போஸ்டர் செய்தி

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வழக்கு: நிலை அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

மதுரை,நவ.8–

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய சுகாதாரத்துறை செயலருக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து அதற்கான பணிகளை தொடங்கி உள்ளது. இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதாக கூறி ஐகோர்ட் மதுரை கிளையில் ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

பல்வேறு மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. ஆனால், மதுரை தோப்பூரில் இதுவரை எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை. எனவே தமிழகத்தில் மதுரை மாவட்டம், தோப்பூரில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது என்று அரசிதழில் மத்திய அரசு வெளியிட வேண்டும்.

மேலும் அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் பெற வேண்டும். கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தத்தை விரைவுபடுத்தவும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான நிதியை உடனடியாக ஒதுக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கூறியிருந்தார்.

இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, இந்த பிரச்சினை குறித்து விளக்கம் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மதுரையில் தோப்பூரில்தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று உறுதி அளித்தார்.

இதையடுத்து, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து டிசம்பர் 6–-ம் தேதி நிலை அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய சுகாதாரத்துறை செயலருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும்? எப்போது நிறைவடையும்? என்பதையும் அறிக்கையில் குறிப்பிடும்படி உத்தரவு பிறப்பித்து விசாரணையை ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *