செய்திகள்

மதுரவாயல் பைபாஸ் சாலையில் கார்கள் நேருக்கு நேர் மோதல்: தந்தை, கர்ப்பிணி மகள் பலி

Makkal Kural Official

சென்னை, ஜூன் 24–

தாம்பரம் – மதுரவாயல் புறவழிச்சாலை அனகாபுத்தூர் அருகே மதுபோதையில் எதிர்திசையில் தவறாக வந்த கார் நேருக்கு நேர் மற்றொரு கார் மீது மோதிய விபத்தில் தந்தையும், கர்ப்பிணி மகளும் உயிரிழந்தனர்.

தாயும், டிரைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னை அனகாபுத்தூர் மதுரவாயல் புறவழிச்சாலையில் நேற்று இரவு, போரூரில் இருந்து தாம்பரம் நோக்கி வாடகை கார் மூலம் பத்மநாபன் என்பவர் அவருடைய மனைவி, கர்ப்பிணி மகளுடன் பயணம் செய்தார்.

காரை மணிகண்டன் என்ற டிரைவர் ஓட்டி வந்தார். மணிகண்டன் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. அப்போது அவர் என்ன செய்கிறோம் என தெரியாமல் எதிர்திசையில் தவறான பாதையில் காரை ஓட்டிச் சென்றதாக சொல்லப்படுகிறது.

அப்போது அவ்வழியாக வந்த கார் மீது மணிகண்டன் ஓட்டி வந்த கார் மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த அனைவரும் பலத்த காயமடைந்தனர். இதில் பலத்த காயமடைந்த பத்மநாபன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்தார். அவரது மகள் 3 மாத கர்ப்பிணி தீபிகா (23), மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த பத்மநாபன் மனைவி மற்றும் கார் ஓட்டுனர் இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்த முதற்கட்ட விசாரணையில் போக்குவரத்து விதிகளை மீறி மணிகண்டன் குடிபோதையில் வாகனம் ஊட்டி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *