செய்திகள்

மதுரை, மடப்புரம் அம்மன் கோவில்களில் பெண் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு

திருப்புவனம், ஜூலை.19

அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் முதல் வெள்ளியான இன்று மதுரை அம்மன் கோவில்களிலும் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலும் ஏராளமான பெண்கள் அதிகாலை முதலே சென்று விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர்.

அம்மனுக்கு உகந்த மாதம் ஆடி மாதம். பெண்கள் விரதம் இருந்து அம்மனுக்கு வெள்ளிகிழமை அன்று விளக்கேற்றி வழிபட்டால் வாழ்வு நலம் பெறும் என்பது ஐதீகம். இந்த ஆடி மாதத்தில் முதல் வெள்ளியான இன்று அம்மன் கோவில்களில் எல்லாம் ஏராளமான பெண் பக்தர்கள் சென்று விளக்கேற்றி, பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். மதுரை தெப்பக்குளம் வண்யூர் மாரியம்மன் கோவிலில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பெண்கள் கோவிலுக்கு வந்து விளக்கேற்றியும் பொங்கல் வைத்தும் மாரியம்மனை வழிபட்டனர். ஆடி முதல் வெள்ளி என்பதால் மாரியம்மன் விஷேச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மேலும் ரிசர்வ் லைன் மாரியம்மன் கோவில், புதூர் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட நகரில் உள்ள அம்மன் கோவில்களில் எல்லாம் இன்று ஏராளமான பெண்கள் சென்று விளக்கேற்றி வழிபட்டனர்.

திருப்புவனம் பத்ரகாளியம்மன்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் பத்திரகாளியம்மன் திருக்கோவிலில் இன்று முதல் ஆடி வெள்ளி என்பதால் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்தும் இருசக்கர வாகனங்கள், கார் மற்றும் நகர் பேருந்துகளில் 1,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் அதிகாலை முதலே வரத்தொடங்கினர்.

பத்ரகாளியம்மன் கோவிலில் ஏராளமான பெண்கள் விளக்கேற்றியும் பொங்கல் வைத்தும் அம்மனை வழிபட்டனர். திருப்புவனம் சந்தை பகுதிகளில் கார்கள் பார்க்கிங் செய்யப்பட்டன. மடப்புரம் விலக்கு ஆர்ச் வரை மட்டுமே ஆட்டோக்களும், இருசக்கர வாகனங்களும் அனுமதிக்கப்பட்டனர். அதனால் மடப்புரம் ஆர்ச்சில் இருந்து பக்தர்கள் அனைவரும் காளியம்மன் கோவிலுக்கு சுமார் 2 கி.மீட்டர் தூரம் நடந்தே சென்று வழிபட்டனர். ஆடி வெள்ளியையொட்டி பத்திரகாளியம்மனுக்கு சிறப்பு அலங்காரங்களும், ஆதாரனைகளும் நடைபெற்றன. பக்தர்களுக்கு பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அழகர்கோவிலிலுள்ள கள்ளழகர் கோவில் 18 ம் படி கருப்பணசுவாமி கோவில் மற்றும் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவில், ஆடி மாத முதல் வெள்ளிகிழமையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து நெய் விளக்கேற்றி தரிசனம் செய்தனர். முன்னதாக அழகர் மலை உச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற நூபுர கங்கை புனித தீர்த்தத்தில் அதிகாலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீராடி அங்குள்ள ராக்காயி அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் மதுரை, திண்டுக்கல், கோவை, சிவகங்கை, திருச்சி, உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வந்திருந்து தரிசனம் செய்தனர்.

மடப்புரம் விலக்கு விநாயர்

ஆடி வெள்ளியை முன்னிட்டு மடப்புரம் விலக்கு ஆர்ச் எதிரில் உள்ள திசைமாறிய தெற்கு முக விசாலாட்சி விநாயகர் திருக்கோவிலும் திருக்கோவில் நிர்வாகியும் பிரபல ஜோதிடருமான கரு.கருப்பையா தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் மடப்புரம் அருகில் உள்ள செங்கடியம்மன் கோவிலிலும், திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் உள்ள பெரிய கோவில் என்று அழைக்கப்படும் புஷ்பவனேஸ்வர் சௌந்திரநாயகியம்மன் திருக்கோவிலிலும், திருப்புவனம் ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் உள்ள மாரியம்மன் திருக்கோவிலிலும் ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகள் விமர்சியாக நடைபெற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *