத்து இலாகாக்களையும் கவனிப்பார்.

கேபினட் மந்திரிகளில் முக்கியமாக முந்தைய மந்திரி சபையில் முக்கிய இடம் வகித்த ராஜ்நாத் சிங் (ராணுவம்), அமித்ஷா (உள்துறை, கூட்டுறவு), நிர்மலா சீதாராமன் (நிதி, கார்பரேட் நலன்), நிதின் கட்காரி (சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்), ஜெய்சங்கர் (வெளியுறவு). பியூஸ் கோயல் (வர்த்தகம் மற்றும் தொழில்) ஆகியோர் அந்தந்த துறைகளை தக்க வைத்து உள்ளனர்.

இதைப்போல தர்மேந்திர பிரதான் (கல்வி), சர்பானந்தா சோனோவால் (நீர்வழி, துறைமுகங்கள்), அஸ்வினி வைஷ்ணவ் (ரெயில்வே, ஒளிபரப்பு, தகவல் தொழில்நுட்பம்), ஜூவல் ஓரம் (பழங்குடியினர் நலன்), பூபேந்திர யாதவ் (சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாடு), ஹர்தீப் சிங் புரி (பெட்ரோலியம், இயற்கை எரிவாயு). வீரேந்திர குமார் (சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்) ஆகியோருக்கும் முந்தைய துறைகளே ஒதுக்கப்பட்டு உள்ளன.

ஜே.பி.நட்டாசுகாதாரம்,

குமாரசாமி கனரக தொழில்

புதுமுகங்களை பொறுத்தவரை பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், ரசாயனம் மற்றும் உரத்துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.

சிவராஜ் சிங் சவுகான் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன், ஊரக மேம்பாட்டுத்துறைகள் பெற்று இருக்கிறார்.

மனோகர் லால் கட்டார் மின்சாரம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு துறைகளுக்கு மந்திரி ஆகியிருக்கிறார்.

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமிக்கு கனரக தொழில்கள் மற்றும் உருக்குத்துறை ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

ஜிதன் ராம் மஞ்சி சிறு, குறு நடுத்தர தொழில்கள் துறை பெற்றுள்ளார்.

ராஜீவ் ரஞ்சன் சிங் (எ) லாலன் சிங்குக்கு பஞ்சாயத்து ராஜ், மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறையும், ராம் மோகன் நாயுடுவுக்கு சிவில் விமான போக்குவரத்து துறையும், சிராக் பஸ்வானுக்கு உணவு பதப்படுத்தல் துறையும், சி.ஆர். பாட்டீலுக்கு ஜல்சக்தி துறையும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

முந்தைய ஆட்சியில் சுற்றுலாத்துறை மந்திரியாக இருந்த கிஷன் ரெட்டி தற்போது நிலக்கரி மற்றும் சுரங்கத்துறையை பெற்று இருக்கிறார். மேலும் சுகாதாரத்துறையை கவனித்த மன்சுக் மாண்டவியா தற்போது தொழிலாளர், வேலைவாய்ப்பு துறைகளுடன் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையையும் பெற்றுள்ளார்.

எல்.முருகனுக்கு

நாடாளுமன்ற விவகாரத்துறை

இதைப்போல உணவு பதப்படுத்துதல், சட்டம் உள்ளிட்ட துறைகளை முந்தைய ஆட்சியில் கவனித்த கிரண் ரிஜிஜுவுக்கு தற்போது நாடாளுமன்ற விவகாரத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

ஜல்சக்தி துறை மந்திரியாக இருந்த கஜேந்திர சிங் செகாவத் கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை மந்திரியாகி இருக்கிறார். கல்வித்துறை இணை மந்திரியாக இருந்த அன்னபூர்ணா தேவிக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை கேபினட் பொறுப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.

சிவில் விமானப்போக்குவரத்து மந்திரியாக இருந்த ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு தகவல் தொடர்பு மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாடு துறையும், கால்நடைத்துறை மந்திரியாக இருந்த கிரிராஜ் சிங்குக்கு ஜவுளித்துறையும், நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரியாக இருந்த பிரகலாத் ஜோஷிக்கு நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது வினியோகம், புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி துறையும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

தனிப்பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரிகளில் முக்கியமாக ஜிதேந்திர சிங் (அறிவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள்), அர்ஜுன் ராம் மெக்வால் (சட்டம் மற்றும் நீதி) ஆகியோர் ஏற்கனவே வகித்த இலாகாக்களை பெற்று உள்ளனர்.

ராஜாங்க மந்திரிகளில் முக்கியமாக தமிழகத்தை சேர்ந்த எல்.முருகனுக்கு நாடாளுமன்ற விவகாரத்துறையும், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

கேரளாவில் பா.ஜ.க.வை கொண்டு சேர்த்த நடிகர் சுரேஷ் கோபிக்கு சுற்றுலா, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *