வங்கக்கடலில் உருவான புயல் மண்டலம் சென்னையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. சென்னையைச் சுற்றியுள்ள ஊர்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் ஒப்புதல் அளித்தது .ஏற்கனவே மழையால் பயந்து வாழ்ந்து கொண்டிருந்த சென்னை மக்களுக்கு இந்த அறிவிப்பு மேலும் வயிற்றில் புளியைக் கரைத்தது. நான்கு நாட்களுக்கு மேல் மழை நீடிக்கும் என்பதால் தாழ்வான பகுதியில் இருந்த மக்கள் எல்லாம் வேறு இடத்திற்கு புலம்பெயர்ந்தார்கள். இருசக்கர வாகனங்களையும் கார்களையும் பாலத்தின் மேல் நிறுத்தினார்கள்
” இங்கே எல்லாம் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று போக்குவரத்துக் காவலர்கள் பாலத்தில் இருந்த வண்டிகளுக்கு அபராதம் விதித்தார்கள். எப்படியும் சென்னை மூழ்கி போகும் ஊரைக் காலி பண்ணிட வேண்டியதுதான் என்று ஒரு சிலர் சென்னையை விட்டு வெளியூருக்கு நகர்ந்தார்கள்.
நான்கு நாட்களுக்கு கல்லூரி பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவிப்பை அறிவித்தது கல்வித்துறை.
” ரொம்ப சந்தோசம் நாலு நாளைக்கு வீட்டிலேயே இருக்கலாம் என்று பள்ளி கல்லூரி செல்லும் பிள்ளைகள் சந்தோஷம் அடைந்தார்கள். கன மழை பொழியும் வீதிகள் எல்லாம் தண்ணீர் தேங்கி நிற்கும் என்று நினைத்த மனிதர்கள் சமையல் சாமான்களை வாங்கி வீட்டில் நிரப்பினார்கள் இருப்பவர்கள் வாங்கினார்கள். இல்லாதவர்கள் ஏங்கினார்கள். வெயிலைச் சுமந்து கொண்டிருந்த வெளி இப்போது குளிரைச் சுமந்து நின்றது. சின்னச் சின்னதாய் தூறல் விழ ஆரம்பித்து பெருமழை பெய்தது. வீதிகள் எல்லாம் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது வீட்டில் முடங்கிக் கிடந்தார்கள் மக்கள். கல்லூரி பள்ளிகளுக்கு விடுமுறை மாணவர்களுக்கு சந்தோஷம். இயல்புநிலை பாதிக்கப்பட்டு குளிர் நிலைக்கு சென்றது சென்னையும் அதன் சுற்றி உள்ள ஊர்களும்.
சென்னையில் சிக்கி இருந்தான் ராஜா. மதுரையில் இருக்கும் தன் தங்கை மகனுக்கு போன் செய்து விஷயத்தைக் கேட்டான்.
“மாப்பிள்ள மதுரையில மழையா?
” இல்ல மாமா இங்க மழை இல்ல.
” உங்களுக்கு ஸ்கூல் லீவு விடலையா ?
” லீவு விடல .இங்க மழை பேஞ்சா தான் லீவு விடுவாங்க. எங்களுக்கும் லீவு விடணும்னா இங்க மழை பெய்யணும் இங்க மழையே பெய்ய மாட்டேங்குது மாமா என்று வருத்தப்பட்டு சொன்னான் மனோஜ்.
“அடப்பாவி சென்னை நகரம் தண்ணில தத்தளிச்சு கிடக்குது. உனக்கு லீவுக்காக மழை பெய்யணுமா? என்று நினைத்தான் ராஜா.
“மாமா சென்னை மழைய மதுரை பக்கம் கொஞ்சம் வரச் சொல்லுங்க எங்களுக்கும் லீவு வேணும்” என்றான் மனோஜும் அவன் நண்பர்களும்.
“சுரீர் ” என்று வெயில் அடித்துக் கொண்டிருந்தது, மதுரையில்.