சென்னை, ஜூன் 17–
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய பாஜகவின் மாநில நிர்வாகி எஸ்.ஜி.சூர்யாவை மதுரை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை பெண்ணாடம் பேரூராட்சி 12வது வார்டு உறுப்பினர் விஸ்வநாதன் மலம் கலந்த நீரில் தூய்மை பணியாளரை கட்டாயப்படுத்தி வேலை செய்ய சொன்னதாகவும், அதனால்
ஒவ்வாமை ஏற்பட்டு அவர் இறந்துவிட்டதாக பாஜக மாநிலச் செயலாளராக இருக்கும் எஸ்.ஜி. சூர்யா என்பவர், தன்னுடைய டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் கடந்த 7 ந் தேதி முதல் பதிவிட்டு வந்தார்.
மேலும், சம்பந்தப்பட்ட தொழிலாளி பட்டியலினத்தைச் சார்ந்தவர் எனவும், இதனால் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஒருவித பதட்டமும் அச்சமும் ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தார். இதனைக் கண்டு கொள்ளாமல் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கள்ள மௌனம் காக்கிறார் எனவும் எஸ்.ஜி. சூர்யா பதிவிட்டு வந்துள்ளார்.
அவதூறால் கைது
எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 12ஆம் தேதி, மதுரை மாநகர காவல் ஆணையரிடம் மதுரை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் புகார்
அளிக்கப்பட்டது. அந்த புகாரில் , ‘மதுரையில் பெண்ணாடம் என்ற பேரூராட்சியே கிடையாது. விஸ்வநாத் என்ற கவுன்சிலரும் கிடையாது. அப்படி எந்தவொரு சம்பவமும் நடைபெறாத போது வதந்தியைக் கிளப்பி, சமூக பதட்டத்தை ஏற்படுத்திச் சாதி ரீதியான மோதலை தூண்டுவதோடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மீதும் அவதூறு செய்திகளை பரப்பும் பாஜக நிர்வாகியான எஸ்.ஜி.சூர்யா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது.
அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்துள்ள மதுரை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர், சென்னை தியாகராய நகரில் வைத்து எஸ்.ஜி. சூர்யாவை நேற்றிவு கைது செய்தனர். இதையடுத்து சென்னையிலிருந்து இரவோடு இரவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மதுரைக்கு அழைத்துச் சென்றனர். இன்று காலை மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.