தேர்வு முடிவை பார்க்காமலே மரணம் அடைந்த பரிதாபம்
சென்னை, மே 10–
மதுரவாயலில் லாரி மோதி 10-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுரவாயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவன் ஜீவா 10-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை மதுரவாயல் பாலத்தின் கீழே இரு சக்கர வாகனத்தில் வந்தபோது லாரி மோதி சம்பவ இடத்திலேயே மாணவன் ஜீவா உயிரிழந்தார்.
லாரியை ஓட்டி வந்த டிரைவர் சாலையிலேயே லாரியை நிறுத்திவிட்டு தலைமறைவானார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் தலைமறைவான லாரி டிரைவரையும் தேடி வருகின்றனர்.தேர்வு முடிவு வெளியான நிலையில், ரிசல்டை பார்க்கும் முன்பே மாணவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.