சென்னை, ஜூலை 31–
தமிழகத்தில் நேற்று 9 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவானது. மதுரையில் அதிகபட்சமாக 108 டிகிரி பாரன்ஹீட் பதிவானது.
இதுகுறித்து தமிழ்நாடு வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பரவலாக பெய்த பருவமழை ஓரிரு நாட்களாக குறைந்துள்ளது.
இதனால் பல மாவட்டங்களில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்தது. அதன்படி மாநிலம் முழுதும் பெரும்பாலான இடங்களில் நேற்று வெயிலின் தாக்கம் அதிகரித்தது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 42 டிகிரி செல்ஷியஸ் அதாவது 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், பரங்கிப்பேட்டை, புதுச்சேரி 38 டிகிரி செல்ஷியஸ்; கரூர் பரமத்தி நாகை திருச்சி 39 டிகிரி செல்ஷியஸ்; மதுரை 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. 9 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவானது. நேற்று காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் 1 செ.மீ. மழை பதிவானது.
தமிழகம், புதுச்சேரியில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் சில இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. பல பகுதிகளில் இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும். அதிகபட்சம் 40 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் பதிவாகும். சென்னையில் 38 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் நிலவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.