செய்திகள் போஸ்டர் செய்தி

மதுரை சலூன்காரர்: பிரதமர் மோடி மனம் திறந்து பாராட்டு

புதுடில்லி, மே.31–
மதுரையில் சலூன் கடை நடத்தி வரும் மோகன் என்பவர், தனது மகள் படிப்பிற்காக வைத்திருந்த ரூ.5 லட்சத்தை ஊரடங்கு காலத்தில், வாழ்வாதாரம் பாதி்க்கப்பட்ட ஏழைகளுக்கு அளித்து உதவியுள்ளார். இதற்காக அவருக்கு ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இன்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரை வருமாறு:
உயிர்க்கொல்லி கொரோனாவிற்கு எதிராக 130 கோடி மக்களும் போரிட்டு வருகின்றனர். கொரோனா வைரசுக்கு எதிராக மக்கள் வலுவாக போராடி வருகிறார்கள். கொரோனாவுக்கு எதிரான போர், மக்கள் இயக்கமாக மாறி உள்ளது. இந்திய மக்களின் சேவை மனப்பான்மை காரணமாகவே இந்த போரை வலுவுடன் போராட முடிகிறது. ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக விலக்கப்படும் நிலையில் மக்கள் மேலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.தனிமனித இடைவெளியை மக்கள் கடைபிடித்தால் தான் வைரசில் இருந்து நாம் தப்பிக்க முடியும்.
கொரோனாவிற்கு எதிரான போரில் வெற்றி பெறுவதற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. கொரோனா துயரம் எந்தவொரு பிரிவினரையும் விட்டு வைக்கவில்லை. சாமானியர்கள், ஏழைகளின் துயரம் வார்த்தைகளால் விவரிக்க இயலாது. மத்திய, மாநில உள்ளாட்சி அமைப்புகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. அனைவருக்கும் சோதனை, சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மற்ற நாடுகளை விட இந்தியாவில் வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ளது. இந்தியாவை பார்த்து பிற நாடுகள் ஆச்சர்யப்படுகின்றன.
கொரோனாவை எதிர்கொள்ளும் அதே நேரத்திலும் பொருளாதாரத்திலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது. பொருளாதாரத்தின் அங்கமான தொழில்துறை தற்போது திறக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில் நாம் கூடுதல் கவனத்தோடு இன்னும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். கூடுதல் எச்சரிக்கையுடன் தொழில்துறை தற்போது சகஜ நிலைக்கு வந்து கொண்டுள்ளது.
தனிநபர் இடைவெளி
முகக்கவசம்
தனிநபர் இடைவெளி, மாஸ்க் அணிவதை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். நகரங்கள், கிராமங்களில் நமது சகோதரிகள் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான மாஸ்க்குகளை (முகக்கவசம்) தயாரித்து வருகின்றனர்.
மதுரையில் சலூன் கடை வைத்திருக்கும் மோகன் என்பவர், தனது மகளின் கல்விக்காக வைத்திருந்த ரூ.5 லட்சத்தை ஏழைகளுக்காக செலவிட்டார். தனது வருமானம் முழுவதையும் மக்களுக்காக செலவிட்ட அவருக்கு பாராட்டுக்கள். இச்சூழலில் கல்வி கற்பித்தலில் ஆசிரியர்கள் மாணவர்கள் புதிய முறையை கண்டுபிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *