செய்திகள்

மதுரை பாரதீய ஜனதா கட்சி சார்பில் தினமும் ஏழைகளுக்கு உணவு

Spread the love

மதுரை பாரதீய ஜனதா கட்சி சார்பில் தினமும் ஏழைகளுக்கு உணவு :

மண்டல தலைவர் அண்ணாமலை வழங்கினார்

 

மதுரை, ஏப். 15–

மதுரை பாரதீய ஜனதா கட்சி திருப்பாலை மண்டல் சார்பில் ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தினமும் உணவு மற்றும் உதவிகளை மண்டல் தலைவர் அண்ணாமலை வழங்கி வருகிறார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மே 3 ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்த ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்படும் ஏழை மக்களுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் உதவவேண்டும் என பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த வேண்டுகோளை ஏற்று மதுரை பா.ஜ.க திருப்பாலை மண்டல் தலைவர் அண்ணாமலை ஊரடங்கு உத்தரவு தொடங்கப்பட்ட நாளிலிருந்து மண்டல் பகுதிக்கு உட்பட்ட அய்யர்பங்களா, உச்சபரம்புமேடு, கொசகுளம், ஆனையூர், சிலையநேரி, பண்டாபீஸ் காலனி போன்ற பகுதிகளில் உள்ள ஏழைகளுக்கு தினமும் உணவு பொட்டலங்கள் வழங்கி வருகிறார். பண்டாபீஸ் காலனியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த 20 பேருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகைப் பொருள்களை வழங்கியுள்ளார். மேலும் மோடி கிச்சன் தொடங்கி அந்த பகுதியில் உள்ள ஏழைகளை கண்டறிந்து 150 பேருக்கு தினமும் உணவு வழங்கி வருகிறார்.

மேலும் கட்சி மண்டல் நிர்வாகிகள் மூலமும், வேன்களில் எடுத்துச் சென்றும் சிலையநேரி, ஆனையூர் பகுதிகளில் உள்ள ஏழைகளுக்கு தினமும் ஒரு வகை சாதம் தயார் செய்து 200 பேருக்கு வழங்கி வருகிறார். மேலும் மண்டல் பகுதிக்கு உட்பட்ட எல்லா இடங்களிலும் கபசுரகுடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கி வருகிறார்.

மேலும் பண்டாபீஸ்காலனி, கொசகுளம் போன்ற பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளுக்கு முகக்கவசம் இல்லாமல் வருபவர்களுக்கு முகக்கவசம் கொடுத்து வருகிறார்.

மேலும் அந்தந்த பகுதிகளில் உள்ள உடல் ஊனமுற்றவர்களை கண்டறிந்து உதவிகள் செய்து வருகிறார். இந்நிகழ்வில் மண்டல் நிர்வாகிகள் அன்பழகன், வைரமுத்து, அழகப்பன், பாலசுந்தரம் ஆகியோரும் கலந்து கொண்டு பணி செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *