மதுரை, ஜூலை 12–
மதுரையில் இருந்து அயோத்தி அழைத்து செல்வதாக கூறி 106 பேரிடம் போலி விமான டிக்கெட் கொடுத்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு கடந்தாண்டு திறக்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய சென்னை, சேலம், மதுரை உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்கள் விடப்பட்டுள்ளன. அதேபோல், சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவையும் இருக்கின்றது.
ஆனால், மதுரையில் இருந்து அயோத்திக்கு விமானத்தில் அழைத்து செல்வதாக ஒரு சிலர் மக்களிடம் பணம் வசூலித்துள்ளனர். விமான டிக்கெட் கட்டணமாக அவர்கள் வசூலித்த பணத்தில் அவர்களிடம் இண்டிகோ நிறுவனத்தின் டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த விமான டிக்கெட்டுடன் 106 பேர் மதுரை விமான நிலையம் வந்துள்ளனர். அப்போதுதான் அவர்கள் வைத்திருந்தது போலி டிக்கெட் என்பது தெரியவந்தது.
அயோத்திக்கு செல்ல முன்பதிவு செய்யப்படவில்லை என 106 பேரிடமும் இண்டிகோ நிர்வாகம் கூறியுள்ளது. 106 பேரிடம் பணம் வசூல் செய்து போலி விமான டிக்கெட்டுகளை கொடுத்து மோசடியில் ஈடுபட்டதால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகாரளித்துள்ளனர்.