செய்திகள்

மதுரை ‘டங்ஸ்டன்’ கனிமச்சுரங்க ஏலத்தை ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பு

Makkal Kural Official

புதுடெல்லி, ஜன.24-

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி பகுதியில் வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை 50 கிராம மக்கள் எதிர்ப்பு காரணமாக ரத்து செய்வதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த அறிவிப்பால் அப்பகுதி மக்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், கும்மியடித்தும் கொண்டாடினர்.

மின்விளக்கு இழைகள், மின்னணு சாதனங்கள் மற்றும் ராக்கெட் உதிரி பாகங்களின் பயன்பாட்டுக்கான ‘டங்ஸ்டன்’ கனிமம் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதியில் இருப்பதாக இந்திய புவியியல் ஆய்வு நிறுவன நிபுணர்கள் சமீபத்தில் கண்டறிந்து மத்திய அரசிடம் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அங்கு 4,981.64 ஏக்கர் நிலத்தில் ‘டங்ஸ்டன்’ கனிமத்தை எடுப்பதற்கு ஆய்வுடன் கூடிய, சுரங்க உரிம குத்தகைக்கு மத்திய சுரங்க அமைச்சகம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏல அறிவிப்பை வெளியிட்டது. இந்த உரிமத்தை பெற பல்வேறு நிறுவனங்கள் போட்டியிட்ட நிலையில் வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங் நிறுவனத்துக்கு கடந்த நவம்பர் மாதம் உரிமம் வழங்கப்பட்டது.

இந்த திட்டத்தை அரிட்டாப்பட்டி, நாயகர்பட்டி உள்ளிட்ட 50 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக எதிர்த்தனர். திட்டத்தை கைவிட வேண்டும் என போராட்டங்களை நடத்தினர்.

இதற்கு மேலூர் பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து போராட்டத்தில் குதித்தனர்.

50 கிராம மக்கள் எதிர்ப்பு

ஏற்கனவே, சுரங்கம் அமைய இருந்த பகுதியை பல்லுயிர் பெருக்க மண்டலமாக தமிழ்நாடு அரசு கடந்த 2022-ம் ஆண்டு அறிவித்து இருந்தது. எனவே, கனிமச்சுரங்கம் இந்த பல்லுயிர்ப் பெருக்க மண்டலத்துக்கு பாதிப்பு ஏற்படும் என மக்கள் வாதிட்டனர். அதுபோல தமிழர் கல்வெட்டுகள், சமணர் படுகைகள், குடவரைக் கோவில்கள் போன்ற பண்பாட்டு, கலாசார அம்சங்களும் அங்கு இருப்பதால் அவற்றுக்கும் பாதிப்பு ஏற்படும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.

50 கிராம மக்களின் எதிர்ப்பை கருத்தில் கொண்டு, இந்த திட்டத்தை ரத்து செய்யுமாறு தமிழ்நாடு அரசும், மத்திய அரசை வலியுறுத்தியது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக கடந்த நவம்பர் மாதம் 29-ந்தேதி பிரதமருக்கு கடிதம் எழுதினார். கடந்த 9-ந்தேதி தமிழ்நாடு சட்டசபையில், ‘டங்ஸ்டன்’ கனிமச்சுரங்க திட்டத்தை ரத்து செய்யக்கோரி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

பல்வேறு கட்சித் தலைவர்களும் மேலூர் பகுதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைச் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். இதற்கிடையே, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பு பொருட்களை வாங்காமல் அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி கிராம மக்கள் புறக்கணித்தனர். தமிழக பா.ஜ.க.வும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக நின்றது. நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளைச் சேர்ந்த அம்பலக்காரர்கள் என்று சொல்லப்படும் ஊர் முக்கிய பிரமுகர்களுடன் அண்ணாமலை டெல்லியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்தார்.

அப்போது, பிரதமர் மோடியுடன் இது தொடர்பாக பேசி நல்ல முடிவை தெரிவிப்பதாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக் காக மதுரை மேலூர் பகுதி மக்கள் காத்திருந்தனர். அவர்கள் எதிர்பார்த்ததுபோல், ‘டங்ஸ்டன்’ திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது.

மத்திய அரசு அறிவிப்பு

இதுதொடர்பாக சுரங்க அமைச்சகம் வெளியிட்ட அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சுரங்க அமைச்சகத்தின் 2024-ம் ஆண்டு டிசம்பர் 24-ந் தேதியிட்ட ஒரு செய்திக்குறிப்பில், ‘டங்ஸ்டன்’ தொகுதி ஏல நடைமுறைக்குப் பிறகு, அப்பகுதியில் பல்லுயிர் பாரம்பரிய தளம் உள்ளது என்ற அடிப்படையில் ஏலத்துக்கு எதிராக கருத்துகள் பெறப்பட்டுள்ளன என கூறப்பட்டு இருந்தது.

மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை, தமிழகத்தின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அம்பலக்காரர்கள் டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிம தொகுதியில் அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தளமும், பல கலாசார தலங்களும் உள்ளன என்று அம்பலக்காரர்கள் மத்திய அமைச்சரிடம் தெரிவித்தனர். எனவே, நாயக்கர்பட்டி டங்ஸ்டன் தொகுதி ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை யும் விடுத்தனர்.

இந்த குழுவினரின் கோரிக்கைகளை பொறுமையாகக் கேட்டறிந்த மத்திய அமைச்சர், பல்லுயிர் பாரம்பரிய பாதுகாப்புக்கு மத்திய அரசு முழு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தார்.

பின்னர் விரிவான ஆலோசனை களுக்குப் பிறகு, அப்பகுதியில் பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவத்தையும், பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் மோடியின் தலைமையில் செயல்படும் மத்திய அரசின் உறுதிப்பாட்டையும் கருத்தில் கொண்டு நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதியின் ஏலத்தை ரத்து செய்ய சுரங்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மக்கள் மகிழ்ச்சி

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு மேலூர் பகுதி மக்கள் உற்சாகமான முழக்கத்துடன் கிராமங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அரிட்டாபட்டி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் பட்டாசுகள் வெடித்தும் சிறுவர்கள், பெண்கள் உட்பட பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். பெண்கள் கும்மியடித்தும், ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு மூலம் நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரையிலான 3 மாதங்கள் நீடித்த தொடர் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இதனால், மேலூர் பகுதி கிராம மக்கள், விவசாயிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் நிம்மதி அடைந்துள்ளனர். போராடி வெற்றி பெற்ற மக்களுக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

எடப்பாடி வரவேற்பு

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ‘எக்ஸ்’ தள பதிவில் கூறியிருப்பதாவது:-

மதுரை மாவட்டம் மேலூர் அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதை வரவேற்கிறேன். இது மேலூர் பொதுமக்களின் தொடர் போராட்டத்திற்கும், இவ்விவகாரத்தில் மேலூர் மக்களுக்கு நியாயம் கிடைக்கும் விதமாக நான் சட்டமன்றத்தில் ஆதாரங்களுடன் பேசியதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க. மேற்கொண்ட முன்னெடுப்புகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

தங்கள் உரிமைகளுக்காக, தொடர்ந்து போராடி வென்ற மேலூர் மக்களுக்கு எனது வாழ்த்துகள். டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் இரட்டை வேட நாடகமாடி மக்களை ஏமாற்ற முயற்சித்த தி.மு.க. அரசின் சதிவேலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

மேலூர் மக்களின் போராட்டத்தை உணர்ந்து, மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை ரத்து செய்ததன் மூலம் மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைவர்கள் வரவேற்பு

இதேபோல் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநிலத்தலைவர் நெல்லை முபாரக், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோரும் வரவேற்றுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *