செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ். இடங்கள்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, ஜூலை.2-

மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கைக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது என்றும், கட்டிட பணி தொடங்காத போதும் தமிழ்நாடு அரசு புதிய ஏற்பாடு செய்ய ஆலோசனை நடத்தி வருவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் பசுமை சைதை திட்டம் 5வது ஆண்டு தொடக்க நிகழ்ச்சியில், குழந்தைகளின் பெயரில் மரக்கன்று நடும் விழாவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி 28ந்தேதி எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என மத்திய அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. 2018 ம் ஆண்டு ஜூன் மாதம் 18ந்தேதி எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமையும் என இடம் தெரிவு செய்யப்பட்டு, டிசம்பர் 17ந்தேதி மத்திய அரசு சார்பில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், மதுரை தோப்பூர் பகுதியில் ரூ.1,264 கோடி செலவில் 750 படுக்கைகளுடன் 45 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது.

அதன்பிறகு 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ந்தேதி பிரதமர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். நவம்பர் 25ந்தேதி ரூ.15 கோடி செலவில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது.

அதற்காக தமிழக அரசு 224.24 ஏக்கர் நிலத்தை ஒப்படைத்தது. அதைத்தொடர்ந்து மருத்துவமனை கட்டுவதற்காக மத்திய அரசு ஜைக்கா நிதி நிறுவனத்துடன் 2021ம் ஆண்டு மார்ச் 26ந்தேதி ஒப்பந்தம் ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன் எய்ம்ஸ் மருத்துவமனை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கட்டுமான பணிகளை உடனே தொடங்க வேண்டும் எனவும் பிரதமருக்கு கடிதம் மூலம் தெரிவித்தார்.

இந்த நிலையில், கடந்த 4ந்தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து தமிழ்நாடு அரசுக்கு கடிதம் ஒன்று வந்தது. அதில், ‘நீங்கள் 150 மாணவர்களுக்கான சேர்க்கையை நடத்தி கொள்ளலாம். அவ்வாறு சேர்க்கை நடத்தும்போது, கல்லூரி இல்லாத பட்சத்தில், வேறு இடத்தில் வகுப்புகளை தொடங்கலாம். மாணவர்கள் 2 ஆண்டுகள் படித்து முடிக்கும்போது, எய்ம்ஸ் வளாகத்தில் கல்லூரி கட்டி முடிக்கப்படும். அதன்பிறகு மாணவர்களை இங்கு இடமாற்றம் செய்து கொள்ளலாம்,’ என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனவே, மதுரை, தேனி, சிவகங்கை மருத்துவக்கல்லூரிகளில் தலா 50 மாணவர்கள் என 150 மாணவர்களை அனுமதித்து வகுப்புகளை தொடங்கலாமா அல்லது இதனுடன் தூத்துக்குடி, திருச்சி ஆகிய மருத்துவக்கல்லூரியையும் சேர்த்து, 5 மருத்துவக்கல்லூரியில் தலா 30 என மாணவர்கள் சேர்க்கையை நடத்தலாமா, என்பது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடந்து கொண்டு இருக்கிறது. இது குறித்து அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *