செய்திகள்

மதுரை உலக தமிழ்சங்கத்திற்கு ஏராளமான திட்டங்களை வழங்கிய தமிழ் வளர்ச்சி துறை

Spread the love

மதுரை, ஜன. 14

இந்த தமிழர் திருநாளில் தமிழ்மொழி வளர்ச்சியில் தமிழர்கள் பெருமைப்படும் வண்ணம் மதுரை உலக தமிழ் சங்கத்திற்கு தமிழ் வளர்ச்சி துறை ஏராளமான திட்டங்களை வழங்கி உள்ளது என்று தமிழ் வளர்ச்சிதுறை இயக்குநர் விஜயராகவன் கூறினார்.

மதுரை உலக தமிழ்ச்சங்கம் தொடங்க 1982 ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற 5 வது உலக தமிழ்ச் சங்க மாநாட்டில் அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். சங்கம் வளர்த்த மதுரையில் உலக தமிழ்ச் சங்கம் நிறுவப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து 1986 ம் ஆண்டு சட்டசபையில் எம்.ஜி.ஆர். மதுரை உலக தமிழ்ச் சங்கம் அமைப்பதற்கான அரசு ஆணையை வெளியிட்டார். பின்பு தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் காரணமாக அது தொடங்கப்படவில்ல. அதன் பின்பு 2012 ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் கட்டிட பணிகள் தொடங்கப்பட்டு, 2016 ம் ஆண்டு ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த 2012 2014 இடைவெளியில் 4 ஆண்டுகள் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டது. மேலும் 2012 ம் ஆண்டு மதுரை உலகத் தமிழ்சங்கம் தொடங்கப்பட்டதிலிருந்து இன்று வரை தமிழ் மொழிவளர்ச்சிக்கும், தமிழின் பெருமையினை உலகிற்கு எடுத்துச் சொல்லவும் ஏராளமான திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக பூர்வ குடி மக்களான தமிழ் மக்கள் காலப்போக்கில் பிழைப்புக்காக உலகின் பல நாடுகளில் வசிக்கின்றனர். அதிலும் குறிப்பாக கனடா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, இங்கிலாந்து மற்றும் அரபு நாடுகளான துபாய், குவைத் போன்ற 15 க்கும் மேற்பட்ட நாடுகளில் கனிசமான அளவில் வசிக்கின்றனர்.

இவர்களின் தமிழகம் மற்றும் தமிழ்மொழி தொடர்பு விடுபடாமல் இருப்பதற்காக அனைத்து நாடுகளில் உள்ள தமிழ் அறிஞர்களின் சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுத்து வருடந்தோறும் மதுரை உலகதமிழ்சங்கத்தில் வைத்து விருது வழங்கப்படுகிறது. அயல்நாட்டு தமிழ் நூல்களையும் அங்கீகரித்து அந்த படைப்பாளிகள் மதுரை உலக தமிழ்சங்கத்தால் கவுரவிக்கப்படுகிறார்கள்.

மேலும் அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு சிகாகோ தமிழ் மாநாட்டில் ரூ.1 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு 2 ஆண்டுக்கு ஒரு முறை தமிழ் அமைப்புகள் ஒருங்கிணைந்து தமிழ் அமைப்பாளர்கள் மாநாடு இந்த 2020 ம் ஆண்டிலிருந்து நடத்தப்பட இருக்கிறது.

மேலும் மதுரை உலக தமிழ்ச் சங்கத்தில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் தமிழ்க்கூடல் எனும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சி தமிழ் மொழியின் இலக்கணம், இலக்கியத்தை செழுமைப்படுத்தவும், இன்றைய இளைஞர்கள் பண்டைய தமிழ் இலக்கியத்தை பற்றி தெரிந்து கொள்ளவும் நடத்தப்படுகிறது.

இந்த தமிழ்க்கூடல் நிகழ்ச்சியில் தமிழ் மொழியில் புலமைப்பெற்ற அறிஞர்கள் சொற்பொழிவு ஆற்றுகிறார்கள். இந்த நிகழ்ச்சி 50 வாரங்கள் கடந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் தமிழ் இசை மாநாடு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள நலிந்த தமிழ் அறிஞர்கள் மற்றும் நூல் வெ ளியிட முடியாமல் இருக்கும் தமிழ் அறிஞர்களின் தகுதியுள்ள படைப்புகளை நூல் அரங்கேற்றம் நடத்த மதுரை உலகத் தமிழ்சங்கம் உதவி வருகிறது. தற்போது மதுரை உலக தமிழ்ச் சங்க இயக்குநராக அன்புசெழியன் பொறுப்பேற்று சிறப்பாக பணிகளை செய்து வருகிறார். மேலும் வரும் நாட்களில் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் தமிழை செழுமைப் படுத்தவும் பல புதிய திட்டங்களை தமிழ் வளர்ச்சித்துறை செயல்படுத்த இருப்பதாக இயக்குனர் விஜயராகவன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *