செய்திகள்

மதுராந்தகத்தில் பிரச்சார பொதுக்கூட்டம் மக்கள் எங்கள் பக்கம்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

Makkal Kural Official

மதுராந்தகம், மார்ச் 30–-

மக்கள் எங்கள் பக்கம்; மக்களுடன் தான் எங்கள் கூட்டணி என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அண்ணா தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று அண்ணா தி.மு.க.பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதி அண்ணா தி.மு.க. வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.

இதில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசியதாவது:-–

தேர்தல் என்ற போரிலே எதிரிகளை ஓட ஓட விரட்டி வெற்றிக்கொடியை நாட்டவேண்டும். எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் குறிப்பாக தி.மு.க.வில் அங்கம் வகிக்கும் கட்சிகள் கூட்டணி வைக்க ஒரு மாதம் பேசினார்கள்.

மக்களுடன் கூட்டணி

வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு ஒரு நாளைக்கு முன்புதான் காங்கிரஸ் வேட்பாளரை அறிவித்தார்கள். அந்த அளவுக்குதான் கூட்டணி இருந்தது. அண்ணா தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணியை அமைத்தோம். வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டோம். தி.மு.க. கூட்டணி வலுவாக இருப்பதாக சிலர் சொல்கிறார்கள். இங்குள்ள மக்கள் வெள்ளத்தை பார்த்து சொல்லுங்கள். இதுதான் அண்ணா தி.மு.க. கூட்டணியின் பலம். கிராமத்தில் சொல்வார்கள் விளையும் பயிர் முளையிலே தெரியும். அதேபோல் நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்த மக்களின் வெள்ளமே வெற்றி. மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள். மக்களோடு நாம் கூட்டணி வைத்துள்ளோம். அண்ணா தி.மு.க. வலுவான இயக்கம்.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளில் அண்ணா தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். விளவங்கோடு இடைத்தேர்தலிலும் வெற்றி பெறுவோம். அண்ணா தி.மு.க. பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது. முத்து முத்தான திட்டங்களை அண்ணா தி.மு.க. அரசாங்கம் வழங்கி இருக்கிறது.

தமிழ்நாட்டில் அண்ணா தி.மு.க. வலுவான கட்சியாக இருக்கிறது. பாரதீய ஜனதாவுடன் கூட்டணியில் இருந்தோம். இப்போது விலகிவிட்டோம். மு.க.ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் அண்ணா தி.மு.க. இன்னும் பாரதீய ஜனதாவுடன் கள்ளத்தொடர்பில் இருப்பதாக சொல்கிறார்கள். நாங்கள் கள்ளத்தொடர்பு வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த பழக்கம் உங்களுக்குதான் இருக்கிறது. கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியில் வந்ததற்கு உங்களுக்கு ஏன் பொறாமை வருகிறது. எரிச்சல் ஏற்படுகிறது.

தி.மு.க.வுக்கு

தோல்வி பயம்

எங்கள் கட்சிக்கும், உங்கள் கட்சிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. தொண்டர்கள், நிர்வாகிகள் விரும்பினால் கூட்டணி வைப்போம். இல்லையென்றால் வெளியேறுவோம். அது எங்களின் விருப்பம். தி.மு.க.வுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால்தான் அப்பாவும், மகனும் இப்படி பேசுகிறார்கள்.

மு.க.ஸ்டாலின் வந்த பாதை வேறு. நான் வந்த பாதை வேறு. நான் கட்சிக்கு உழைத்தேன். தலைமைக்கு விசுவாசமாக இருந்தேன். எங்கள் நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுச்செயலாளராக என்னை அழகு பார்த்தார்கள். 4 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை கொடுத்தோம். சாதாரண தொண்டன், கிளைச் செயலாளர், பொதுச்செயலாளராக முடியுமா? முதல்-அமைச்சர் ஆக முடியுமா?.

கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை குடும்பமாக பார்க்கும் நீங்கள், அதில் இருந்து ஒருவரை தலைவராகவும், முதலமைச்சராக அறிவியுங்கள் பார்ப்போம்.

போதைப்பொருள், கஞ்சா இல்லாத இடமே கிடையாது. ஏற்கனவே இருந்த டி.ஜி.பி. இதனை கட்டுப்படுத்தாமல் ஓய்வு பெற்று சென்றார். எந்த கட்சியிலும் இல்லாத அயலக அணியை தி.மு.க.வில் அமைத்தார்கள். அதில் உள்ளவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதை கண்டறிந்துள்ளனர். இப்படிப்பட்ட மோசமான அரசாங்கம் இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. இதற்கு முடிவு கட்ட இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *