சென்னை, ஜூலை.13-
மதுரையில் வருகிற 15-ந்தேதி அன்று கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட கடித வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நூற்றாண்டு நாயகர் கருணாநிதிக்கு தி.மு.க.வின் சார்பிலும், திராவிட மாடல் அரசின் சார்பிலும் ஆண்டு முழுவதும் சிறப்புகள் சேர்க்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முதலமைச்சர் என்ற பொறுப்பில் உள்ள உங்களில் ஒருவனான நான் மிக சிறப்போடும், மக்களுக்குப் பயனளிக்கும் வகையிலும் கொண்டாட வேண்டும் என்ற உறுதியை மனதில் ஏற்றுக்கொண்டு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறேன்.
6 தளங்களில்…
தி.மு.க. தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி கருணாநிதி நூற்றாண்டை, அவரைப் போலவே மக்களுக்குப் பயனுள்ள திட்டங்களாக கொண்டாடி கொண்டிருக்கிறது. எதிர்கால தலைமுறைக்கும் வழிகாட்டும் கருணாநிதியின் புகழ் போற்றும் வகையில் ஜூலை 15-ந்தேதி தமிழ் நகராம் மாமதுரையில் உலகத் தரத்திலான கருணாநிதி நூற்றாண்டு நூலகத்தை உங்களில் ஒருவனான நான் திறந்து வைக்க இருக்கிறேன்.
கலைஞர் நூலகத்தில் கலை இலக்கியம், அறிவியல் தொழில் நுட்பம் சார்ந்த நூல்கள் என சுமார் 3.30 லட்சம் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் அடித்தளம், தரைத்தளம், அதனுடன் 6 தளங்களைக் கொண்டு ரூ.120 கோடியே 75 லட்ச ரூபாய் செலவில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. அடித்தளத்தில் வாகன நிறுத்துமிடம், செய்தி-நாளிதழ் சேமிப்பு, நூல் கட்டும் பிரிவு அமைந்துள்ளன. தரைத்தளத்தில் கலைக்கூடம், மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவு, மாநாட்டு கூடம், ஓய்வறை, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, பல்வகை பயன்பாட்டு அரங்கம், உறுப்பினர் சேர்க்கை பிரிவு உள்ளிட்டவை அமைந்துள்ளன.
முதல் தளத்தில் கருணாநிதி பகுதி, குழந்தைகள் நூலகம், நாளிதழ்கள், பருவ இதழ்கள் படிக்கும் பகுதி, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, அறிவியல் கருவிகள் பிரிவு உள்ளிட்டவை அமைந்துள்ளன. இரண்டாம் தளத்தில் தமிழ் நூல்கள் பிரிவு, கலைஞரின் நூல்களைக் கொண்ட பிரிவு எனச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. மூன்றாவது தளத்தில் ஆங்கில நூல்கள், ஆராய்ச்சி இதழ்கள் உள்ளன. நான்காவது தளத்தில் எதிர்காலக் கனவுகளுடன் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணாவர்கள் மற்றும் இளைஞர்களின் கனவு நனவாகும் வகையில் ஏறத்தாழ 30 ஆயிரம் புத்தகங்களுடனான பகுதி அமைக்கப்பட்டுள்ளது.
ஐந்தாவது தளத்தில் மின்னணு தொழில்நுட்பத்தின் வாயிலாக இன்றைய தலைமுறைக்குத் தேவையான அறிவுச் செல்வங்கள் அனைத்தையும் தருவதற்கான பகுதி உலகத் தரத்தில் அமைக்கப் பட்டுள்ளது. ஆறாவது தளத்தில் நூல் பகுப்பாய்வு, நூல் பட்டியல் தயாரித்தல் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் சார்ந்த பகுதிகள் இடம் பெற்றுள்ளன. உள்கட்டமைப்பு கள் கண்களை விரியச் செய்யும் வகையில் வியக்க வைக்கின்றன.
கருணாநிதி சென்னை கோட்டூர்புரத்தில் பார்த்துப் பார்த்து உருவாக்கிய அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மனதில் கொண்டு, மதுரை மாநகரில் கருணாநிதி நூற்றாண்டு நூலகத்தைச் சிறப்பாக அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தை நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எதிலும் வல்லவர் எனப்படும் எ.வ.வேலுவும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இளைஞர்களின் நெஞ்சமறிந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் முழுமையாக நிறைவேற்றி இருக்கிறார்கள்.
கல்வி வளர்ச்சி நாளான பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ந்தேதி மாலையில் நடைபெறும் கருணாநிதி நூற்றாண்டு விழாவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எச்.சி.எல் குழும நிறுவனர் ஷிவ் நாடார், எச்.சி.எல் குழும தலைவர் ரோஷினி நாடார் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
நம் உயிர்நிகர் தலைவர் கருணாநிதியின் புகழ் போற்றும் இன்னும் பல சின்னங்கள் அடுத்தடுத்து அமைய இருக்கின்றன. அத்தனையும் வடிவமைப்பில் எழில் மிகுந்தது. மக்களுக்கு என்றென்றும் பயன் தருவது, கருணாநிதியின் படைப்பாற்றலும் நிர்வாகத் திறனும் போலவே நிலைத்தப் புகழைப் பெறக்கூடியது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.