செய்திகள்

மதுரையில் விஷவாயு தாக்கி 3 ஊழியர்கள் பலி

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது பரிதாபம்

ஒப்பந்ததாரர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு

மதுரை, ஏப். 22–

மதுரையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட போது விஷவாயு தாக்கி 3 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக ஒப்பந்த நிறுவனத்தை சேர்ந்த 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை பழங்காநத்தம் நேரு நகர் கந்தசாமி தெருவில் உள்ள வீடுகளில் வெளியேறும் கழிவுநீர் அங்குள்ள பெரிய தொட்டியில் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து மின்மோட்டார் மூலம் வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

அந்த கழிவுநீர் தொட்டியில் இருக்கும் மின் மோட்டார் கடந்த 2 நாட்களாக இயங்கவில்லை. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து மாநகராட்சி சார்பில் அந்த பணியை ஒப்பந்தத்திற்கு எடுத்த தனியார் நிறுவனம் சார்பில் ஊழியர்கள் மோட்டாரை பழுதுபார்க்கும் பணியை கடந்த 2 நாட்களாக செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு மாடக்குளத்தை சேர்ந்த சிவக்குமார் (வயது 45), மின்மோட்டாரை பழுது பார்த்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் தொட்டிக்குள் தவறி விழுந்தார். தொடர்ந்து அவர் சத்தம் போட கழிவு நீர் தொட்டிக்கு வெளியே இருந்த மாடக்குளம் சரவணன் (32), அலங்காநல்லூர் லட்சுமணன் (31) ஆகியோர் அவரை காப்பாற்ற தொட்டிக்குள் இறங்கினர். சிவக்குமாரை காப்பாற்ற முயன்ற போது அவர்கள் 2 பேரும் தொட்டிக்குள் தவறி விழுந்தனர். அவர்களும் அலறினர்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து அங்கு வந்தனர். உடனே இது குறித்து அவர்கள் திடீர்நகர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு அதிகாரி பாலமுருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். விஷவாயு அபாயம் இருந்ததால் அவர்கள் கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்த 3 பேரையும் மீட்கும் பணியில் கவனமாக ஈடுபட்டனர். மிகவும் சிரமப்பட்டு சுமார் 30 அடி ஆழத்தில் இறங்கி மீட்கும் பணியில் ஈடுபட்ட போது ஊழியர்கள் 3 பேரும் இறந்த நிலையில் கிடந்தனர். 3 பேர்களின் உடல்களையும் தீயணைப்புத் துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸ் துணை கமிஷனர் தங்கத்துரை மற்றும் எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்திற்கு மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், மாநகர காவல்துறை துணை ஆணையர் தங்கத்துரை ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

இது குறித்து விஜிஆர் என்ற தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் ஆனந்த், ஊழியர்கள் ரமேஷ், லோகநாதன் ஆகியோர் மீது எம்.எஸ் காலணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.

3 ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் மதுரை மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகராட்சியில் கழிவு நீர் தொட்டி பழுதுநீக்கும் மற்றும் சீரமைக்கும் பணிகளின் போது பணியாளர்களுக்கு சுவாச கருவி போன்ற உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காதது தான் இவர்களின் மரணத்துக்கு காரணம் என அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர். உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டு தொகை மற்றும் குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.