புதுடெல்லி, பிப்.2–
மதுரவாயல் – – துறைமுகம் ஈரடுக்கு உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிக்கு மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.சென்னையின் கடும் போக்குவரத்து நெரிசலை கடந்து சரக்குகளை ஏற்றிவரும் வாகனங்கள் சென்னை துறைமுகத்துக்கு செல்வதில் பல ஆண்டுகளாக சிரமம் இருந்து வந்தது. இதனால் சரக்கு வாகனங்கள் சென்னை துறைமுகத்துக்கு செல்லாமல் ஆந்திராவில் உள்ள துறைமுகங்களை நாட தொடங்கியதால் தமிழ்நாட்டிற்கான வருவாய் பாதிக்கப்பட்டது.
இதனை தவிர்க்க கடந்த 2010 ஆம் ஆண்டு அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு மதுரவாயல் முதல் எண்ணூர் துறைமுகம் வரை ரூ.1,815 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்தது. கடந்த 2009ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி ஆகியோரால் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. எந்தெந்த வழித்தடங்களில் பாலம் செல்ல வேண்டுமோ, அங்கெல்லாம் தூண்கள் அமைக்கப்பட்டன.
பொதுமக்களுக்கு
பாதிப்பு
இதனிடையே கூவம் ஆற்றில் தூண்கள் அமைப்பதால் சுற்றுச்சூழல் பிரச்சனை ஏற்படும் எனக்கூறி 2011 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு, எண்ணூர் – மதுரவாயல் மேம்பால திட்டத்தை கிடப்பில் போட்டது. திட்டம் கிடப்பில் போடப்பட்டதால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக எண்ணூர் – மதுரவாயல் மேம்பாலத்துக்காக அமைக்கப்பட்ட தூண்கள் நோட்டீஸ் ஒட்டுவதற்கும் விளம்பர போர்டுகள் வைப்பதற்குமே பயன்பட்டு வருகின்றன. சென்னையின் அடையாளமாகவே இந்த தூண்கள் மாறிவிட்டன. போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வந்த இந்த தூண்களின் மேல் எப்போது மேம்பாலம் வரும் என பொதுமக்கள் வழிமேல் விழி வைத்து காத்திருந்தனர்.
இந்த நிலையில் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்த பாதையில் இரட்டை மேம்பாலம் அமைக்கப்படும் என அறிவித்தார். இந்த திட்டத்திற்கு ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஒப்புதல் வழங்கியதை அடுத்து முதல்கட்ட தயாரிப்புப் பணிகளில் நெடுஞ்சாலைத் துறை ஈடுபட்டது. இந்த நிலையில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்த பின் இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த மே மாதம் கையெழுத்தானது. அதன்படி சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான ஈரடுக்கு உயர்மட்ட மேம்பால திட்டத்திற்கு கடலோர மண்டல மேலாண்மை அனுமதி வழங்க மத்திய அரசின் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல் வழங்கியது.
இதன்மூலம் விரைவாக சரக்குகள் வந்து சேர்ந்து சென்னை துறைமுகத்தின் திறன் 48 சதவீதம் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இது சிவானந்த சாலை முதல் கோயம்பேடு வரை ஈரடுக்கு மேம்பாலமாக அமைகிறது. ஒரு பாலத்தில் சரக்கு வாகனங்கள் மட்டும் செல்லும். மற்றொரு பாலத்தில் பொதுமக்களின் வாகனங்கள் செல்லும்.
மத்திய சுற்றுச்சூழல்
நிபுணர் குழு ஒப்புதல்இந்நிலையில் சென்னை – மதுரவாயல் – துறைமுகம் ஈரடுக்கு உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் குழு ஒப்புதல் வழங்கியது. 20.56 கிலோ மீட்ட தூரத்திற்கு 4 வழி சாலையாக சென்னை மதுரவாயல் உயர்மட்ட பாலம் அமைக்க நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ரூ.5 800 கோடியில் துறைமுகம் மதுரவாயல் பறக்கும் மேம்பால திட்டம் செயல்படுத்த உள்ளது.
உயர்மட்ட பாலத்திற்காக எழுப்பப்படும் பில்லர்களால் மழை மற்றும் சாதாரண காலங்களில் நீரோட்டத்திற்கு தடை ஏற்படக் கூடாது என்றும் பாலம் அமைக்க தற்காலிகமாக அமைக்கப்படும் கட்டமைப்பு பணிகள் முடிந்த ஒரு மாதத்திற்குள் அகற்றப்பட வேண்டும் என்றும் நிபந்தனை வைக்கப்பட்டுள்ளது. கட்டுமானத்தின் போது அகற்றப்படும் கழிவுகளை நீர்நிலையிலோ அல்லது அதற்கு அருகிலோ கொட்ட கூடாது என்றும் நிபந்தனை விதித்து இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கி மத்திய அரசுக்கு சுற்றுச்சூழல் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு அடுத்த 30 மாதத்திற்குள்முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.