செங்கல்பட்டு, அக்.18–
மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த பழுதடைந்த நடைமேம்பாலம் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே மோச்சேரி கிராமத்திற்கு நடைமேம்பாலம் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இது முழுவதும் சேதமடைந்து உள்ளதால் அதை அகற்றக்கோரி கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றைய தினம் முதல் நடைமேம்பாலத்தை அகற்றும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டனர்.
நேற்று காலை முதல் ஒரு பக்கவாட்டு மேம்பாலத்தை அகற்றினர். பிற்பகலில் அது முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கவர்னர் சாலை மார்கமாக பாண்டிச்சேரியிலிருந்து சென்னை வருவதால் அந்த பணி நிறுத்தப்பட்டு மாலை 6 மணிக்கு மேல் பணி தொடங்கி 11 மணிவரை நடைபெற்றது. இதனால் நேற்று பகல் மற்றும் இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்துக்கு நெரிசல் காணப்பட்டது. இன்றைய தினம் நடைமேம்பாலம் முழுமையாக அகற்றப்பட்டுள்ளதால் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்துக்கு சீரானது.