செய்திகள்

மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

Makkal Kural Official

மதுரை, அக். 9–

மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, திருச்சி, கோவைக்கு அடுத்தபடியாக மதுரை விமான நிலையம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இங்கிருந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா மற்றும் அரபு நாடுகளும், உள்நாட்டில் சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மதுரை விமான நிலைய இயக்குனருக்கு வந்திருந்த இ-மெயிலில் மதுரை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் வந்தது.இதனையடுத்து விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் கலெக்டர், போலீஸ் கமிஷனருக்கு தகவல் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து மதுரை விமான நிலைய உள் வளாகம் மற்றும் வெளி வளாக பகுதிகளில் மதுரை விமான நிலைய மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மூலம் தீவிர சோதனை செய்யப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டது. மேலும் வாகன நிறுத்தும் இடங்கள், பயணிகள் வரும் இடங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் மூலம் தீவிர சோதனை செய்யப்பட்டது.

இறுதியில் வெடிகுண்டு மிரட்டல் செய்தியில் உண்மையில்லை என தெரியவந்தது. இருப்பினும் விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். கடந்த 28-ந் தேதி இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் வெடிகுண்டு வைத்துள்ளதாக வந்த தகவலையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து மதுரை விமான நிலைய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *