போஸ்டர் செய்தி

மதுரை தேர்தலை ரத்து செய்ய கோரிய வழக்கு: ஐகோர்ட் தள்ளுபடி

மதுரை, ஏப். 15–

மதுரை மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்ய கோரிய வழக்கை ஐகோர்ட் மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மதுரை மக்களவைத் தொகுதி சுயேச்சை வேட்பாளர் கே.கே.ரமேஷ் என்பவர், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “ கடந்த மார்ச் 31-ஆம் தேதி மதுரையில் அண்ணா தி.மு.க. தரப்பில் செளராஷ்டிரா கிளப்பில் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு செளராஷ்டிரா சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 4,000 பேர் தனியார் வாகனத்தில் அழைத்து வரப்பட்டனர். அதில் ஒவ்வொருக்கும் ரூ.500 மற்றும் பிரியாணி, இனிப்பு பெட்டிகள் வழங்கப்பட்டன.

இதுமட்டுமின்றி தி.மு.க.வினரும் இதேபோல் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருள்கள் வழங்குகின்றனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதுபோன்று தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் கொடுப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. எனவே மதுரை மக்களவைத் தொகுதி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேர்தல் ஆணையம் கூறிய விளக்கத்தை ஏற்று அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *