செய்திகள்

மதுரை – ராமேஸ்வரம் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்: அக்டோபர் 7 முதல் இயக்கம்

ராமேஸ்வரம், அக். 2–

பயணிகளின் வசதிக்காக 7ஆம் தேதி முதல் மதுரை – ராமேஸ்வரத்துக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

கொரோனா ஊரடங்கால் மதுரை கோட்ட ரயில்வேயில் இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டது. இதற்கிடையே, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மதுரையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, இந்த ரயில் (வண்டி எண் 06654), 7ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து அதிகாலை 5.40 மணிக்கு புறப்பட்டு காலை 9.30 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடையும். மறுமார்க்கத்தில், இந்த ரயில் (வண்டி எண் 06655) மதுரையில் இருந்து மாலை 6.10 மணிக்கு புறப்பட்டு இரவு 10 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.

எங்கெங்கு நிற்கும்?

இந்த ரயில் பாம்பன், மண்டபம், உச்சிப்புளி, ராமநாதபுரம், சத்திரக்குடி, பரமக்குடி, சூடியூர், மானாமதுரை, திருப்பாச்சேத்தி, திருபுவனம், சிலைமான், கீழ்மதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

6 ஆம் தேதி மகாளய அமாவாசை கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், 5, 6ஆம் தேதிகளில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் வழிபடவும், அக்னி தீர்த்த கடற்கரை பகுதிக்குச் செல்லவும், நீராடவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 7ஆம் தேதி முதல் இந்த முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *