செய்திகள்

மதுரை கள்ளழகர் கோவிலில் குடமுழுக்கு: லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி கோலாகலம்

மதுரை, நவ. 23–

மதுரை கள்ளழகர் கோவிலில் இன்று நடைபெற்ற கோலாகலமான ராஜகோபுர குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மதுரை அருகே அழகர்கோவிலில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோயில் உள்ளது. அங்கு கடந்த 2011-ம் ஆண்டு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. அதற்காக கள்ளழகர் கோயிலில் ரூ.2 கோடியில் ராஜகோபுர திருப்பணிகள் நிறைவு பெற்றன.

இதையொட்டி நேற்று முன்தினம் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டப வளாகத்தில் யாகசாலை பூஜைகளுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது. நேற்றும் 2-வது நாளாக 40 பட்டர்கள் கொண்ட குழுவினர், ஒரே நேரத்தில் 8 யாக குண்டங்களில் வேத மந்திரங்களுடன் யாக பூஜைகள் நடத்தினர்.

ராஜகோபுர கலசத்தில் புனிதநீர்

இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது. முன்னதாக யாகசாலையில் இருந்து தீர்த்த கலசங்கள் எடுத்துச் செல்லப்பட்டு, ராஜகோபுர கும்பங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டது. மேலும் இந்த விழாவையொட்டி கள்ளழகர் கோயில் ராஜகோபுரம் 18-ம் படிகளுக்கு மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 15 இடங்களில் சுழல் கருவி மூலம் பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. அத்துடன் ஹெலிகாப்டர் மூலம் கோபுரங்களிலும், பக்தர்கள் மீதும் பல வண்ண பூக்கள் தூவப்பட்டது.

பக்தர்கள் அன்னதானம் சாப்பிடவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழாவையொட்டி கள்ளழகர் கோவில், ராஜகோபுரம், 18-ம் படிகளுக்கு மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு கோவில் வளாகம் முழுவதும் மின்னொளியில் ஜொலித்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டதால் போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *