செய்திகள்

மதுரையில் 2–ந்தேதி மோடி பங்கேற்கும் பிரச்சார பொதுக்கூட்ட மேடை அமைக்க கால்கோள் விழா

மதுரை, மார்ச் 27–

மதுரையில் பிரதமர் மோடி 2–ந்தேதி பங்கேற்கும் பிரச்சார பொதுக்கூட்ட மேடைக்கான கால்கோள் நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் மற்றும் பாரதீய ஜனதா நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சார பணிகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அண்ணா தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் பங்கேற்கும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஏப்ரல் 2–ந்தேதி மதுரை பாண்டிக்கோவில் சுற்றுவழிச்சாலையில் உள்ள அம்மா திடலில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அண்ணா தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானத்தில் மதுரை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் பொதுக் கூட்டம் நடைபெறும் அம்மா திடலுக்கு வருகிறார். அங்கு மதுரை மற்றும் மதுரையைச் சுற்றியிருக்கும் மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அண்ணா தி.மு.க., பாரதீய ஜனதா மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்கிறார். அதன் பின்னர் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டரில் நாகர்கோவில் செல்கிறார்.

தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மதுரை வருகைதர உள்ளதையடுத்து, பொதுக் கூட்டம் நடைபெறும் அம்மா திடலில் அண்ணா தி.மு.க. மற்றும் பாரதீய ஜனதா நிர்வாகிகளுடன் நேற்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். இதில் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங், தமிழக அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பகுதி, பொதுமக்கள் அமரும் பகுதி, ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கும் பகுதி ஆகியவற்றுக்கான இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனையடுத்து இன்று காலை பிரச்சார மேடைக்கான கால்கோள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அண்ணா தி.மு.க. அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ மற்றும் பாரதீய ஜனதா நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடி பிரச்சாரத்திற்கு வர உள்ளதால், சுற்று மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான அண்ணா தி.மு.க., பாரதீய ஜனதா தொண்டர்கள், பொதுமக்கள் வருவார்கள் என்பதால், அதற்கு ஏற்றவாறு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *