மதுரை, பிப்.18–
சென்னையை போலவே மதுரையிலும் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான திட்ட அறிக்கையை தயார் செய்யும் பணியை மெட்ரோ நிர்வாகம் தொடங்கியது.
சென்னைக்கு அடுத்த கட்டமாக கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்து அதற்கான திட்டபணிகளை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
மதுரையில் ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 31 கிலோ மீட்டர் தூரம் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் மதுரையில் மெட்ரோ ரெயில் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கியது. விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான டெண்டர் கோரியது சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம். ரூ.3 கோடி செலவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. 120 நாட்களில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும் என டெண்டரில் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.